வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
ஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை
கேள்வி: ஜும்மா தினத்தில் கதீப் குத்பாப் பிரசங்கம் செய்யத் தொடங்க முன் நம்நாட்டில் பெரும்பாலான மஸ்ஜிதுகளில் ஜும்மாவுக்கான ஸுன்னத் என்று இரண்டு ரக்அத்துக்கள் தொழப்படுகின்றன. இத்தகையதொரு தொழுகை இருக்கின்றதா? விளக்கம் தரவும்.
பதில்: சில இஸ்லாமிய அறிஞர்கள் ஜும்மாத் தொழுகைக்கு முந்திய ஸுன்னத் என்றவகையில் இரு ரக்அத்துகள் உண்டு எனக் கூறியிருப்பினும் இத்தொழுகைக்கு ஸஹீஹான ஹதீஸ்களை ஆதாரமாய்க் காண முடியவில்லை. ஜும்மா தொடர்பான ஹதீஸ்களை நோக்குகின்றபோது, ஜும்ஆவுக்கான அதான், குத்பா, தொழுகை ஆகிய மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்றிருப்பதையே காண முடிகிறது. அங்கே இரு ரக்அத்துகள் ஸுன்னத்தாகத் தொழுவதற்கு நேரமோ, சந்தர்ப்பமோ இருந்ததாகத் தெரியவில்லை. இதனை இமாம் அல்-இறாகீ விளக்குகையில் 'ரஸுலுல்லாஹ் ஜும்ஆத் தொழுகைக்கு முன்னர் தொழுதிருக்கிறார்கள் என்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. ஏனெனில், அவர்கள் ஜும்ஆவுக்காக மஸ்ஜிதுக்கு வந்தவுடன் அதான் சொல்லப்பட்டு அதனைத் தொடர்ந்து குத்பாப் பிரசங்கத்தைச் செய்திருக்கிறார்கள் என்றே தெரிய வருகிறது' என்கிறார். (நூல், நைலுல் ஒளதார்-பாகம் 3, பக்-216) இதே கருத்தை இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானியும் கொண்டிருக்கிறார். (பக்ஹுல் பாரீ, பாகம் 2 பக்-341) இமாம் இப்னுல் கையிம் கீழ்வருமாறு கூறுகிறார்:
'பிலால் (ரழி) அவர்கள் (ஜும்ஆவுக்காக) அதான் கூறி முடிவுற்றதும், அனைவரும் இரண்டு ரக்அத்துக்ள் தொழுதார்கள் என நினைப்பவர் ஸுன்னாவை அறியாதவரே' (பார்க்க: ஸாதுல் முஆத்)
'இதனால்தான் பிழையான ஸுன்னத் என விளங்கப்பட்ட இத் தொழுகையைப் பற்றி இமாம் ஷாபிஈயின் 'உம்மு'விலோ இமாம் அஹ்மதின் 'அல்-மஸாயில்'லிலோ நான் அறிந்தவரை ஏனைய ஆரம்பகால இமாம்களின் நூல்களிலோ எத்தகைய குறிப்பும் இடம்பெறவில்லை' என்கிறார் இமாம் அல்-மனாவி, (பார்க்க- பைளுள் கதீர்)
ஜும்ஆவுடைய பிந்திய ஸுன்னத் தொழுகையைப் பொறுத்த வரையில், அதற்குத் தெளிவான, ஸஹீஹான ஆதாரங்களுண்டு. உதாரணத்திற்கு கீழ்வரும் நபிமொழியைக் குறிப்பிடலாம். 'உங்களில் ஒருவர் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் அதன்பின் நான்கு ரக்அத்துகள் தொழட்டும்.' (ஆதாரம்-முஸ்லிம், நஸாயீ, திர்மிதி)
ஜும்ஆத் தினத்தில் மஸ்ஜிதுக்கு வந்தவர் 'நபில் முத்லக்' எனும் நேரம், ரக்அத்துகள் வரையறுக்கப்படாத ஸுன்னத் தொழுகையை நிறைவேற்றலாம் என்பதனைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
