கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள் தொடர்பானவை.

Article Index
கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள் தொடர்பானவை.
ஆயுட் காப்புறுதி
பெண்கள் வெளிநாடு சென்று உழைத்தல்
வட்டிக்கு கடன் வாங்குதலும் கொடுத்தலும்
பதுக்கல்
சேமிப்பு வைப்புக்கான வட்டி
வாடகைக் கொடுப்பனவு பற்றிய தீர்ப்பு
காபிர்களுடனான முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு
ரெஜிஸ்ட்ரேஷனும், நிகாஹும்
மஹரும் சீதனமும்
மஹ்ரமிகளின் விபரம்
குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும்
தலாக்
செல்லுபடியற்ற வஸீய்யத்
All Pages


ஆயுட் காப்புறுதி

கேள்வி: ஆயுட் காப்புறுதி செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

பதில்: ஆயுட் காப்புறுதி உட்பட அனைத்து வகையான நவீன காப்புறுதி அமைப்புகளும் ஹராமானதாகும். ஹிஜ்ரி 1398ம் ஆண்டு ஷஃபான் மாதம் 14ம் திகதி கூடிய 'மஜ்லிஸுல் மஜ்மஇல் பிக்ஹிய்யில் இஸ்லாமி' எனும் சர்வதேச இஸ்லாமிய சட்ட மன்றமே மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது. நீண்ட ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்கும் பின்பே இம்முடிவு எடுக்கப்பட்டது. சூதுக்குரிய பண்புகள், வட்டி, பிறர் செல்வத்தை எத்தகைய பிரதியீடும் இன்றிப் பெறும் நிலை ஆகியவை காப்புறுதியோடு தொடர்புபட்டுள்ளன. அத்தோடு கொடுக்கல் வாங்கல்களில் காணப்படக் கூடாத மயக்கமான, தெளிவற்ற தன்மைகள் காப்புறுதி ஒப்பந்தங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றமையால், அனைத்துவகையான காப்புறுதிகளும் ஹராமாகும்.



பெண்கள் வெளிநாடு சென்று உழைத்தல்

கேள்வி: இன்று நம் இஸ்லாமியப் பெண்மணிகள் உழைப்பதற்கென்று வெளிநாடு செல்கின்றார்கள். பெண்கள் உழைப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? அத்துடன் தனிமையில் அவர்கள் உழைப்பதற்காக வெளிநாடு செல்லலாமா? விளக்கம் தேவை.

பதில்: பொதுவாக பெண்கள் தொழில் செய்வதை இஸ்லாம் வரவேற்பதில்லை. ஒரு பெண்ணைப் பராமரிக்கும் பொறுப்பு அவனின் தந்தை,கணவன், சகோதரன் போன்றோருக்கே உரியது என இஸ்லாம் கூறுகிறது. பெண் அவளது தன்மைக்கும் இயல்பிற்குமேற்றாற் போல் குடும்ப வாழ்க்கையிலும் தாய்மைக்குரிய விவகாரங்களிலும் ஈடுபட வேண்டுமெனவும் அது எதிர்பார்க்கிறது.

ஆயினும் இஸ்லாம் பெண்கள் தொழில் புரிவதைத்தடுப்பதில்லை. ஆனால், அவர்களது தொழிலும் உழைப்பும் இஸ்லாம் பெண்களுக்கென வகுத்துள்ள அடிப்படைகளுக்கும், பண்பாடுகளுக்கும் முரணில்லாத வகையில் அமைதல் வேண்டுமென்பதில் கண்டிப்பாகவுள்ளது. இவ்வகையில் ஒரு பெண் புரியும் தொழில் அவள் தன் வீட்டில் ஒரு தாய் என்ற வகையிலுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும், வீட்டு விவகாரங்களைக் கவனிப்பதற்கும் தடையாக அமைதல் கூடாது.

தொழில் புரியுமிடத்தில் பிற ஆண்களுடன் கலந்திருப்பதும் தனது உடலில் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை வெளிக்காட்டிக் கொண்டிருப்பதும் கூடாது.

ஓரிடத்தில் ஓர் ஆணுடனோ அல்லது பல ஆண்களுடனோ தனித்திருத்தல் கூடாது.

