வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
ஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்
கேள்வி: ஸக்காத் விதியாக்கப்பட்ட ஒருவர் தன் ஸகாத்திலிருந்து தன் உடன் பிறப்புகளுக்கும் இனபந்துக்களுக்கும் வழங்குவது ஆகுமா?
பதில்: ஒருவர் தனது ஸக்காத்தைத் தூரத்து உறவினர்களுக்கு வழங்கலாம் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால், நெருங்கிய இனபந்துக்களான பெற்றோர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், பெரிய, சிறிய தந்தைமார்-தாய்மார், மாமிமார், மாமாமார் போன்றோருக்கு ஒருவர் தனது ஸக்காத்தைக் கொடுக்கலாமா, என்பது விரிவாக விளக்கப்படவேண்டியதொன்றாகும்.
ஸக்காத் கொடுக்கும் ஒருவர் தனது நெருங்கிய உறவினரொருவர்க்கு ஆமில் அல்லது இறைபாதையில் போராடுபவர் அல்லது கடன்காரர் அல்லது பிரயாணி என்ற வகையில் தனது ஸக்காத்தைக் கொடுத்துதவ முடியும். ஆனால், இத்தகைய நெருங்கிய இனபந்துக்களுக்கு பக்கீர், மிஸ்கீன் பங்கிலிருந்து வழங்குவதே சர்ச்சைக்குரியதாக உள்ளது. இங்கும் ஒருவரின் ஸக்காத்தை, அவர் அதனை ஒப்படைத்த அரசோ அல்லது நிறுவனமோ அவரது இனபந்துக்களுக்குக் கொடுப்பது பிழையானதல்ல. ஆனால், ஒருவர் தனது ஸக்காத்தைத் தானே பகிர்வதாக இருப்பின், தனது நெருங்கிய இனபந்துகளுக்கு வழங்கலாமா எனும் விடயத்தில் விரிவான விபரங்கள் கூறப்படுகின்றன.
ஒருவர் தனது ஸக்காத் நிதியிலிருந்து தனது பெற்றோருக்கோ, பிள்ளைகளுக்கோ கொடுக்க முடியாது என்பது தெளிவான தீர்ப்பாகும். ஏனெனில், மகனின் சொத்து பெற்றோரினதும் சொத்தாகக் கொள்ளப்படுகிறது. அவ்வாறே தந்தையின் ஓர் அங்கமாகவே பிள்ளைகள் இருக்கின்றனர்.
ஒருவர் தனது ஸக்காத்தைத் தன் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியாதது போலவே தன் மனைவிக்கும் வழங்க முடியாது. ஏனெனில், ஒருவரது மனைவியும் அவரின் ஒரு பகுதியாகவே கொள்ளப்படுகின்றாள்.
ஒரு கணவன் தன் மனைவிக்குத் தனது ஸக்காத்தைக் கொடுக்க முடியாது என்றிருப்பினும், ஒரு மனைவிக்குத் தனது ஸக்காத் நிதியிலிருந்து தன் கணவனுக்கு உதவ முடியும் என்ற கருத்து பல அறிஞர்களாலும் வலியுறுத்தப்படுகின்றது. இக்கருத்துக்கு நம்பகமானதும் உறுதியானதுமான பல ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒருவரது பெற்றோர், பிள்ளைகள், மனைவி ஆகியோரல்லாத பிற இனபந்துகளுக்கு (உம்: சகோதர, சகோதரிகள், மாமா, மாமி போன்றோர்); அவரது ஸக்காத்தைக் கொடுக்கலாமா, என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ஒருவர் தனது ஸக்காத் பொருளிலிருந்து குறித்த இனபந்துகளுக்கு வழங்க முடியும் என்பதே பலமான கருத்தாகக்கொள்ளத்தக்கதாகும். ஹனபி மத்ஹபின் இமாம்கள், இமாம் யஹ்யா, இமாம் அஹ்மத் போன்றோரும் இன்னும் பலரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர். இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் போன்ற ஸஹாபாக்களும், ஸயீத் இப்னு முஸய்யிய், அல்-ஹஸன், இப்ராஹீம், முஜாஹித், அல்-ழஹ்ஹாக் போன்ற தாபிஈன்களும் மேற்படி கருத்தை ஆதரிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஏழைக்குக் கொடுக்கப்படும் ஸதகா (ஸக்காத்) வெறும் ஸதகா மாத்திரமே. ஆனால், இனபந்துகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸதகாவோ இரண்டு கூலிகளைத் தரக்கூடியதாகும். ஏனெனில், அது ஸதகாவாகவும் இனபந்துக்களுடன் கொண்ட உறவாகவும் உள்ளது.' (அஹ்மத், நஸாயி, திர்மிதி) எனும் நபிமொழியும் மேற்போந்த கருத்துக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.
ஸக்காத் பெறத்தகுதியுடையோர் பற்றிக் குறிப்பிடுகின்ற சட்ட வசனங்கள், பக்கீர்களை, உறவினர்கள், அந்நியர்கள் என்று பிரித்துக் காட்டாது பொதுப்படையாகவே வந்துள்ளன. மனைவி, பெற்றோர், குழந்தைகள் ஆகியோரைப் பொறுத்தவரை ஒருவரது ஸக்காத்திலிருந்து அவர்களுக்குக் கொடுக்க முடியாது என்பது இஜ்மாவினது அடிப்படையிலும் மற்றும் பல ஆதாரங்களின் அடிப்படையிலும் நிறுவப்பட்டுள்ளது.
