வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - கழாத் தொழுகை
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
கழாத் தொழுகை
கேள்வி: ஐவேளைத் தொழுகையில் கழா தொழுகையுண்டா? அதை எப்படிச் செய்வது? கழாத் தொழாவிட்டால் குற்றமா? விளக்கம் தேவை
பதில் : மறதி, தூக்கம் ஆகிய இரண்டின் காரணத்தினால் ஒரு தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றத் தவறியவர் அதனைக் கழாச் செய்ய வேண்டும் எனும் விடயத்தில் உலமாக்கள் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக 'ஒருவர் ஒரு தொழுகையை மறந்து விட்டால் அல்லது தூக்கத்தின் காரணமாக விட்டால், ஞாபகம் வந்தவுடன் அதனை நிறைவேற்றல் வேண்டும் எனும் நபிமொழி கொள்ளப்படுக்கின்றது. மயக்கத்தில் இருந்தவரைப் பொறுத்த வரையில் மயக்க நேரத்தில் விடுபட்ட தொழுகையை அவர் கழாச் செய்ய வேண்டியதில்லை. இப்னு உமர் (ரலி) ஒருமுறை மயக்கத்திலிருந்தார். அதனால் ஒரு நேரத்தொழுகையை அவரால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. எனினும், அவர் அதனை மயக்கம் தெளிந்த பின்னரும் கழாச் செய்யவில்லை என நாபிஃ (ரலி) கூறுகின்றார். தாவூத், ஸுஹ்ரி, அல்ஹஸனுல் பஸரி, முஹம்மதிப்னு ஸீரீன் ஆகியோரும் மயக்கத்திலிருந்ததனால் தொழுகையை விட்டவர் அதனைப் பின்னர் கழாச்செய்ய வேண்டியதில்லை என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.
ஆனால் மேற்குறிப்பிட்ட காரணங்களின்றி வேண்டுமென்றே ஒரு தொழுகையை விட்டவர் அதனைக் கழாச் செய்ய வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. வேண்டுமென்றே தொழுகையை விட்டவர் பாவியாவார்;. அவர் விட்ட தொழுகையைக் கழாச் செய்வது அவர் மீது கடமையாகும் என்பதே ஷாபிஈ, ஹனபீ, மாலிகீ, ஹன்பலீ அகிய நான்கு மத்ஹபுகளினதும் கருத்தாகும். இமாம்களான இப்னு தைமியா, இப்னு ஹஸ்ம் போன்றோர் மனமுரண்டாகத் தொழுகையை விட்டவர் அதனைக் கழாச் செய்ய முடியாது என்றும், தொழுகையை விட்ட பாவத்துக்காக தௌபா செய்வதும் அதிகமான ஸுன்னத்தான தொழுகைகளைத் தொழுவதுமே முறையாகும் என்றும் கூறுகின்றனர். அவர்கள் தமது கருத்துக்குச் சார்பாகப் பல ஆதாரங்களையும் காட்டியுள்ளனர். குறிப்பாக இமாம் இப்னு ஹஸ்ம் இது பற்றித் தனது அல்-முஹல்லா எனும் நூலில் மிக விரிவாக எழுதியுள்ளார். குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டிலிருந்தும் மேற்கோள் காட்டியும் தர்க்க ரீதியாகவும் அவர் இக்கருத்தை நிறுவ முயன்றுள்ளார்.
