வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - தஹஜ்ஜுத்துடைய நேரம்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
தஹஜ்ஜுத்துடைய நேரம்
கேள்வி: 'தஹஜ்ஜுத் தொழுகைக்குரிய நேரம் என்ன? தூக்கத்தில் இருந்து விழித்துத் தொழும் தொழுகையே தஹஜ்ஜுத் என அறிகின்றோம். இதன் உண்மை யாது? தெளிவான விளக்கமொன்றை எதிர்பார்க்கின்றேன்.
பதில்: இரவில் நின்று வணங்கும் தொழுகையே கியாமுல் லைல் என்றும்'தஹஜ்ஜுத் என்றும் கூறப்படுகின்றது. இதற்குக் கண்டிப்பாகத் தூங்கி எழ வேண்டும் என்பது நிபந்தனையல்ல. இஷாத் தொழுகையின் பின்னர் இரவின் ஆரம்பத்திலோ, நடுப்பகுதியிலோ அல்லது இறுதிப் பகுதியிலோ இரவு நேரத்தொழுகையை நிறைவேற்றலாம்.
'நபி (ஸல்) அவர்களின் தஹஜ்ஜுத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கவில்லை. அவர்கள் தமது வசதியையும் சௌகரியத்தையும் பொறுத்து அதனை அமைத்துக் கொண்டார்கள்' என்கிறார் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்).
ஆயினும், தஹஜ்ஜுத்தை இரவின் மூன்றாம் பகுதியில் தொழுவது மிகச் சிறப்புடையதாகும். இதற்குப் பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
'எங்களது இறைவன் ஒவ்வொரு நாள் இரவிலும் அதன் மூன்றாம் பகுதியில் கீழ் வானத்திற்கு இறங்கி, 'என்னை அழைப்பவர் இருக்கின்றாரா? நான் அவருக்குப் பதில் அளிக்கின்றேன். என்னிடம் கேட்பவர் இருக்கின்றாரா? நான் அவருக்குக் கொடுக்கின்றேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் இருக்கின்றாரா? நான் அவருக்கு மன்னிப்பு அளிக்கின்றேன்' என்று கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைறா (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
'அடியான் ரப்புக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது இரவின் கடைசிப்பகுதியிலாகும். எனவே, அவ்வேளையில் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்களில் ஒருவராக உம்மால் இருக்க முடியுமாயின் அப்படிச் செய்வீராக' என்று தனக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் இப்னு அப்ஸா (றலி) குறிப்பிடுகின்றார். (அல்ஹாகிம், அத்திர்மிதி, அந்நஸாஈ)
அபூமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் அபூதர் (றழி) அவர்களிடம் 'கியாமுல் லைலில் சிறந்தது எது?' என்று வினவினார். அதற்கு அவர், 'நீர் என்னிடம் இதனைக் கேட்பது போலவே நானும் இது பற்றி ரஸுலுல்லாஹ்விடம் வினவினேன். அதற்கு அவர்கள் 'நடுநிசியின் மீதமுள்ள பகுதியாகும். இதனைச் சிலரே செய்பவர்களாக இருப்பர்;' எனக்கூறினார். (அஹ்மத்)
மேலும் தஹஜ்ஜுத் தொழுகைக்கு வரையறுக்கப்பட்ட ரக்அத்துக்கள் இல்லை என்பதனையும் கவனத்திற் கொள்க.
