வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - மிருகங்களின் மலசலம்
Last Updated (Saturday, 01 November 2008 12:56) Thursday, 30 October 2008 11:22
மிருகங்களின் மலசலம்
கேள்வி: மாடு போன்ற தாவர பட்சினிகளின் மலம் நஜீஸானதா? தயவுசெய்து தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.
பதில்: எம்மிருகங்களின் மாமிசத்தை உண்பதற்கு ஷரீஅத்தில் அனுமதி இல்லையோ, அவற்றின் மலசலமும் நஜீஸாகும்.
உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மிருகங்களின் மலசலத்தைப் பொறுத்த வரையில் அவை நஜீஸாவை அல்ல என்பதே இமாம்களான மாலிக், அஹ்மத் போன்றோரினதும் சில ஷாபியாக்களினதும் அபிப்பிராயமாகும். 'இவற்றின் மலசலம் நஜீஸானவை என ஸஹாபாக்களில் எவரும் கருத்துக் கொண்டிருக்கவில்லை. உண்மையில், இவை நஜீஸானவை எனக் கூறும் கருத்து நூதனமான ஒன்றாகும். இதற்குச் சார்ப்பாக எந்த ஒரு நபித்தோழரும் இருந்ததில்லை' என்கிறார் இமாம் இப்னு தைமியா (ரஹ்).
அனஸ் (ரலி) கீழ்வருமாறு அறிவிக்கிறார் 'ஒரு தடவை உகல், அல்லது உறைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனாவுக்கு வந்த வேளையில் ஒருவகை வயிற்று வலியினால் பீடிக்கப்பட்டனர். அதற்கு நபியவர்கள் ஒட்டகததின் பாலையும் சலத்தையும் பெற்றுப்பருகுமாறு அம்மக்களைப் பணித்தார்கள்.' (ஆதாரம்: அஹ்மத், புகாரி, முஸ்லிம்)
இந்நபிமொழியில் இருந்து ஒட்டகத்தின் சிறுநீர் சுத்தமானது என்பதனை விளங்க முடிகிறது. இதனை அடிப்படையாக வைத்து, அறுத்து உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மிருகங்களினது சிறுநீர் போன்றவையும் சுத்தமானவையாகும் எனும் கருத்தைக் கியாஸின் அடிப்படையில் பெற முடிகிறது.
'இது குறித்த அம்மனிதர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாகக் கூறப்பட்ட ஒரு சடடமாகும் எனக் கூறும் வாதம் ஏற்புடையதல்ல, ஏனெனில், உரிய ஆதாரம் இன்றி எதுவும் பிரத்தியேகமான குறிப்பான சட்டங்களாவதில்லை' எனக்கூறும் இமாம் இப்னுல் முன்திர், தொடர்ந்து கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: 'எத்தகைய ஆட்சேபனையும் இன்றி சந்தைகளில் ஆட்டின் மலத்தை விற்பனை செய்வதற்கு அறிஞர்கள் அனுமதி அளித்து வந்துள்ளமையும் ஒட்டகத்தின் கழிவுப்பொருட்களை மக்கள் அன்றும் இன்றும் தமது மருந்து வகையில் சேர்த்துப் பாவித்து வருகின்றமையும் அவை சுத்தமானவை என்பதனையே காட்டுகிறது' என்கிறார்.
இவ்விடயம் பற்றி இமாம் ஷவ்கானி கூறும் கருத்தை இறுதியாகக் குறிப்பிட முடியும்: அடிப்படையைக் கருத்திற் கொண்டு, உணவாக உட்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து மிருகங்களினதும் கழிவுகள் அதாவது மலசலம் சுத்தமானது என்பதே வலுவான கருத்தாகக் கொள்ளப்பட முடியும்.