தனது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத போது ஒரு மஹ்ரமான (திருமணம் செய்வதற்கு ஹராமான) துணையுடனன்றி பிரயாணத்திலீடுபடுவதும், பிற இடங்களில் போய் தங்குவதும் கூடாது.

பெண்கள் உழைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. ஆனால் தற்காலத்தில் அவர்கள் வெளிநாடு சென்று தொழில் செய்வதானது ஹராமானதென்றே தீர்மானிக்க வேண்டியுள்ளது.



வட்டிக்கு கடன் வாங்குதலும் கொடுத்தலும்

கேள்வி: வட்டிக்கு கடன் வாங்குபவர் மீது குற்றமா? அல்லது வட்டிக்குக் கடன்கொடுப்பவர் மீது குற்றமா? விளக்கம் தரவும்.

பதில்: இருவரும் குற்றவாளிகள் என்பதுவே ஷரீஅத்தின் கருத்தாகும். வட்டிக்குக் கடன் கொடுத்தவர் மாத்திரம் குற்றவாளியாக முடியாது. மாறாக, கடன் பெற்று வட்டிக்கு கொடுப்பவரும் பாவியாகக் கொள்ளப்படல் வேண்டும். ஏனெனில், அவரும் பாவத்திற்கு உடந்தையாக இருக்கிறார். ஏன்? கடன் பெற்று வட்டி செலுத்துபவர் மாத்திரமன்றி, வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களுக்கு எழுத்து வேலை பார்ப்போரும், சாட்சிகளாக இருப்போரும் கூடக் குற்றவாளிகளே.

'வட்டி உண்பவரையும் உண்ணக் கொடுப்பவரையும் அதற்குச் சாட்சியாக இருப்போரையும் அதனை எழுதுபவரையும் அல்லாஹ் சபிக்கிறான்' (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)

ஆயினும் வட்டிக்குக் கடன்பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஒருவருக்கு இருப்பின் இச்சந்தர்ப்பத்தில் வட்டி பெறுபவரே குற்றவாளியாவார். ஆனால் இந்நிலைக்குப் பல நிபந்தனைகள் உண்டு. அவை கீழ்வருமாறு:

   1. உண்மையான தேவையாக இருத்தல் வேண்டும். ஆடம்பரத் தேவை ஒன்றுக்காகவோ, அடிப்படைத் தேவை ஒன்றை மேலும் வசதிப்படுத்திக் கொள்வதற்காகவோ பெறப்பட்ட கடனாக இருத்தல் கூடாது. அதாவது குறித்த தேவை நிறைவேறாத போது ஆபத்தும் அழிவும் ஏற்படும் நிலை இருத்தல் வேண்டும். உதாரணத்திற்கு உணவு, உடை நோய்க்கான சிகிச்சை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
   2. சரியாக தேவையின் அளவுக்கே இச்சலுகையைப் பயன்படுத்தல் வேண்டும். உதாரணமாக 900 ரூபாய் தேவையாக இருப்பின் 1000 ரூபாயை (வட்டிக்கு) கடனாகப் பெறுவது கூடாது.
      மறுபக்கத்தில் தனது இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற முழுமுயற்சி செய்து பார்த்தல் வேண்டும். அடுத்த முஸ்லிம் சகோதரர்கள் (வட்டியின்றி) இவருக்கு (க்கடன்) உதவி வழங்கக் கடமைப்பட்டுள்ளனர். வேறு எத்தகைய வழியும் இல்லையெனக் காணும் போதே வட்டிக்குக் கடன் பெறத் துணிய வேண்டும். அதிலும் வரம்பு மீறாது எல்லையைக் கடக்காது நடந்து கொள்ளல் வேண்டும். அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் அருளும் அன்பும் கொண்டவனாகவும் இருக்கின்றான்.




பதுக்கல்

கேள்வி: பதுக்கல் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? இதில் பிரதான உணவுப் பொருட்கள் மாத்திரம் அடங்குமா அல்லது உப உணவுப்பயிர்களான கோப்பி, மிளகு, புளி போன்றவைகளும் அடங்குமா? விளக்கம் தேவை.

