வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஜும்ஆவுக்குரிய எண்ணிக்கை
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
ஜும்ஆவுக்குரிய எண்ணிக்கை
கேள்வி : ஜும்ஆ நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகளில் ஜும்ஆவுக்குக் குறைந்தது நாற்பது பேர் சமூகமளித்திருத்தல் வேண்டும் என்பதும் ஒன்றாகுமா? குறித்த தொகையினர் இல்லாதபோது ஜும்ஆத் தொழுகையுடன் லுஹர் தொழுகையையும் நிறைவேற்ற வேண்டுமா? விளக்கம் தேவை.
பதில்: ஜும்ஆ நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகளில், அது ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும். இதில் அறிஞர்கள் மத்தியில் அபிப்பிராயபேதம் இல்லை. தாரிக் இப்னு ஷிஹாப் (ரலி) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கீழ்வருமாறு அறிவிக்கிறார்: 'ஜும்ஆவானது ஒவ்வொரு முஸ்லிமும் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகும்.'
ஆயினும், ஜும்ஆ நிறைவேறுவதற்கு அவசியமான தொகையினர் விடயத்தில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. எண்ணிக்கையைக் குறிப்பிடுவதில் வித்தியாசமான பதினைந்து கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) தனது பத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்துக்களில் இரண்டு பேரைக் கொண்டும் ஜும்ஆ நிறைவேற்ற முடியும் என்பதே பலமானதாகக் கொள்ளப்பட முடிகிறது. 'இருவரும், அதற்கு மேற்பட்டோரும் ஒரு ஜமாஅத்தாகக் கொள்ளப்படும்' எனும் நபி மொழி இக்கருத்துக்குரிய தெளிவான ஆதாரமாகும். இமாம் ஷவ்கானி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: இருவரைக் கொண்டு ஏனைய தொழுகைகள் நிறைவேறும் என்பது இஜ்மாவான முடிவாகும். ஜும்ஆவும் ஒரு தொழுகையே. ஏனைய தொழுகைகளை விட்டும் முரண்படும் விதத்தில் அவற்றிற்கு இல்லாத ஒரு பிரத்தியேகமான சட்டம்-தக்க ஆதாரம் இல்லாத போது- இருத்தல் முடியாது. உண்மையில் ஜும்ஆவில், பிறதொழுகைகளில் கவனத்தில் கொள்ளப்படும் தொகையை விட அதிகமான ஓர் எண்ணிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை.
'ஜும்ஆவில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் தொகைபற்றிக் குறிப்பிடும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இல்லை' என இமாம் அப்துல் ஹக் கூறுகிறார். இக்கருத்தை இமாம் ஸுயூத்தியும் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தையே இமாம்களான அத்தபரி, அன்னகயீ, இப்னு ஹஸ்ம் போன்றோரும் கொண்டுள்ளனர்.
