வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - மதி வெளிப்படல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
Page 4 of 31
மதி வெளிப்படல்
கேள்வி : ஒருவருக்குச் சிறிதளவோ அல்லது அதிகமாகவோ 'மதி வெளியானால் அவருக்குக் குளிப்பு கடமையாகிவிடுமா? தொழுகை போன்ற இபாதத்களில் ஈடுபடுவதற்கு வுழு செய்தால் மாத்திரம் போதுமானதா? விளக்கம் தேவை.
பதில் : இந்திரியத்திற்கு முன்னர், சிற்றின்பத்தின் காரணமாக வெளியாகும் ஒருவகை நீரே மதி ஆகும். இது நஜீஸானது என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். ஆனால், 'மதி வெளியாகி அது உடம்பில் பட்டால் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. மர்மஸ்தானத்தைக் கழுவிக் கொண்டால் போதுமானது. உடம்பில் பட்டாலும் கழுவிக்கொள்ள வேண்டும். மதி ஆடையில் பட்டால் கழுவ வேண்டியதில்லை. நீரைத் தெளித்துவிட்டால் போதுமானது. இது சிரமத்தைத் தவிர்ப்பதற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சலுகையாகும்.
தொழுகை போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு மேலே குறிப்பிட்ட விதத்தில் சுத்தம் செய்து விட்டு வுழு செய்து கொள்ள வேண்டும்;. குளிக்க வேண்டியதில்லை.
அலி (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: 'எனக்கு அதிகம் 'மதி வெளிப்படுவதுண்டு. நான் நபி (ஸல்) அவர்களின் மகளைத் திருமணம் முடித்திருந்ததால், அன்னாரிடம் இது பற்றி கேட்டறியுமாறு ஒருவரைப் பணித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உமது ஆண் உறுப்பைக் கழுவிக் கொண்டு வுழு செய்வீராக' என்றார்கள். (புகாரி)
மேலும் ஸஹ்ல் இப்னு ஹனீப் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: 'நான் மதித் தொல்லையினால் பெரிதும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். அதன் காரணமாக அதிகம் குளிப்பவனாகவும் இருந்தேன். இந்நிலை பற்றி றஸுலுல்லாஹ்விடம் நான் கூறிய போது அன்னார், 'நீர் வுழு செய்து கொண்டால் போதுமானது' என்றார்கள். 'ஆடையில் அது பட்டால் என்ன செய்வது?' என்று நான் கேட்டேன். அதற்கு, அன்னார் 'அது ஆடையில் பட்ட இடத்தில், படும் அளவுக்குக் கையில் நீரை எடுத்துத் தெளித்து விட்டால் போதுமானது' என்றார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)
