வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - சில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
சில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்
கேள்வி : ஐங்காலத் தொழுகைகளில் ஸுபஹ், மஃரிப், இஷா ஆகியவற்றில் இமாம் ஸூறாக்களைச் சத்தமிட்டு ஓதுகிறார். ஆனால், ளுஹர், அஸர் ஆகிய இரு நேரத் தொழுகைகளிலும் அவ்வாறு சத்தமிட்டு ஓதுவதில்லை. அத்துடன் ஜும்ஆத் தொழுகையின் போதும் ஸூறாக்கள் இமாமினால் சத்தமிட்டே ஓதப்படுகின்றன. இவற்றுக்கான காரணம் யாது? விளக்கம் தரவும்.
பதில் : நபி (ஸல்) அவர்கள் ஆரம்பகாலப்பிரிவில் அனைத்துத் தொழுகைளிலும் ஸூறாக்களைச் சப்தமாகவே ஓதி வந்தார்கள். ஆயினும், முஷ்ரிக்கீன்களோ தொழுகைகளையும் ஓதல்களையும் குழப்பும் விதத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஓத ஆரம்பிக்கும் போது அவர்கள் உரத்த குரலில் கவிதைகள் பாடவும், மோசமான வார்த்தைகளைப் பேசவும் முற்பட்டதுடன் அல்குர்ஆனையும் அதனை இறக்கிய இறைவனையும் அது இறக்கப்பட்ட நபியையும் ஏசவும் தூற்றவும் ஆரம்பித்தார்கள். இச்சந்தர்ப்பத்திலேயே கீழ்வரும் குர்ஆன் வசனம் இறங்கியது, 'நபியே, உம்முடைய தொழுகையில் நீர் மிக்க சத்தமிட்டும் ஓதாதீர், அதிக மெதுவாகவும் ஓதாதீர்' (17:110) இதன் பின்னரே நபியவர்கள் ளுஹர், அஸர் ஆகிய தொழுகைகளில் எதிரிகளின் அட்டகாசங்களைத் தவிர்க்கும் விதத்தில் சத்தமிடாது மௌனமாக ஓதலானார்கள். மஃரிப் தொழுகைக்குரிய நேரத்தைப் பொறுத்தவரையில், அது எதிரிகள் உணவு உட்கொள்ளும் நேரமாகவும், ஸுபஹ், இஷா ஆகியவற்றுக்குரிய நேரங்கள் அவர்கள் தூங்கும் நேரங்களாகவும் இருந்தமையினால் இத்தொழுகைகளில் நபியவர்கள் உரத்த குரலில் ஓதலானார்கள்.
ஜும்ஆத் தொழுகையும், இரு பெருநாள் தொழுகையும் அவை மதீனாவிலே ஆரம்பித்து வைக்கப்பட்டமையினால் அவற்றில் ஸுராக்கள் சத்தமாகவே ஓதப்பட்டு வரலாயின.
சில அறிஞர்களின் கருத்துப்படி ளுஹரிலும் அஸரிலும் தாழ்ந்த குரலில் ஸூறாக்கள் ஓதப்படுவதன் இரகசியம், அவை நிறைவேற்றப்படும் நேரம் சத்தமும், சந்தடியும் உள்ளதாக இருப்பதினால் ஆகும். ஏனைய தொழுகைகளின் நேரங்கள் அமைதியானதாக இருப்பதனால், அவ்வேளைகளில் சத்தமாக ஓதுவது செவிமடுப்போருக்குப் படிப்பினை பெறவும் நல்லுணர்ச்சி பெறவும் துணைபுரியும்.
'பகற் காலத் தொழுகைகளைச் சத்தமாக அமைத்துக்கொள்ளாதீர், இரவு காலத் தொழுகைகளை அமைதியாக அமைத்துக்கொள்ளாதீர்' என்ற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் ஒரு சக்தியாக மாறி, எவரையிட்டும் அஞ்ச வேண்டிய அவசியமற்றவர்களாக ஆகிய பின்னரும் நபியவர்கள் குறித்த அமைப்பைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தமை, எங்களை இரண்டாவதாகக் கூறப்பட்ட கருத்தை மிகப் பொருத்தமானதாகக் கருத வைக்கின்றது.
எப்படியாயினும், வணக்க, வழிபாடுகளில் காரணங்களையும், நியாயங்களையும் தேடுவதனை விடுத்து, ஸுன்னாவைக் கருத்திற் கொள்வதே முறையாகும் என்பது மாத்திரமன்றி அதுவே சட்ட விதியுமாகும்.
