வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - பெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
பெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்
கேள்வி: ஓர் ஆண் பெண்களுக்கு மாத்திரம் தனியாகத் தொழுகை நடத்தலாமா? ஒரு தந்தை தனது வயது வந்த பெண் மக்கள், மனைவி, தாய் போன்றோருக்குத் திரையின்றித் தொழுகை நடாத்தலாமா? விளக்கம் தேவை.
பதில்: ஓர் ஆண் பெண்களுக்கு மாத்திரம் இமாமாக நின்று தொழுகை நடத்துவதற்கு ஷரீஅத்தில் தடை ஏதும் இல்லை. ஒருபோது உபை இப்னு கஃப் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே நேற்றிரவு நான் ஒரு வேலை செய்தேன்' என்றார். அதற்கு அன்னார் 'அது என்ன?' என்று வினவவே, உபை இப்னு கஃப் 'வீட்டில் என்னுடனிருக்கும் பெண்கள், 'நீர் ஓதக் கூடியவராக இருக்கின்றீர். நாங்களோ ஓதக்கூடியவர்களல்லர். ஆகவே இமாமாக நின்று எங்களுக்குத் தொழுகை நடாத்துவீராக' என்று என்னிடம் கூறினர். நான் (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) எட்டு ரக்அத்துக்களைத் தொழுவித்து வித்ரையும் தொழுவித்தேன்' என்றார். அதற்கு நபியவர்கள் எதுவும் கூறாது மௌனம் சாதித்தார்கள். 'நபியவர்களின் மௌனத்தை நாம் அங்கீகாரமாகக் கருதினோம்' என்றும் உபை இப்னு கஃப் (ரழி) கூறுகிறார்.
இதிலிருந்து ஓர் ஆண் தனியாக பெண்களுக்கு மாத்திரம் தொழுகை நடாத்தலாம் என்பது தெரிகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அவசியம் திரையிட்டுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒருவகையில் திரையிட்டுக் கொள்வது பாதுகாப்பானதே.