பதில்: விலையேற்றம் கருதிப் பண்டங்களைப்பதுக்குவது ஹராமானதாகும். பேராசையும், பிறர் நலன் பேணாத்தன்மையுமே ஒருவனை இத்தீயச்செயலைச் செய்யத் தூண்டுகின்றன. பதுக்கலினால் மக்களுக்கு எத்தகைய அசௌகரியங்கள் ஏற்படும் என்பது தெளிவானதே. இவற்றைக் கருத்திற்கொண்டே இஸ்லாம் பதுக்கலைத் தடை செய்துள்ளது. பதுக்கலைக் கண்டிக்கும் சில நபி மொழிகளைக் கீழே நோக்குவோம்.

'பதுக்கியவன் பாவி.' (அபூதாவூத், முஸ்லிம்)

'உணவுப் பொருளை நாற்பது நாட்களுக்குப் பதுக்கியவன் அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் கொள்கிறான். அல்லாஹ்வும் அவனை விட்டு நீங்கிக் கொள்கிறான்.' (அஹ்மத், அல்ஹாகிம்)

'மிகக் கெட்ட அடியான் பதுக்கற்காரனே. விலையிறக்கத்தைக் கேட்டு அவனுக்குக் கவலையைக் கொடுக்கிறது. விலையேற்றத்தைக் கேள்வியுற்றாலோ மகிழ்ச்சியுறுகிறான்.' (றஸீன்)

அனைத்து வகையான பதுக்கல்களும் ஹராமானவையல்ல. பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படுவதற்கு அறிஞர்கள் மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றனர். அவையாவன:

   1. பதுக்கிய பொருள் பதுக்கியவனினதும் அவனது பராமரிப்பிலிருப்போரினதும் ஒருவருடத்தேவைக்கும் போதுமான அளவை விடவும் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு ஒருவருடத்துக்குத் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தேவையான பொருளைச் சேமித்து வைக்க அனுமதியுண்டு.
   2. குறித்த பொருளின்பால் மக்களுக்குள்ள கடுந்தேவையைக் கருத்திற்கொண்டு, கூடிய விலையில் விற்க வேண்டுமென்ற நோக்கில், பொருளின் விலையேற்றத்தை எதிர்பார்த்துப் பதுக்கி இருத்தல் வேண்டும்.
   3. பதுக்கப்பட்ட பொருளின் பால் மக்களுக்குத் தேவையுள்ள வேளையில், பதுக்கி இருத்தல் வேண்டும். மாறாக பல வியாபாரிகளிடம் குறித்த பொருள் இருந்து, மக்களுக்கு அதன் பால் தேவையில்லாதபோது அதனைத் தேக்கி வைப்பதும், சேமித்து வைப்பதும் தடை செய்யப்பட்ட பதுக்கல் அல்ல. ஏனெனில். இதனால் மனிதருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எத்தகைய பொருட்களைப் பதுக்குவது கூடாது என்பதில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

சில அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது சொந்தத் தானியங்களையோ உற்பத்திகளையோ தேக்கி வைப்பது பிழையானதல்ல. இமாம்களான ஷாபிஈ, அஹ்மத் ஆகிய இருவரினதும் அபிப்பிராயப்படி அடிப்படையான அத்தியாவசிய உணவுப் பண்டங்களில் மாத்திரமே பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படும்.

மேலும் பல அறிஞர்கள் அனைத்துப் பண்டங்களிலும் (மேலே கண்ட நிபந்தனைகள் காணப்படுமிடத்து) பதுக்கல் செய்வது ஹராமானதாகும் எனக் கூறுகின்றனர்.




சேமிப்பு வைப்புக்கான வட்டி

கேள்வி: நடைமுறையில் உள்ள, வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில் சேமிப்புகளுக்காக வழங்கப்படும் வட்டிப்பணத்திற்குரிய தீர்ப்பு என்ன? அவற்றை நற்கருமங்களுக்காகச் செலவு செய்ய முடியுமா? நற்கருமங்கள் எனக் குறிப்பிடப்படுபவை எவை? விளக்கம் தேவை?

பதில்: வங்கிகள் தமது வாடிக்கையாளரின் வைப்புகளுக்கு வழங்கும் வட்டியும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ள வட்டியைச் சார்ந்ததாகும். எனவே, அவ்வட்டித் தொகை யாருக்கு வழங்கப்படுகின்றதோ, அவருக்கு அது ஹலாலாகாது. அதனை அவர் பெற்றுக்கொள்ள முடியாது. அது அவருக்குரியதல்ல. அதே நேரத்தில் அத்தொகை வங்கிக்குரியதுமல்ல.

