வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - தொழுகையில் குனூத்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
தொழுகையில் குனூத்
கேள்வி : அசாதாரண சூழ்நிலைகள் நிலவும் சந்தர்ப்பங்களில் அவற்றின் விளைவுகளிலிருந்து பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள ஐவேளை பர்ளுத் தொழுகைகளில் குனூத் ஓத ரஸுலுல்லாஹ்வின் ஸுன்னாவில் ஆதாரமுண்டா?
சுபஹ் தவிர மற்றைய பர்ளுத் தொழுகைகளில் குனூத் ஓதுவதினால் தொழுகையில் பாதிப்பு (முறிவு) நிகழாதா?
இக்குனூத்தின் போது ஒரு ஷாபிஈயை பின்பற்றித் தொழும் ஹனபியின் நிலை என்ன?
பதில் : நீங்கள் குறிப்பிட்டுள்ள குனூத் அமைப்பு இஸ்லாமிய சட்ட வழக்கில் குனூதுன்னவாஸில் என அழைக்கப்படுகிறது. கஷ்ட துன்பங்கள், அனர்தங்களின் போது ஓதப்படுகின்ற இந்தக் குனூத் சட்டபூர்வமானதென்பது இமாம்களின் கருத்தாகும். ஹனபியாக்கள், ஷாபியாக்கள் இரு தரப்பினரும் இக்கருத்தில் ஒத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இக்குனூத்தமைப்பு சட்ட ரீதியானதென்பதற்கு ஸுன்னாவிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
பனூஸுலைமெனும் கோத்திரத்தைச் சேர்ந்த ரிஃல்;, தக்வான், உஸையா என்ற பிரிவினர் தங்களுக்குப் போதனை செய்வதற்கு நபித் தோழர்களை அனுப்பி வைக்குமாறு நபியவர்களைக் கேட்டுக்கொண்டனர். நபியவர்களும் இக்கோத்திரத்தவரின் வேண்டுகோளை ஏற்று எழுபது ஸஹாபாக்களை அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் நயவஞ்சகர்களாகவிருந்த அவர்களோ நபித்தோழர்களைப் படுகொலை செய்து விட்டனர். இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள் இப்பிரிவினருக்கு எதிராகத் தொடர்ந்து ஒரு மாதகாலமாக ஐங்காலத் தொழுகைகளில் குனூத் ஓதினார்கள். பின்னால் நின்று தொழுதோர் அதற்கு ஆமீன் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (றழி), ஆதாரம்- புகாரி, அபூதாவூத், அஹ்மத்)
அபூஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கும் மேலும் ஒரு ஹதீஸ் கீழ் வருமாறு:
'ரஸுலுல்லாஹ் அவர்கள் ஒருவருக்கு சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரார்த்தனை செய்ய விரும்பினால் ருகூஉக்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.' (ஆதாரம்: அஹ்மத், புகாரி)
எனவே ஸுப்ஹுத் தொழுகையில் வழமையாக ஓதப்படுகின்ற குனூத் விடயத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள், நீங்கள் கேட்கும் குனூத்துன்னவாஸில் தொடர்பாக இல்லை என்பதைக் கருத்திற் கொள்ளவும்.
