வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - குல்லதைன்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
குல்லதைன்
கேள்வி : குல்லதைனுக்குக் குறைவாக உள்ள நீரிலும் கைகளைப் பாத்திரமாகக் கொண்டு வுளு செய்கின்றேன் என்ற நிய்யத்துடன் கைகளை அந்த நீரினுள் விட்டு அள்ளி வுழு செய்ய முடியும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு ஆதாரங்கள் ஏதேனும் உண்டா? தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.
பதில்: இக்கருத்துச் சரியானதே. இதனை ஷாபி மத்ஹப் அங்கீகரிக்கிறது. இரண்டு குல்லத்துக்குக் குறைந்த நீரில் இத்தகைய நிய்யத் இன்றியே கைகளை இட்டு வுளுச் செய்யவும் பல ஆதாரங்கள் உள்ளன. ஒரு வுளு செய்வதற்காக உபயோகிக்கப்பட்ட நீரை மேலும் இரு வுளு செய்வதற்கு (அது குல்லதைனுக்குக் குறைந்ததாக இருப்பினும்) பயன்படுத்தலாம் எனப் பல இமாம்கள் கருதுகின்றனர்.
'நபியவர்கள் (வுளுவுக்காக) தனது கைகளைக் கழுவிய நீரிலிருந்து தனது தலையை மஸ்ஹ் செய்துள்ளார்கள்' என அர்ருபய்யஃ பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்துள்ளார்கள். (அபூதாவூத், அஹ்மத்)
'அலி (ரலி), அபூ உமாமா (ரலி), அதா (ரஹ்), அல்-ஹஸன் (ரஹ்), மக்ஹுல் (ரஹ்), அன்நகயி (ரஹ்) போன்றோர், தலையை மஸ்ஹ் செய்ய மறந்தவர் தனது தாடியில் படிந்திருக்கும் நீரைக் கொண்டு மஸ்ஹ் செய்து கொள்ள முடியும் எனக் கூறியுள்ளனர்' என்கிறார் இமாம் இப்னுல் முன்ஸிர் (ரஹ்). இது, உபயோகிக்கப்பட்ட நீர் (மாஉன் முஸ்தஃமல்) தன்னிலும் சுத்தமானது, பிறவற்றையும் சுத்தம் செய்யக்கூடியது என்பதையே காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இமாம்களான மாலிக், ஷாபி ஆகிய இருவரினதும் அறிவிப்பொன்றில் இக்கருத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸுப்யானுஸ்ஸவ்ரீ (ரஹ்), அபூஸவ்ர் (ரஹ்) போன்றோர் உட்பட ழாஹிரி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் இக்கருத்துக்குச் சார்பாக உள்ளனர் என இமாம் இப்னு ஹாம் கூறுகின்றார்.
