வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - சிதைந்த உடலைக் குளிப்பாட்டல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
சிதைந்த உடலைக் குளிப்பாட்டல்
கேள்வி: ஒரு முஸ்லிமின் உடல் எரிக்கப்பட்டு எலும்பு மாத்திரம் எஞ்சி இருக்கும் போதும், உடல் எரிகாயத்துடன் இருக்கும் போதும் அதனைக் குளிப்பாட்டுவது போன்ற ஜனாஸாவுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டுமா?
பதில்: உடலின் ஒரு பகுதி எஞ்சி இருப்பினும் அதனைக்குளிப்பாட்ட வேண்டும், கபனிடவும் தொழுவிக்கவும் வேண்டும் என்பது இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், இப்னு ஹஸ்ம் போன்றோரின் கருத்தாகும். ஒரு முஸ்லிமான மையித்தின் கை,கால் போன்ற ஓர் உறுப்பு மாத்திரமே காணப்படினும், அதனைக் கழுவியே அடக்கம் செய்யவேண்டும் என்பது அறிஞர்கள் பலரின் தீர்ப்பாகும். ஜமல் யுத்தத்தின்போது இறந்த ஒரு மனிதரின் கையொன்றை ஒரு பறவை தூக்கிச் சென்று மக்காவில் எறிந்தது. அதிலிருந்த மோதிரத்தைக் கொண்டு குறித்த நபரை இனங்கண்டு, அதனைக் கழுவி, தொழுவித்து அடக்கம் செய்தனர். இது பல ஸஹாபாக்கள் முன்னிலையில் இடம் பெற்றது. இச்சம்பவத்தைத் தான் கேள்விப்பட்டதாக இமாம் ஷாபிஈ அறிவிக்கின்றார்.
அபூ அய்யூப் (ரலி) அவர்கள் ஒரு காலுக்கும், உமர் (ரலி) அவர்கள் ஓர் எலும்புக்கும் தொழுகை நடத்தியுள்ளார்கள் எனத் தெரிய வருகின்றது. (ஆதாரம்-அஹ்மத்)
உடலின் அரைப்பாகத்துக்கு மேல் எஞ்சி இருந்தாலேயே அதனைக் குளிப்பாட்டவும், அதற்காகத் தொழுகை நடாத்தவும் வேண்டும் என்பது இமாம்களான அபூஹனீபா, மாலிக் ஆகியோரினது அபிப்பிராயமாகும்.
நீர் கொண்டு கழுவுவதனால் உடல் சிதையும் என்றிருப்பின் தயமமும் செய்விக்கலாம் என்று கருதும் அறிஞர்களும் உள்ளனர்.
