கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள் தொடர்பானவை. - வாடகைக் கொடுப்பனவு பற்றிய தீர்ப்பு
Last Updated (Sunday, 02 November 2008 07:13) Thursday, 30 October 2008 08:56
வாடகைக் கொடுப்பனவு பற்றிய தீர்ப்பு
கேள்வி: தற்போது நடைமுறையிலுள்ள வியாபார முறைகளில் வாடகைக்கொள்வனவும் ஒன்றாகும். இம்முறைப்படி பணம் தவணையடிப்படையில் செலுத்தப்படுகிறது. பணம் முழுவதையும் செலுத்தி முடிக்கும் போது பொருளை வாங்கும் தினத்திலிருந்த விலையை விட ஒரு தொகை மேலதிகமாகவே அறவிடப்படுகிறது. இம்மேலதிகத் தொகை வட்டியாகுமா? குறித்த வாடகைக்கொள்வனவு முறை ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில்: நீங்கள் குறிப்பிடும் வாடகைக் கொள்வனவு முறையைச் சில அறிஞர்கள் வட்டியெனக் கருதி, ஹராமான கொடுக்கல் வாங்கல் பட்டியலில் அடக்குகின்றனர். ஆயினும், பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் இதனை அனுமதித்துள்ளனர். இவ்வமைப்பை ஹராமெனக் கூறும் எந்தச் சட்ட வசனமும் இல்லாதிருப்பதனாலும், இது எல்லா வகையிலும் வட்டியை ஒத்திராததாலும் இவ்வியாபார முறையை அனுமதிக்கலாம் என இவர்கள் கருதுகின்றனர். ஷாபிய்யாக்கள், ஹனபிய்யாக்கள் உட்பட பெரும்பாலான அறிஞர்கள் இக்கருத்தை ஆதரிப்பதாக இமாம் அஷ்ஷெளக்கானி குறிப்பிடுகிறார். ஆயினும் ஒரு பெருளை உடன் பணத்திற்கு வாங்கும்போது அதற்குரிய விலைக்கும் தவணைக் கட்டணத்தினடிப்படையில் வாங்கும் போது அதற்குக் குறிக்கப்படும் விலைக்குமிடையில் மித மிஞ்சிய, நியாயமற்ற வித்தியாசம் இருத்தல் கூடாது என்பதனைக் கருத்திற் கொள்ளல் வேண்டும்.
