கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள் தொடர்பானவை. - பதுக்கல்
Last Updated (Sunday, 02 November 2008 07:13) Thursday, 30 October 2008 08:56
பதுக்கல்
கேள்வி: பதுக்கல் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? இதில் பிரதான உணவுப் பொருட்கள் மாத்திரம் அடங்குமா அல்லது உப உணவுப்பயிர்களான கோப்பி, மிளகு, புளி போன்றவைகளும் அடங்குமா? விளக்கம் தேவை.
பதில்: விலையேற்றம் கருதிப் பண்டங்களைப்பதுக்குவது ஹராமானதாகும். பேராசையும், பிறர் நலன் பேணாத்தன்மையுமே ஒருவனை இத்தீயச்செயலைச் செய்யத் தூண்டுகின்றன. பதுக்கலினால் மக்களுக்கு எத்தகைய அசௌகரியங்கள் ஏற்படும் என்பது தெளிவானதே. இவற்றைக் கருத்திற்கொண்டே இஸ்லாம் பதுக்கலைத் தடை செய்துள்ளது. பதுக்கலைக் கண்டிக்கும் சில நபி மொழிகளைக் கீழே நோக்குவோம்.
'பதுக்கியவன் பாவி.' (அபூதாவூத், முஸ்லிம்)
'உணவுப் பொருளை நாற்பது நாட்களுக்குப் பதுக்கியவன் அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் கொள்கிறான். அல்லாஹ்வும் அவனை விட்டு நீங்கிக் கொள்கிறான்.' (அஹ்மத், அல்ஹாகிம்)
'மிகக் கெட்ட அடியான் பதுக்கற்காரனே. விலையிறக்கத்தைக் கேட்டு அவனுக்குக் கவலையைக் கொடுக்கிறது. விலையேற்றத்தைக் கேள்வியுற்றாலோ மகிழ்ச்சியுறுகிறான்.' (றஸீன்)
அனைத்து வகையான பதுக்கல்களும் ஹராமானவையல்ல. பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படுவதற்கு அறிஞர்கள் மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றனர். அவையாவன:
1. பதுக்கிய பொருள் பதுக்கியவனினதும் அவனது பராமரிப்பிலிருப்போரினதும் ஒருவருடத்தேவைக்கும் போதுமான அளவை விடவும் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு ஒருவருடத்துக்குத் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தேவையான பொருளைச் சேமித்து வைக்க அனுமதியுண்டு.
2. குறித்த பொருளின்பால் மக்களுக்குள்ள கடுந்தேவையைக் கருத்திற்கொண்டு, கூடிய விலையில் விற்க வேண்டுமென்ற நோக்கில், பொருளின் விலையேற்றத்தை எதிர்பார்த்துப் பதுக்கி இருத்தல் வேண்டும்.
3. பதுக்கப்பட்ட பொருளின் பால் மக்களுக்குத் தேவையுள்ள வேளையில், பதுக்கி இருத்தல் வேண்டும். மாறாக பல வியாபாரிகளிடம் குறித்த பொருள் இருந்து, மக்களுக்கு அதன் பால் தேவையில்லாதபோது அதனைத் தேக்கி வைப்பதும், சேமித்து வைப்பதும் தடை செய்யப்பட்ட பதுக்கல் அல்ல. ஏனெனில். இதனால் மனிதருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எத்தகைய பொருட்களைப் பதுக்குவது கூடாது என்பதில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
சில அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது சொந்தத் தானியங்களையோ உற்பத்திகளையோ தேக்கி வைப்பது பிழையானதல்ல. இமாம்களான ஷாபிஈ, அஹ்மத் ஆகிய இருவரினதும் அபிப்பிராயப்படி அடிப்படையான அத்தியாவசிய உணவுப் பண்டங்களில் மாத்திரமே பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படும்.
மேலும் பல அறிஞர்கள் அனைத்துப் பண்டங்களிலும் (மேலே கண்ட நிபந்தனைகள் காணப்படுமிடத்து) பதுக்கல் செய்வது ஹராமானதாகும் எனக் கூறுகின்றனர்.
