ஷெய்க் அகார் பற்றி
Last Updated (Wednesday, 29 May 2019 11:01) Thursday, 04 September 2008 13:55
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுத் தஆலாவின் திரு நாமத்தால்,
அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் 1960ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருணாகலை நகருக்கு அண்மையில் உள்ள 'தோரயாய' எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அப்துல் கரீம், தாயார் கமறுன் நிஹார்.
மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட இவர் குடும்பத்தில் மூன்றாமவர். 1988ம் வருடம் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கல்வி
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்; தனது ஆரம்பக்கல்வியை தோரயாய அத்தாரிக் முஸ்லிம் வித்யாலயத்திலும் பின்னர் பக்மிகொல்ல அல்மினா முஸ்லிம் மகா வித்யாலயத்திலும் தெலியாகொன்ன ஹிஸ்புல்லா முஸ்லிம் மகா வித்யாலயம் என்பவற்றிலும் பெற்றுக் கொண்டார். 1976ம் ஆண்டு தனது உயர்கல்வியை தொடர்வதற்காக பேருவலை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் பிரவேசம் பெற்ற இவர் 1983ம் ஆண்டு முதற்தர சித்தியுடன் நளீமியா பட்டச்சான்றிதழை பெற்றுக்கொண்டார். 1984ம் அண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் (வெளிவாரி) பொதுக் கலைமாணிப் பட்டப்பரீட்சையில் 2ம் தர உயர் சித்தியடைந்தார். 1994ஆம் ஆண்டு முதுதத்துவமாணி பாடநெறிக்காக தன்னை பதிவு செய்து கொண்ட இவர் 1995ஆம் ஆண்டு அதன் எழுத்துப் பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த நிலையில் உள்ளார்.
பதவிகளும், நிறுனங்களில் அங்கத்துவமும் 
1983ல் நளீமிய்யாவின் பட்டப்படிப்பை முடித்ததையடுத்து அதன் விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட இவர் 1992-2000 ஆண்டு வரை நளீமிய்யாவின் கல்வித்துறை பீடாதிபதியாக பணியாற்றினார். 2001ம் ஆண்டு நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளராக பதவியுயர்;வு பெற்ற இவர் இன்று வரை அப்பதவியை வகித்து வருகின்றார்.
அவ்வாறே இவர் கடந்த காலங்களில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்.
- பேராதனை பல்கலைக்கழக பகுதி நேர விரிவுரையாளர்
- மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, நிகவரட்டிய அமீனிய்யா அரபுக் கல்லூரி என்பவற்றின் சிறப்பு விரிவுரையாளர்.
- தொலைக் கல்வி பாடத்திட்ட ஆலோசகர்
- ஜம்இய்யதுல் உலமா முன்னால் உதவி பொதுச் செயலாளர்
- ஜம்இய்யதுல் உலமா முன்னால் செயற்குழு மற்றும் பத்வாக் குழு உறுப்பினர்
- செயலாளர்- ஹலால் பிரிவு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
- தலைவர்- சமயக் கல்வி தொடர்பான ஆலோசனை சபை, கல்வி அமைச்சு
- உறுப்பினர்- கல்விக் குழு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
- IMHCS ( Institute Of Muslim Historical and Cultural Studies) நிறைவேற்றுக் குழு உறுப்பினர்
தற்போது வகித்து வரும் பதவிகள்
- பிரதித் தலைவர்- அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
- செயலாளர்- ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
- உறுப்பினர்- மதங்களுக்கிடையிலான ஜனாதிபதி ஆலோசனை சபை
