வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸஜ்தாக்கள் பற்றிய விபரம்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
ஸஜ்தாக்கள் பற்றிய விபரம்
கேள்வி: ஸஜ்தா திலாவத், ஸஜ்தா ஷுக்ர், ஸஜ்தா ஸஹ்வு ஆகிய ஸஜ்தாக்கள் பற்றிப் பூரண விளக்கம் ஒன்றை எதிர்பார்க்கின்றேன்.
பதில்: அல்குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனங்கள் பதினைந்து காணப்படுகின்றன. அவற்றிலொன்றை ஓதியவரும், ஓதக் கேட்டவரும் தக்பீர் சொல்லி ஒரு ஸுஜுத் செய்வது ஸுன்னத்தாகும். இதனையே ஸஜ்தா திலாவத் என வழங்குகின்றோம். இதில் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்), ஸலாம் ஆகிய இரண்டும் இடம் பெறுவதில்லை. ஸுஜுது செய்யும் போது தக்பீர் சொல்வது போன்றே அதிலிருந்து எழும்போது அல்லாஹு அக்பர் எனக் கூறவேண்டும். 'ஸஜ்தாவுடைய வசனமொன்றை நீர் ஓதினால் தக்பீர் கூறி ஸுஜுது செய்ய வேண்டும். அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் சொல்ல வேண்டும்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறியுள்ளார்.
தொழுகைக்குரிய அனைத்து நிபந்தனைகளும் ஸஜ்தா திலாவத்திற்குரிய நிபந்தனைகளாகக் கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் வுழுவுடன் இருப்பதுவும், கிப்லாவை முன்னோக்குவதும் அவ்ரத்தை மறைத்திருப்பதுவும் குறிப்பிடத்தக்க நிபந்தனைகளாகும்.
மேற்கண்ட ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களை ஓதலாம். வழமையாக ஸுஜுதில் ஓதுகின்ற 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்பதனையும் 'ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வ ஷக்க ஸம்அஹு வ பஸரஹு பிஹவ்லிஹீ பி குவ்வத்திஹீ வ தபாரகள்ளாஹு அஹ்ஸனுல் காலிகீன்' என்பதனையும் ஓதுவது சிறந்ததாகும்.
தொழுகையில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதினால் இமாமும் மஃமூமும் இருவரும் ஸஜ்தா செய்யலாம்.
ஸஜ்தாவுடைய ஒரு வசனத்தைப் பலமுறை ஓதும் போதும் அத்தகைய ஒரு வசனத்தைத் தொடர்ந்து பல தடவைகள் செவிமடுக்கும் போதும் ஒரு ஸஜ்தா செய்வது போதுமானதாகும்.
தனக்குக் கிட்டிய ஒரு பாக்கியத்துக்காகவோ அல்லது தன்னை விட்டகன்ற ஓர் அனர்த்;தத்துக்காகவோ அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்து ஒரு ஸஜ்தா செய்வது முஸ்தஹப் ஆகும். இத்தகைய ஸஜ்தாவே ஸஜ்ததுஷ்ஷுக்ர்; என வழங்கப்படுகிறது. 'நபியவர்கள் தமக்கு மகிழ்வூட்டும் ஒரு நிகழ்ச்சி இடம் பெற்றாலும் ஒரு சுப செய்தி கூறப்பெற்றாலும் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பான் வேண்டி ஸுஜுதில் விழுபவர்களாய் இருந்தார்கள்' என அபூபக்கர் (ரலி) அறிவிக்கிறார். (ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா , திர்மிதி)
தொழுகையில் ஏற்படும் மறதிக்காகச் செய்யும் ஸுஜுத் ஸஜ்ததுஸ் ஸஹ்வ் எனப்படும். இது இரண்டு ஸுஜுதுகளைக் கொண்டது. இதனை ஸலாம் கொடுக்க முன்னரோ பின்னரோ செய்யலாம்.
தொழுகையை முடிக்க முன்னர் ஸலாம் கொடுத்தல், ரகஅத்துக்களைக் கூட்டித் தொழுதல், முதலாம் அத்தஹிய்யாத்தை விடல், தொழுகையில் ஏதாவது ஒரு ஸுன்னத் விடுபடல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் தொழுகையில் ஏதும் சந்தேகம் ஏற்படும் வேளைகளிலும் ஸஜ்தா ஸஹ்வு செய்தல் வேண்டும். இந்த ஸஜ்தாவைச் செய்யாது விடுவதனால் தொழுகை செல்லுபடியற்றதாக ஆகமாட்டாது என்பதனைக் கருத்தில் கொள்க.
