வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - அல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
அல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்
கேள்வி: அல்குர்ஆனை ஓதி அதற்குக் கூலி வாங்க அனுமதி உண்டா? பூரண விளக்கம் தேவை.
பதில்: 'கூலிக்குக் குர்ஆனை ஓதுவதனால் இறந்தவருக்கோ அல்லது ஓதுபவருக்கோ எத்தகைய நன்மையும் கிட்ட முடியாது' என்கிறார்கள் ஹனபி மத்ஹபுடைய இமாம்கள். இதனை மஹ்மூத் இப்னு அஹ்மத் (ரஹ்) தனது 'ஷர்ஹுத் திராயா' வில் குறிப்பிடுகின்றார்.
இது பற்றிக் கூற வந்த இமாம் அல்-அய்னி (ரஹ்), 'கூலி எடுப்பவரும் கொடுப்பவரும் இருவருமே பாவிகள் என்றும் இன்று எம்மத்தியில் பரவலாக உள்ள, அல்குர்ஆனைக் கூலிக்கு ஓதும் முறையானது ஆகுமான ஒன்றல்ல என்றும் குறிப்பிடுகின்றார்.' (பார்க்க: பிதாயா ஷர்ஹுல் ஹிதாயா)
'இவ்வமைப்பு இஸ்லாத்தின் எந்தவொரு மத்ஹபிலும் அனுமதிக்கப்பட்டதில்லை. எந்தவொரு இறை மார்க்கத்திலும் (உம்: தவ்றாத், இன்ஜீல்) அனுமதிக்கப்பட்டதுமல்ல, இதனால் எத்தகைய ஸவாபும் கிடைக்காது' என்கிறார் இமாம் முஹம்மத் அல் பரகவி (பார்க்க: மஜ்மூஅது ரஸாஇல்-இப்னு ஆபிதீன்)
அல்குர்ஆன் ஓத எவரையும் கூலிக்கு அமர்த்தி, ஓதியதை இறந்தவர்க்குச் சேர்ப்பிப்பது செல்லுபடியாகாது. இதற்கு எந்தவொரு இமாமும் அனுமதி கொடுத்ததாகத் தெரியவில்லை. உலமாக்களின் கருத்துயாதெனில், 'ஒருவர் பணத்திற்காக அல்குர்ஆனை ஓதினால் அவருக்கு எதுவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இப்படியிருக்க இறந்தவருக்கு இவர் எதனைக் கொடுக்கப் போகிறார்! உண்மையில் மரணித்தவரை அடைவதெல்லாம் நற்கருமங்களே ஆகும். அல்குர்ஆனை ஓதக் கூலிக்கு ஆளை அமர்த்;;துவதையிட்டு எந்தவொரு இமாமும் கூறியதில்லை' என்கிறார் இப்னு தைமியா (பார்க்க: மஜ்முஅது ரஸாஇல்-இப்னு ஆபிதீன்)
குறித்த அமைப்பு ஹராமானது என்பதற்கு அறிஞர்கள் கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டுவர்.
'எனது வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்' (241) இவ்வசனத்திற்கு அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் 'அல்குர்ஆனுக்கு கூலி எடுக்காதீர்கள்' எனப் பொருள் கொடுக்;கிறார்கள். (பார்க்க தப்ஸீர் அத்தபரீ, இப்னு கதீர், அல்குர்துபி )
இறுதியாக இதுபற்றி 'ஷர்ஹு அகீதத்தித் தஹாவிய்யா' எனும் நூலில் இடம்றெ;றுள்ள கருத்தை கீழே தருகின்றோம்.
'சிலரைக் கூலிக்கமர்த்தி அல்குர்ஆனை ஓத வைத்து, அதனை இறந்தவருக்கு அன்பளிப்புச் செய்யும் அமைப்பை ஸலபுஸ்ஸாலிஹீன்கள் எவரும் செய்ததில்லை, இமாம்கள் எவரும் இதனை ஏவியதாகவும் இல்லை. இது விடயத்தில் அவர்களில் எவரும் சலுகை வழங்கியதாகவும் தெரியவில்லை. அல்குர்ஆனை ஓதுவதற்காகவே கூலிக்கு அமர்த்துவது கூடாத ஒன்றாகும்' என்பதில் கருத்து வேறுபாடில்லை.
