கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள் தொடர்பானவை. - தலாக்
Last Updated (Sunday, 02 November 2008 07:13) Thursday, 30 October 2008 08:56
தலாக்
கேள்வி: இஸ்லாமிய ஷரீஆவின்படி ஒருவரது மனைவியை அவர் தலாக் சொல்ல நேரிட்டால், அவர் விரும்பிய நேரத்தில் தலாக் சொல்ல முடியுமா? அல்லது சொல்லக் கூடாத சந்தர்ப்பங்களும் உண்டா? விரிவான விளக்கம் தேவை.
பதில்: கீழ்வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் தனது மனைவியைத் 'தலாக் சொல்லுவது ஹராமானதாகும்.
1. மனைவி ஹைளுடனோ, நிபாஸுடனோ இருக்கும் நிலை.
2. குறித்த இரண்டிலிருந்தும் சுத்தமாக இருப்பினும், அச்சுத்தமான காலத்தில் உடலுறவு கொண்ட நிலை.
மேலே குறிப்பிட்ட இரு சந்தர்ப்பங்களிலும் தனது மனைவியைத் தலாக் கூறுபவர் பாவியாவார்.
குறித்த சந்தர்ப்பங்களில் கூறப்படும் தலாக் 'தலாக் பிதஈ' (ஸுன்னத்தான் அமைப்புக்கு முரணான தலாக் என வழங்கப்படுகின்றது.) ஒரேவார்த்தையில் மூன்று தலாக்கையும் கூறுதல், ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று முறைகளாக தலாக் கூறுதல் ஆகிய இரண்டும் தலாக் பிதஈ, ஹராமானதாக இருப்பினும் அது நிறைவேறும், செல்லுபடியாகும் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். தலாக் கூறுப்படும் பெண்களுக்கேற்படும் சிரமங்களைத் தவிர்ப்பது குறித்த நிலைகளில் தலாக் கூறுதல் விலக்கப்பட்டுள்ளமைக்கான ஒரு காரணமாகும்.
ஹைழ், நிபாஸ் ஆகிய நிலைகளில் கணவனுக்கு மனைவியுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிடைக்காமையினால், அவன் உணர்ச்சி வசப்பட்டு அவள் மீது அதிருப்தியுற்றுத் தலாக் கூற முற்படலாம். எனவே, சுத்தமடையும் வரை எதிர்பார்த்திருந்து இறுதித் தீர்மானத்திற்கு வருவது நல்லதல்லவா? மேலும், சுத்தமான நிலையில் உடலுறவு கொண்டிருந்தால், சிலவேளை அவள் கருவுற்றிருக்க இடமுண்டு. அவசரப்பட்டுத் தலாக் சொல்லாமல் தாமதிப்பதனால், அவள் கருவுற்றிருப்பதை அறிந்து, கணவனின் மனம் மாறவும் இடமுண்டல்லவா? இத்தகைய விடயங்களைக் கருத்திற் கொண்டும் மேலே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் 'தலாக் கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது.