- பணிப்பாளர்- Knowledge Box ஊடக நிறுவனம்
- அரசாங்க பாடத்திட்ட இஸ்லாம் பாட ஆலோசகர்
- ஆலோசகர்- அரபுக்கலாசாலைகளின் ஒன்றியம்
- ஆலோசகர்- ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (Sri Lanka Muslim Media Forum)
- உறுப்பினர்- மாகொல்ல முஸ்லிம் அநாதையில்ல நிர்வாக சபை
- ராபிததுன் நளீமிய்யீன் உயர் மட்;ட ஆலோசகர் ( ஜாமிய்யா நளீமிய்யாவின் பழைய மாணவர் அமைப்பு)
- அரபு மத்ரஸா பாடத்திட்ட ஆலோசகர்
- இஸ்லாமிய சிந்தனை (முத்திங்கள் ஆய்வு சஞ்சிகை) நிர்வாக ஆசிரியர்
- அகரம், சிட்டு (மாதாந்த சிறுவர் சஞ்சிகை) ஆலோசனைக் குழு உறுப்பினர்
- உறுப்பினர்- பத்வாக் குழு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
- ஆலோசகர்- கபாலா (KAFALA) நிறுவனம், கொழும்பு
- உறுப்பினர்- அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மத்திய செயற்குழு
(மற்றும் பல உள்நாட்டு சன்மார்க்க, சமூக சேவை, கல்வி நிறுவனங்களின் ஆலோசகராகவும,; இஸ்லாமிய நிதித்துறை ஆலோசகராகவும் இருக்கின்றார்)
தஃவா
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் மாணவப் பருவம் முதலே இஸ்லாமிய அழைப்புப் பணியில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இலங்கை இஸ்லாமிய தஃவாக் களத்தின் முன்னோடி தாஈக்களில் ஒருவர். தமிழ், சிங்களம், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையுள்ள இவர் நாடறிந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், தஃவா பயிற்றுவிப்பாளராகவும் அறியப்பட்டுள்ளார். இஸ்லாமிய தஃவா தொடர்பில் பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களையும் மேற்கொண்டு வருகின்றார்.
எழுத்துத்துறை
நளீமிய்யாவின் முத்திங்கள் வெளியீடான இஸ்லாமிய சிந்தனையின் நிர்வாக ஆசிரியராக இருந்து வருகின்றார். அல்ஹஸனாத், இஸ்லாமிய சிந்தனை போன்ற சஞ்சிகைகளிலும் இவர் தொடர் கட்டுரைகளை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய நாளிதழ்களிலும் இவரது
கட்டுரைகள் வெளிவருகின்றன. மேலும், தமிழ்நாடு, மலேசியா முதலான நாடுகளில் வெளிவருகின்ற சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. இவர் இஸ்லாமிய சிந்தனையில் தொடராக எழுதிய ஹதீஸ் விளக்கம், பிக்ஹுஷ் ஷரீஆ வானொலி முஸ்லிம் சேவை உரைகள் பின்னர் நூல்களாக வெளிவந்துள்ளன. அதேபோல் இஸ்லாமிய சிந்தனைத் தெளிவை வழங்கும் வகையில் நூல்களையும் எழுதியுள்ளார்:
- நபிவழி 1,2
- சன்மார்க்க சட்ட விளக்கம்
- இஸ்ரா, மிஃறாஜ் ஒரு புதிய பார்வை
- கல்வி கற்றல், கற்பித்தல் இஸ்லாமிய நோக்கு
- ஹலால், ஹறாம் விதிமுறைகளும் உணவு,உடை வரையறைகளும்
- நாளும் ஓத நபிகளாரின் திக்ருகள்
- பெண்கள் தொழில் பார்த்தல்- ஓர் இஸ்லாமிய நோக்கு
- மறைவழி
- வர்த்தகம்- ஹலாலும், ஹறாமும்
நபிவழி, சன்மார்க்க சட்ட விளக்கம், கல்வி கற்றல் கற்பித்தல் ஆகிய நூல்கள் வாசகர் வரவேற்பைப் பெற்றதுடன் பல பதிப்புகளையும் கண்டுள்ளன.
அரச பாடசாலைகளின் இஸ்லாம் பாட நூல்களை தயாரிப்பதில் கடந்த கால்நூற்றாண்டு காலமாக தனது பங்களிப்பை செய்து வரும் இவர் தேசிய கல்வி நிறுவகத்தின் தொலைக்கல்வி நிகழ்ச்சித் திட்டத்துக்கான பல மொடியுல்களையும் தயாரித்து வழங்கியுள்ளார்.
தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்கிகள்
இலங்கை முஸ்லிம் சேவையில் சுமார் மூன்று தசாப்த காலமாக தொடர் பேச்சுக்கள்;, விஷேட தின உரைகள், குத்பாப் பிரசங்கங்கள்,கலந்துரையாடல்கள், அல்குர்ஆன் விளக்கங்கள், றமழான் நிகழ்ச்சிகள், மணிமொழிகள், இஸ்லாமிய நற்சிந்தனை போன்ற நிகழ்ச்சிகளில் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். தற்போது 'அல் அஸ்மாஉல்லாஹில் ஹூஸ்னா' என்ற தலைப்பிலான இவரது தொடர் பேச்சு முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. இவை தவிர 'அரபா தின நேரடி அஞ்சல்' முஸ்லிம் நாடுகள் (தொடர் பேச்சு) ' முஸ்லிம் சிறுபான்மை நாடுகள் (தொடர் பேச்சு) 'நடைமுறை வாழ்வில் இஸ்லாம் (தொடர் பேச்சு) போன்ற இவரது வானொலி நிகழ்ச்சிகள் நேயர்களது வரவேற்பைப் பெற்றன.
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கடந்த கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக பங்குபற்றி வருகின்றார். கலாநிதி ஷூக்ரி அவர்களோடு இவர் இணைந்து நடத்திய 'பைத்துல் ஹிக்மா-அறிவரங்கம்' தொடர் நிகழ்ச்சி சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
காலத்திற்குத் தேவையான தலைப்புகளில் இவர் நிகழ்த்திய உரைகளும், கலந்துரையாடல்களும் சமூக வலையத்தளங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
இவரது படைப்புக்களையும், ஆக்கங்களையும் காண விரும்புவோர் இவரது பெயரில் கடந்த 10 ஆண்டு காலமாக இயங்கும் வலையத்தளத்தை தரிசிக்கலாம். (www.sheikhagar.org)
கருத்தரங்குகள், மாநாடுகள், கல்விமுகாம்கள்
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும், கல்வி முகாம்களிலும் பங்குபற்றி வருகின்றார். மேலும் அவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளதோடு ஆய்வுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்;.
அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.
- பித்அத் மாநாடு
- ஸகாத் கருத்தரங்கு
- மத்ஹப்கள் பற்றிய கருத்தரங்கு
- அல்குர்ஆன்,ஸூன்னா கருத்தங்கு
- பிக்ஹுல் அகல்லியாத் கருத்தரங்கு
- இஜ்திஹாத் கருத்தரங்கு
- கற்றல்,கற்பித்தல் கருத்தரங்கு
- சமூக ஒற்றுமை கருத்தரங்கு
- ஷீஆ சிந்தனைக்கெதிரான கருத்தரங்கு
- ஸீரா மாநாடு
- ஸ்ரீலங்கா மாணவர் இயக்கத்தின் இளைஞர்கள் மாநாடு
- உலக முஸ்லிம் லீக்கின் (றாபிதா) சர்வதேச மாநாடு
- மதங்களுக்கிடையிலான கலந்துரையாடல் சர்வதேச மாநாடு- கடார்
- திருக்குர்ஆன் மாநாடு – மலேசியா
- உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு – மலேசியா
- சர்வதேச ஹஜ் மாநாடு - ஸஊதி அரேபியா
பயிற்சிக் கருத்தரங்குகள்
- இஸ்லாம் பாட ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- அரபுப் பாட ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- முஸ்லிம் ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- முஸ்லிம் அதிபர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- உலமாக்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- தாஈக்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- கதீப்மார்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- பெண் தாஈக்கள்,ஆலிமாக்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- அஹதிய்யா ஆசிரிய, ஆசிரியைகளுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- அரபு கலாசாலைகளின் விரிவுரையாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- தொழில் அதிபர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- இளைஞர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
- மாணவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகள்
தஃவாப் பயணங்கள்
சர்வதேச ரீதியாகப் பல நாடுகளுக்கும் தஃவாப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். அவற்றுள் பின்வரும் நாடுகளுக்கு இவர் தொடர்ச்சியாக தஃவாப் பயணங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- அவுஸ்திரேலியா
- லண்டன்
- குவைத்
- மலேசியா
- பஹ்ரைன்
- சிங்கப்பூர்
- கடார்
- ஸஊதி அரேபியா
- தாய்லாந்து
- ஓமான்
ஆர்வம் காட்டும் துறைகள்
. ஹதீஸும் அதன் கலைகளும்
. தஃவா
. இஸ்லாமிய கற்றல், கற்பித்தல் தொழிற்பாடு
. இஸ்லாமிய உளவளத்துணை
. பிக்ஹுல் அகல்லியாத் (சிறுபான்மையினருக்கான பிக்ஹ்)
. இஸ்லாமிய நிதி, வங்கியல்
சிந்தனையும் ஆளுமையும்
இஸ்லாமிய எழுச்சி, சமூகமாற்ற தளங்களில் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்களில் பங்கெடுத்துள்ள இவர் தான் முன்வைக்கும் சிந்தனைக்கு முழுப்பொறுப்புள்ளவராக நடந்துகொள்கிறார். இஸ்லாமிய சிந்தனையில் நடுநிலைப் போக்கைக் கடைப்பிடிக்கும் இவர் பிரதான நீரோட்டத்தில் பணிபுரிவதையும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையும் வலியுறுத்தி வருகின்றார். இஸ்லாமிய அமைப்புக்களுக்கிடையில் இடைவினையாற்றுதல், சகஜீவன நிலை நின்று இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பல்வேறு நாகரிக, மதப் பண்பாடுகளுக்கிடையில் உரையாடல்களை நிகழ்த்துதல் இவரது அக்கறைக்குரிய விடயங்களாகும்.
இஸ்லாமியத்துறையை அதன் நியமங்களுக்கேற்பவும் அந்த நியமங்களிலிருந்து வழுவாமலும் அதற்குரிய ஒழுகலாற்று நடைமுறையை மீறாமலும் கொண்டு செல்லும (Discipline) இவர் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் அடிநாதமாக விளங்குகின்றது. அதாவது விதிமுறை நோக்கு தவறா பயில்முறையே இவர் கடைபிடிக்கும் நடைமுறையாகும்.
எளிமை, தெளிவு, மரபில் புத்துயிர்ப்பாக்கம், சர்வதேசத்தன்மை இவர் எழுத்திலும் பேச்சிலும் விரவிக்கிடக்கும் ஆளுமைப்பண்புகளாகும்.
ஷெய்க் அகார் அவர்களின் புலமை வலு அறபு வழியிலான நவீன இஸ்லாமிய சிந்தனை நிலை நின்று இன்றைய முஸ்லிம் வாழ்வியல் எதிர்நோக்கும் நெருக்கடிகளைப் பரிசீலிப்பதாகும். அவரது எழுத்தும் உரையும் தெரிந்த கருத்துப்புலங்களுக்கு நம்மை அறியாத முறையில் அழைத்துச் செல்வதுதான். வேறு வார்த்தையில் கூறுவதாயின் இவர் எங்கு பேசினாலும் உரையாடினாலும் அங்கே காதுகளும் டயவநளவஒட்டிக்கொள்ளும் அளவுக்கு ஓர் ஈர்ப்பிருக்கிறது. நேரம் பற்றிய பிரக்ஞை எழாது கால வெளியைக் கடந்து செல்வதுதான் அவரது உரையின் அற்புதம். அனர்த்தம் பற்றிய இஸ்லாமிய நோக்கில் ஆற்றிய உரையும் சிறுபான்மைக்கான பிக்ஹ் பற்றிய ஆய்வுரையும் செழுமையும் முழுமையும் கொண்டதாகும்.
சுன்னா பற்றிய ஆழமான அறிவும், வரலாற்றுப் பிரக்ஞையும் சர்வதேச ஊடாட்டங்களும், தஃவா, சமூகப் பணிகளும் அவர் ஆளுமையைப் பளிச்சிட்டுக் காட்டுகின்றன. இச்சிறிய தீவிலிருந்து அவரது ஆளுமை வெளிப்பட்டு சர்வதேச பரப்புக்குள் விகசிக்கத் தொடங்கியுள்ளது.
