வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்
கேள்வி: எங்களுரில் இரண்டு வகையாக ஜனாஸாவைக் கொண்டு செல்கின்றனர். சிலர் கலிமாவைச் சத்தமிட்டுக் கூறியவாறு கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் மௌனமாகக் கொண்டு செல்கின்றனர். இவ்விரு அமைப்பிலும் எது சரியானது என்பது பற்றி விளக்கம் தாருங்கள்.
பதில்: ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்லும் வேளையில் மௌனமாகச் செல்வதே ஸுன்னத்தாகும். நான்கு மத்ஹப்களினதும் சட்டங்களைக் கூறுகின்ற 'அல்-பிக்ஹு அலல் மதாஹிபில் அர்பஆ' எனும் நூலும் இக்கருத்தையே கூறுகின்றது. இதற்கு மாறாக, சத்தமாக திக்ரு செய்வதோ, குர்ஆன் போன்றவற்றை ஓதுவதோ கூடாது. அது மக்ரூஹாகும். ஸஈதுப்னுல் முஸையிப், ஸஈதுப்னு ஜுபைர், அல்ஹஸன், அந்நகஈ, அஹ்மத், இஸ்ஹாக் போன்ற பல தாபிஈன்களும் இக்கருத்தையே கொண்டுள்ளனர். ஷாபிஈ மத்ஹபின் முக்கிய இமாமாகக் கருதப்படும் நவவியும் தனது 'அல்-அத்கார்' எனும் நூலில் ஜனாஸாவைச் சுமந்து செல்லும் வேளையில் சத்தமாக திக்ரு செய்வதோ, ஓதுவதோ கூடாது என்றும், மௌனமாகச் செல்வதே சரியானதும், ஸலபிக்களின் வழிமுறையுமாகும் என்றும் குறிப்பிடுகின்றார்.
ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது திக்ருகளைக் கூறிச் சத்தமிடும் அமைப்பு நபியவர்களின் காலத்திலோ அல்லது ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தாபஉத் தாபிஈன்கள் காலத்திலோ இருந்த ஒன்றல்ல என்று இமாம் முஹம்மது அப்துஹு 'அல்-பத்ஹ்' என்ற நூலை மேற்கோள்காட்டிக் கூறுகின்றார். இப்னு நுஐம் போன்ற பல இமாம்கள் சத்தமிடுவதை 'மக்ரூஹ் தஹ்ரீம்' என்று குறிப்பிடுகின்றனர்.
'நெருப்புடனோ சத்தத்துடனோ ஜனாஸாவைத் தொடர' வேண்டாம் எனும் அஹ்மத், அபூதாவூத், அல்பைஹகீ ஆகியோர் தத்தமது கிரந்தங்களில் பதிவு செய்துள்ள நபி மொழியும், 'அல்லாஹ் மூன்று சந்தர்ப்பங்களில் மௌனமாக இருப்பதை விரும்புகிறான்;. குர்ஆன் ஓதும் போதும், யுத்தம் நடைபெறும் போதும், ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போதும் மௌனம் சாதிப்பதே அம்மூன்று சந்தர்ப்பங்களுமாகும்' எனும் தபரானி பதிவு செய்துள்ள நபி மொழியும் மேற்குறித்த முடிவுக்கு ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.
