வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - பெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
Page 2 of 31
பெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்
கேள்வி : வீட்டிலிருந்து வுழுவுடன் பள்ளிவாயலுக்குச் செல்லும் வழியில் ஒரு பெண்ணின் உடம்பில் எதிர்பாராத விதமாகப் பட்டுவிட்டால் அவருக்கு மீண்டும் வுழு செய்தல் கடமையாகுமா?
பதில் : ஷாபிஈ மத்ஹபின் படி அவர் மீண்டும் வுழு செய்தல் வேண்டும். திரையின்றி ஒரு பெண்ணைத் தொட்டாலும் வுழு முறியாது என்பதற்கு தகுந்த, உறுதியான ஆதாரங்கள் உண்டு. ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்: 'ரஸுல் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிட்டனர்.' பின்னர் கீழ்வருமாறு கூறினர்:
'நிச்சயமாக முத்தமிடுவது வுழுவையும் முறிக்காது. நோன்பையும் முறிக்காது.' (இஸ்ஹாக் பின் ராஹவைஹி, அல் பஸ்ஸார்) ஆயிஷா (ரலி) அறிவிக்கும் மேலும் ஓர் அறிவிப்பு வருமாறு:
'நபியவர்கள் தமது மனைவிமார்களுள் ஒருவரை முத்தமிட்டு விட்டு மீண்டும் வுழு செய்து கொள்ளாமலேயே தொழுகைக்காகச் சென்றார்கள்' (ஆதாரம்-அஹ்மத், திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா, அபூதாவூத்)
அவர்கள் அறிவிக்கும் இன்னுமோர் அறிவிப்பும் இங்கு குறிப்பிடத்தக்கது:
'நான் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது கால்கள் இரண்டும் (அவர்கள் தொழுது கொண்டிருந்த) கிப்லாவின் பக்கம் இருந்தன. எனவே, அவர்கள் ஸுஜுத் செய்யும் போது எனது காலைத் தொட்டு சாடை செய்வார்கள். நான் அப்போது எனது காலை மடித்துக்கொள்வேன்' (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
இத்தகைய ஆதாரங்களை வைத்தே சில மத்ஹப்களும் முக்கிய சில இமாம்களும் பொதுவாக பெண்களைத் தொடுவது வுழுவை முறிக்காது என்ற கருத்தை கொண்டிருக்கின்றனர். ஆயினும், இச்சையோடு முத்த மிடுவது, தொடுவது வுழுவை முறிக்கும் என்ற கருத்தையுடைய இமாம்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
