கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள் தொடர்பானவை. - வட்டிக்கு கடன் வாங்குதலும் கொடுத்தலும்
Last Updated (Sunday, 02 November 2008 07:13) Thursday, 30 October 2008 08:56
வட்டிக்கு கடன் வாங்குதலும் கொடுத்தலும்
கேள்வி: வட்டிக்கு கடன் வாங்குபவர் மீது குற்றமா? அல்லது வட்டிக்குக் கடன்கொடுப்பவர் மீது குற்றமா? விளக்கம் தரவும்.
பதில்: இருவரும் குற்றவாளிகள் என்பதுவே ஷரீஅத்தின் கருத்தாகும். வட்டிக்குக் கடன் கொடுத்தவர் மாத்திரம் குற்றவாளியாக முடியாது. மாறாக, கடன் பெற்று வட்டிக்கு கொடுப்பவரும் பாவியாகக் கொள்ளப்படல் வேண்டும். ஏனெனில், அவரும் பாவத்திற்கு உடந்தையாக இருக்கிறார். ஏன்? கடன் பெற்று வட்டி செலுத்துபவர் மாத்திரமன்றி, வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களுக்கு எழுத்து வேலை பார்ப்போரும், சாட்சிகளாக இருப்போரும் கூடக் குற்றவாளிகளே.
'வட்டி உண்பவரையும் உண்ணக் கொடுப்பவரையும் அதற்குச் சாட்சியாக இருப்போரையும் அதனை எழுதுபவரையும் அல்லாஹ் சபிக்கிறான்' (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)
ஆயினும் வட்டிக்குக் கடன்பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஒருவருக்கு இருப்பின் இச்சந்தர்ப்பத்தில் வட்டி பெறுபவரே குற்றவாளியாவார். ஆனால் இந்நிலைக்குப் பல நிபந்தனைகள் உண்டு. அவை கீழ்வருமாறு:
1. உண்மையான தேவையாக இருத்தல் வேண்டும். ஆடம்பரத் தேவை ஒன்றுக்காகவோ, அடிப்படைத் தேவை ஒன்றை மேலும் வசதிப்படுத்திக் கொள்வதற்காகவோ பெறப்பட்ட கடனாக இருத்தல் கூடாது. அதாவது குறித்த தேவை நிறைவேறாத போது ஆபத்தும் அழிவும் ஏற்படும் நிலை இருத்தல் வேண்டும். உதாரணத்திற்கு உணவு, உடை நோய்க்கான சிகிச்சை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
2. சரியாக தேவையின் அளவுக்கே இச்சலுகையைப் பயன்படுத்தல் வேண்டும். உதாரணமாக 900 ரூபாய் தேவையாக இருப்பின் 1000 ரூபாயை (வட்டிக்கு) கடனாகப் பெறுவது கூடாது.
மறுபக்கத்தில் தனது இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற முழுமுயற்சி செய்து பார்த்தல் வேண்டும். அடுத்த முஸ்லிம் சகோதரர்கள் (வட்டியின்றி) இவருக்கு (க்கடன்) உதவி வழங்கக் கடமைப்பட்டுள்ளனர். வேறு எத்தகைய வழியும் இல்லையெனக் காணும் போதே வட்டிக்குக் கடன் பெறத் துணிய வேண்டும். அதிலும் வரம்பு மீறாது எல்லையைக் கடக்காது நடந்து கொள்ளல் வேண்டும். அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் அருளும் அன்பும் கொண்டவனாகவும் இருக்கின்றான்.
