வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்
கேள்வி : பெண்கள் பள்ளிவாயிலுக்குச் சென்று ஜும்ஆத் தொழுகை யிலும், கூட்டுத்தொழுகையிலும் கலந்து கொள்வது பற்றிய ஷரீஅத்தின் கண்ணோட்டம் என்ன?
பதில்: பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை கடமையானதல்ல என்பது ஏகோபித்த முடிவாகும். இவர்கள் ஜும்ஆவுக்குப் பதிலாக ளுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ஆயினும் ஒரு பெண் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றினால் அது செல்லுபடியாகும். இந்நிலையில் அவர் ளுஹர்த் தொழுகையை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபியவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிவாயிலுக்குச் சென்று ஜும்ஆத் தொழுகையில் பங்கு பற்றினார்கள்.
பெண்கள் பள்ளிவாயிலுக்கு வந்து ஐங்காலக் கூட்டுத் தொழுகை களிலும் கலந்துகொள்ள அனுமதியுண்டு. ஆனால் இச்சையைத் தூண்டக்கூடியவை, கவர்ச்சியான அலங்காரம் போன்றவற்றிலிருந்தும், வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு வருவதிலிருந்தும் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
'பெண்கள் பள்ளிவாயிலுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். ஆயினும் அவர்களுக்கு அவர்களது வீடுகளே (தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு) மிகவும் சிறந்ததாகும்' என நபியவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்.
அபூஹுரைறா (ரலி) அறிவிக்கும் ஒரு நபிமொழி கீழ்வருமாறு:
'அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை அல்லாஹ்வின் மாளிகைக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். அவர்கள் அங்கு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளாது செல்லட்டும்.' (ஆதாரம்-அஹ்மத், அபூதாவூத்)
பொதுவாக பெண்கள் வீடுகளில் தொழுவதே சிறந்ததாகும். இக்கருத்துக்கு ஆதாரமாக முஸ்னத் அஹ்மத், அத்தபரானி ஆகிய கிரந்தங்களில் காணப்படும் கீழ்வரும் ஹதீஸைக் குறிப்பிடலாம்;:
உம்மு ஹுமைத் அஸ்ஸாயிதிய்யா என்ற பெண்மணி நபிகளாரிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுடன் தொழ விரும்புகிறேன்' என்றார். அதற்கு நபியவர்கள் 'நீர் உமது வீட்டறையில் தொழுவது உமது சமூகத்தவரின் பள்ளிவாயிலில் தொழுவதை விடச் சிறந்தது. நீர் உமது சமூகத்தவரின் பள்ளிவாயிலில் தொழுவது பொதுப் பள்ளிவாயிலில் தொழுவதை விடச் சிறந்ததாகும்.' எனக் கூறினார்கள்.
