வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸக்காத்தும் காலதாமதமும்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
ஸக்காத்தும் காலதாமதமும்
கேள்வி: ஒருவர் தனது கணக்கிடப்பட்ட ஸக்காத் பணத்தை கணக்கிடப்பட்டதும் உடனே கொடுத்து முடித்து விட வேண்டுமா? சில காரணங்களுக்காக அதனைக் காலம் தாழ்த்திக் கொடுக்கலாமா? சிறிது காலத்துக்கு அதனைத் தனது முதலுடன் இணைத்துத் தொழிலில் ஈடுபடுத்தலாமா? தெளிவான விளக்கம் தேவை.
பதில்: ஒருவர் தனது பொருளில் ஸக்காத்தாகக் கொடுக்கப்பட வேண்டிய தொகையை அதனைக் கணக்கிட்டவுடன் தாமதமின்றி விநியோகித்துவிட வேண்டுமா அல்லது தாமதித்துக் கொடுக்கவும் அனுமதியுண்டா என்ற விடயத்தில் கருத்து வேறுபாடு உண்டு.
கடமையான ஸக்காத்துக்குரிய தொகையைத் தாமதிக்காது உடன் நிறைவேற்றி விட வேண்டும் என்பதே இமாம்களான ஷாபிஈ, மாலிக், அஹ்மத் ஆகியோர் உட்பட ஹனபி மத்ஹபைச் சேர்ந்த சில உலமாக்களினதும் கருத்தாகும்.
ஒருவருக்கு ஸக்காத் கடமையை நிறைவேற்றுவதற்கான எல்லா நிபந்தனைகளும் அமையப் பெற்றிருந்து அதனை உடனே நிறைவேற்றுவதற்கு முடியுமான நிலையிலும் அவர் இருந்தால், அதனைப் பிற்படுத்துவது கூடாது.
ஸக்காத்தைத் தாமதித்து, பிற்படுத்தி நிறைவேற்றலாம் என்பது இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களினதும் பெரும்பாலான ஹனபியாக்களினதும் அபிப்பிராயமாகும்.
ஆயினும், முதல் தரப்பினரின் கருத்தே பலமானதாகக் கொள்ளப் படுகின்றது. அவர்கள் தமது முடிவுக்கு ஆதாரங்களாகப் பின்வரு வனவற்றை முன்வைத்துள்ளனர்.
1. ஸக்காத்தைக் கொடுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளை உடன் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையே வேண்டி நிற்கிறது.
2. கடமையான ஒன்றை விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய கடமையொன்றைத் தாமதித்துச் செய்ய முடியும் என்றிருப்பின், அக்கடமையை நிறைவேற்றாத ஒருவரை இறுதிவரை தண்டிப்பது என்பது சாத்தியமற்றதாகிவிடும்.
3. ஏழையின் தேவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று. எனவே அதற்காக வகுக்கப்பட்டுள்ள ஸக்காத்தும் உடன் நிறைவேற்றப்பட வேண்டியதாகும்.
4. செல்வத்தை நேசிப்பது, அதனை இழக்க விரும்பாதிருப்பது மனிதனின் சுபாவமாகும். இந்நிலையில் ஸக்காத்தைப் பிற்படுத்தித் தாமதமாகவும் நிறைவேற்றலாம் என்றிருப்பின் ஒருவர் அதனைத் தொடர்ந்தும் பிற்படுத்தி இறுதியில் அவர் மரணித்துவிட இடமுண்டு. அல்லது செல்வமானது அவர் கையிலிருந்து அழிந்து விடவும் சாத்தியமுண்டு.
5. ஸக்காத் என்பது தொழுகை, நோன்பு ஆகியன போன்ற மீண்டும் மீண்டும் (உ-ம் வருடாந்தம்) தொடர்ந்து நிறைவேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும். எனவே ஒரு முறைக்குரிய ஸக்காத்தை அடுத்த முறைவரை பிற்போடுவது கூடாது.
ஒருவர் தன்மீது ஸக்காத் வாஜிபான நிலையில் அதனை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கிடைத்தும் நிறைவேற்றாது மரணித்து விட்டால், அது அவரது வாரிசுச் சொத்திலிருந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இமாம்களான ஷாபிஈ, அஹ்மத் ஆகியோரின் கருத்தாகும்.
'மனிதருக்குரிய கடன்களே நிறைவேற்றப்பட வேண்டும் என்றிருக்கும் போது அல்லாஹ்வுக்குரிய கடன் (அவற்றைவிட) நிறைவேற்றத்தக்கதாகும்' என்ற ஹதீஸ் இக்கருத்துக்கு ஆதாரமாக கொள்ளப்படுகின்றது.
மேலே கண்டவாறு ஸக்காத் என்பது தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்றிருப்பினும் அதனை உடனடியாக நிறைவேற்றுவதில் தனக்கோ அல்லது தனது பொருளுக்கோ கேடேதும் ஏற்படும் என்று அஞ்சும் போது அதனைப் பிற்படுத்துவதில் தவறில்லை. அவ்வாறே, மிகப் பொருத்தமானவரைக் கண்டறியும் வரை அல்லது இதுபோன்ற பிற நியாயமான நலன்களைக் கருத்திற் கொண்டு ஸக்காத் கடமையை உடன் நிறைவேற்றாது பிற்படுத்துவதற்கு அனுமதியுண்டு.
மேலும் ஒருவர் தனது சொந்தத் தேவைக்காகத் தான் ஸக்காத்தாகக் கொடுக்க வேண்டிய தொகையைச் செலவு செய்து விட்டு பின்னர் அதனை உரியவர்களுக்கு வழங்கவும் இடமுண்டு. ஆனால், அத்தொகை அவரின் பொறுப்பிலுள்ள மிகப் பெரியதொரு கடனாகும் என்பதனை அவர் உணர வேண்டும். பொதுவாக எந்த அமலையும் தாமதப்படுத்தாது விரைவாக நிறைவேற்றும் படியே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்த வகையில் ஸக்காத் போன்ற ஒரு கடமையை முடியுமானவரை துரிதமாக நிறைவேற்ற முயல்வது ஒரு முஸ்லிமின் கடமையாகும்.
