வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - குத்பாவின் போது தொழுதல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
குத்பாவின் போது தொழுதல்
கேள்வி : வெள்ளிக்கிழமை ஜும்ஆவின்போது இமாம் குத்பாப் பிரசங்கம் செய்யும் நேரத்தில் தொழலாமா?
பதில்: ஜும்ஆ தினத்தில் இமாம் குத்பாப் பிரசங்கத்துக்காக வரமுன்னர் நபில் தொழுவது ஸுன்னத்தாகும். சந்தர்ப்பத்தைப் பொறுத்து எவ்வளவும் தொழலாம். ஆனால், இமாம் குத்பா நிகழ்த்துவதற்காக வந்துவிட்டால் அவ்வாறு தொழுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்நிலையிலும் 'தஹிய்யத்துல் மஸ்ஜித்' தொழுகையை நிறைவேற்றலாம். பிரசங்கம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் இதனைத் தொழலாம். ஆனால் தொழுகையை நீட்டிக் கொண்டிராது அவசரமாக முடித்துக் கொள்ளல் வேண்டும். குத்பா முடியும் தறுவாயில் ஒருவர் வந்தால், தஹிய்யத்துல் மஸ்ஜிதைத் தொழும் வாய்ப்புக் குறைவாக இருப்பின், அதனை நிறைவேற்ற வேண்டியதில்லை.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) ஜும்ஆவுக்கு முன் நீண்டநேரம் தொழுபவராகவும், ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழுபவராகவும் இருந்தார். றஸுலுல்லாஹ் அவர்களும் இவ்வாறு செய்து வந்தார்கள் என அறிவிப்பவராகவும் அவர் இருந்தார். (ஆதாரம்: அபூதாவூத்)
நபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு குறிப்பிட்டார்கள்: 'எவர் ஜும்ஆ தினத்தில் குளித்து, பின்னர் ஜும்ஆவுக்காக வந்து சில ரக்அத்துகள் தொழுது, தொடர்ந்து இமாம் குத்பாவை முடிக்கும் வரை அதனைக் காது தாழ்த்திக் கேட்டு, பின்னர் அவருடன் (ஜும்ஆவையும்) தொழுகிறாரோ, அவரது அந்த ஜும்ஆவுக்கும், அடுத்துவரும் ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மேலும் மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்.' (ஆதாரம்: முஸ்லிம்)
மேலும் ஒரு நபிமொழி கீழ்வருமாறு அமைந்துள்ளது. 'ஜும்ஆத் தினத்தன்று ஒருவர் வந்தால், இமாம் குத்பாவுக்காக வந்திருப்பின் இரண்டு ரக்அத்துக்கள் தொழட்டும்.' (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
இங்கு நாம் ஜும்ஆவுக்கு முந்திய தொழுகை எனக் குறிப்பிட்டது, குத்பாவுக்கு முந்திய, ரக்அத்துக்கள் வரையறுக்கப்படாத, நபிலான தொழுகையேயன்றி ஜும்ஆவுக்கு முந்திய ஸுன்னத் எனப் பலர் வழங்கும் இரண்டு ரக்அத்துகளும் அல்ல. அத்தொழுகைக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.
