கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள் தொடர்பானவை. - சேமிப்பு வைப்புக்கான வட்டி
Last Updated (Sunday, 02 November 2008 07:13) Thursday, 30 October 2008 08:56
சேமிப்பு வைப்புக்கான வட்டி
கேள்வி: நடைமுறையில் உள்ள, வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில் சேமிப்புகளுக்காக வழங்கப்படும் வட்டிப்பணத்திற்குரிய தீர்ப்பு என்ன? அவற்றை நற்கருமங்களுக்காகச் செலவு செய்ய முடியுமா? நற்கருமங்கள் எனக் குறிப்பிடப்படுபவை எவை? விளக்கம் தேவை?
பதில்: வங்கிகள் தமது வாடிக்கையாளரின் வைப்புகளுக்கு வழங்கும் வட்டியும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ள வட்டியைச் சார்ந்ததாகும். எனவே, அவ்வட்டித் தொகை யாருக்கு வழங்கப்படுகின்றதோ, அவருக்கு அது ஹலாலாகாது. அதனை அவர் பெற்றுக்கொள்ள முடியாது. அது அவருக்குரியதல்ல. அதே நேரத்தில் அத்தொகை வங்கிக்குரியதுமல்ல.
எனவே, இத்தகைய வட்டிப்பணத்தை தர்மம் செய்து விடுவதே சரியானது. சில அறிஞர்கள் இப்பணத்தை தர்மம் செய்யும் நோக்கத்துடன் கூடப் பெறக்கூடாது என்றும், அதனை அப்படியே வங்கியிலேயே விட்டு விட வேண்டும் அல்லது, எடுத்து எறிந்து விட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால், இக்கருத்து (பேணுதலின் அடிப்படையில் பிறந்த ஒன்றாக இருப்பினும்) ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இக்கருத்து இஸ்லாத்தின் சில அடிப்படைகளுடன் மோதுவதாக உள்ளது. செல்வத்தை எவரும் பயன்படுத்தாது வீணாக்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
ஆகவே, வட்டிப்பணம் உள்ளவர், அது அவருக்கு சொந்தமற்றது என்ற வகையில், அதனை ஏழை எளியவர்களுக்கோ அல்லது ஒரு நற்பணிக்கோ தர்மம் செய்து விட வேண்டும். முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் எத்தகைய ஒரு நலனுக்காகவும் அதனைச் செலவு செய்ய முடியும் என்பதே யூஸுப் அல்கர்ளாவி போன்ற நவீன அறிஞர்களினதும் 'மஜ்மஉல் பிக்ஹிய்யில் இஸ்லாமி' போன்ற இஸ்லாமிய சட்ட அமைப்புக்களினதும் கருத்தாகும். வட்டிப்பணம் அதனைப் பெற்றவருக்கோ அல்லது வங்கிக்கோ சொந்தமானதல்ல என்ற காரணத்தினால், அது பொதுப்பணமாகக் கொள்ளப்படும். ஹராமான எல்லாச் செல்வங்களுக்கும் இதுவே சட்டமாகும்.
ஒருவர் தனது வைப்புக்குக் கிடைக்கும் வட்டிப்பணத்தை ஹராம் என்ற வகையில் பெறாது, வங்கியில் விட்டு வைப்பது வங்கி பலமடையவோ அல்லது அது அப்பணத்தை இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவோ இடம் ஏற்படுகிறது.
