வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்
கேள்வி: ஜும்ஆத் தொழுகையில் இரண்டாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்தில் இமாம் இருக்கும் போது, தொழுகையில் வந்து சேர்ந்த ஒருவரின் நிலை என்ன? அவர் ஜும்ஆவுக்கு நிய்யத் வைத்து ளுஹர் தொழ வேண்டுமா? அல்லது ளுஹருக்கு நிய்யத் வைத்து ஜும்ஆ தொழுவதா? ஆதாரங்களுடன் விளக்கம் தருக.
பதில்: ஒருவர் ஜும்ஆத் தொழுகையில் முதல் ரக்அத்தைத் தவற விட்டபோதிலும், இரண்டாம் ரக்அத்தை அடைந்து கொண்டால் ஜும்ஆவை முழுமையாகப் பெற்றுக்கொண்டவராக கருதப்படுவார். எனவே அவர் தனது தொழுகையைப் பூரணப்படுத்துவதற்காக மேலும் ஒரு ரக்அத் மாத்திரம் தொழுதால் போதுமானதாகும். இதுவே பெரும்பாலான அறிஞர்களின் அபிப்பிராயமாகும். இக்கருத்துக்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்கள் காணப்படுகின்றன.
'ஒருவர் ஜும்ஆத் தொழுகையின் ஒரு ரக்அத்தை (இமாமுடன்) அடைந்து கொண்டால், அவர் அத்துடன் மற்றுமொரு ரக்அத்தைச் சேர்த்துக் கொள்ளட்டும். (அதனைக் கொண்டு) அவரது தொழுகை சம்பூரணமாகிவிடும்.' (நஸாஈ, இப்னு மாஜா, தாரகுத்னி, அறிவிப்பாளர், இப்னு உமர் (றழி)
'தொழுகையின் ஒரு ரக்கஅத்தைப் பெற்றுக்கொண்டவர் அதனை முழுமையாக அடைந்து கொண்டவராவார்.' (புகாரி, முஸ்லிம்)
ஆனால் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை விடக் குறைந்த அளவைப் பெற்றவர் (இரண்டாம் ரக்அத்தில் இமாம் ருகூஇலிருந்து எழுந்ததன் பின்னர் வந்து சேர்ந்து கொண்டவர்) ஜும்ஆத் தொழுகையை அடைந்து கொண்டவர் அல்ல. அவர் தனது தொழுகையை ளுஹர்த்தொழுகை என்ற அடிப்படையில் நான்கு ரக்கஅத்துக்களாகத் தொழ வேண்டும். நிய்யத்தைப் பொறுத்த வரையில் ஜும்ஆவுக்கு நிய்யத் வைத்தல் வேண்டும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) கூறுகின்றார்:
'எவர் ஜும்ஆவின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக்கொள்கின்றாரோ, அவர் மற்றுமொரு ரக்அத்தைச் சேர்த்துக்கொள்ளட்டும். எவருக்கு இரண்டு ரக்கஅத்துக்களும் தவறிப்போய்விடுகின்றனவோ, அவர் நான்கு ரக்கஅத்துகள் தொழட்டும்.' (அத்தபரானி)
இப்னு உமர் (றழி) அவர்களின் கருத்துப் பின்வருமாறு: 'நீர் ஜும்ஆவின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக் கொண்டால், அதனோடு மற்றுமொன்றைச் சேர்த்துக்கொள்வீராக. அவர்கள் (ஜும்ஆத் தொழும் ஜமாஅத்தினர்) இருப்பில் (அத்தஹிய்யாத்தில்) இருக்கும் போது நீர் அவர்களுடன் இணைந்து கொண்டால் நான்கு ரக்அத்துக்கள் தொழுவீராக' (அல்பைஹகி)
இதுவே, ஷாபிஈ, மாலிகி, ஹன்பலி மத்ஹபுகளின் கருத்தாகும்.
