வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - அதானுக்குப் பதில் கூறல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
அதானுக்குப் பதில் கூறல்
கேள்வி : அதான் சொல்லப்படும் போது அதனைச் செவிமடுப்பவர் ஒவ்வொரு வசனத்திற்கும் எவ்வாறு பதில் சொல்ல வேண்டுமென்பதை விளக்குவீர்களா?
பதில் : முஅத்தின் கூறுகின்ற ஒவ்வொரு வசனத்தையும் திருப்பிக் கூறல் வேண்டும். 'ஹய்ய அலஸ்ஸலாஹ்', 'ஹய்ய அலல் பலாஹ்;' என்ற இரு வசனங்கள் கூறப்படும்போது மாத்திரம் 'லாஹவ்ல வலா குவத்த இல்லா பில்லாஹ்' என்று சொல்ல வேண்டும்.
'நீங்கள் அதான் ஒலியைச் செவிமடுத்தால் முஅத்தின் சொல்வது போன்று சொல்லுங்கள்' என்பது நபி வாக்காகும்.
மேலும் ஒரு நபி மொழி அதான் சொல்லக் கேட்பவர் அதற்கு எவ்வாறு பதில் சொல்ல வேண்டுமென்பதை விளக்கமாகக் கூறுகிறது. அது பின்வருமாறு:
'முஅத்தின், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக் கூறும் போது நீங்களும் அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர் எனச் சொல்ல வேண்டும். அவர் 'அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்' எனக் கூறும் போது நீங்களும் 'அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்' எனக் கூற வேண்டும். அவர் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்' எனக் கூறும் போது நீங்களும் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்' எனக் கூற வேண்டும். அவர் 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' எனக் கூறும்போது நீங்கள் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்' எனக் கூறல் வேண்டும். அவர் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' எனக்கூறும்போது நீங்கள் 'அல்லாஹுஅக்பர், அல்லாஹுஅக்பர்' எனக் கூறல் வேண்டும். அவர் 'லாஇலாஹ இல்லல்லலாஹ்' என்று கூறும் போது நீங்களும் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று கூறல் வேண்டும். இவ்வாறு யார் தனது உள்ளத்தினால் கூறுகின்றாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்.' ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத் அறிவிப்பவர் : உமர் (ரலி)
மேலே கூறப்பட்ட முறையில் அதானுக்குப் பதில் சொல்வது ஸுன்னத்தாகும். வுழுவுடன் இருப்பவர், வுழு இன்றி இருப்பவர், முழுக்குடன் இருப்பவர், ஹைழ் உடன் இருக்கும் பெண், பெரியவர், சிறியவர் உட்பட அனைவரும் அதானுக்குப் பதில் சொல்வது ஸுன்னத்தாகும். ஆயினும் தொழுகையில் இருப்பவர், உடலுறவில் ஈடுபட்டிருப்பவர் ஆகியோர் அதானுக்குப் பதில் சொல்லக்கூடாது. இத்தகையோர் குறித்த தம் கருமத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் மொத்தமாக பதில் சொல்லலாம்.
படித்தல், குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற விடயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் அதான்; ஒலியைக் கேட்டால் உடனே அவற்றை நிறுத்தி விட்டு அதானுக்குப் பதில்கூற வேண்டும்.