எனவே, இத்தகைய வட்டிப்பணத்தை தர்மம் செய்து விடுவதே சரியானது. சில அறிஞர்கள் இப்பணத்தை தர்மம் செய்யும் நோக்கத்துடன் கூடப் பெறக்கூடாது என்றும், அதனை அப்படியே வங்கியிலேயே விட்டு விட வேண்டும் அல்லது, எடுத்து எறிந்து விட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், இக்கருத்து (பேணுதலின் அடிப்படையில் பிறந்த ஒன்றாக இருப்பினும்) ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இக்கருத்து இஸ்லாத்தின் சில அடிப்படைகளுடன் மோதுவதாக உள்ளது. செல்வத்தை எவரும் பயன்படுத்தாது வீணாக்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

ஆகவே, வட்டிப்பணம் உள்ளவர், அது அவருக்கு சொந்தமற்றது என்ற வகையில், அதனை ஏழை எளியவர்களுக்கோ அல்லது ஒரு நற்பணிக்கோ தர்மம் செய்து விட வேண்டும். முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் எத்தகைய ஒரு நலனுக்காகவும் அதனைச் செலவு செய்ய முடியும் என்பதே யூஸுப் அல்கர்ளாவி போன்ற நவீன அறிஞர்களினதும் 'மஜ்மஉல் பிக்ஹிய்யில் இஸ்லாமி' போன்ற இஸ்லாமிய சட்ட அமைப்புக்களினதும் கருத்தாகும். வட்டிப்பணம் அதனைப் பெற்றவருக்கோ அல்லது வங்கிக்கோ சொந்தமானதல்ல என்ற காரணத்தினால், அது பொதுப்பணமாகக் கொள்ளப்படும். ஹராமான எல்லாச் செல்வங்களுக்கும் இதுவே சட்டமாகும்.
ஒருவர் தனது வைப்புக்குக் கிடைக்கும் வட்டிப்பணத்தை ஹராம் என்ற வகையில் பெறாது, வங்கியில் விட்டு வைப்பது வங்கி பலமடையவோ அல்லது அது அப்பணத்தை இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவோ இடம் ஏற்படுகிறது.




வாடகைக் கொடுப்பனவு பற்றிய தீர்ப்பு

கேள்வி: தற்போது நடைமுறையிலுள்ள வியாபார முறைகளில் வாடகைக்கொள்வனவும் ஒன்றாகும். இம்முறைப்படி பணம் தவணையடிப்படையில் செலுத்தப்படுகிறது. பணம் முழுவதையும் செலுத்தி முடிக்கும் போது பொருளை வாங்கும் தினத்திலிருந்த விலையை விட ஒரு தொகை மேலதிகமாகவே அறவிடப்படுகிறது. இம்மேலதிகத் தொகை வட்டியாகுமா? குறித்த வாடகைக்கொள்வனவு முறை ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டதா?

பதில்: நீங்கள் குறிப்பிடும் வாடகைக் கொள்வனவு முறையைச் சில அறிஞர்கள் வட்டியெனக் கருதி, ஹராமான கொடுக்கல் வாங்கல் பட்டியலில் அடக்குகின்றனர். ஆயினும், பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் இதனை அனுமதித்துள்ளனர். இவ்வமைப்பை ஹராமெனக் கூறும் எந்தச் சட்ட வசனமும் இல்லாதிருப்பதனாலும், இது எல்லா வகையிலும் வட்டியை ஒத்திராததாலும் இவ்வியாபார முறையை அனுமதிக்கலாம் என இவர்கள் கருதுகின்றனர். ஷாபிய்யாக்கள், ஹனபிய்யாக்கள் உட்பட பெரும்பாலான அறிஞர்கள் இக்கருத்தை ஆதரிப்பதாக இமாம் அஷ்ஷெளக்கானி குறிப்பிடுகிறார். ஆயினும் ஒரு பெருளை உடன் பணத்திற்கு வாங்கும்போது அதற்குரிய விலைக்கும் தவணைக் கட்டணத்தினடிப்படையில் வாங்கும் போது அதற்குக் குறிக்கப்படும் விலைக்குமிடையில் மித மிஞ்சிய, நியாயமற்ற வித்தியாசம் இருத்தல் கூடாது என்பதனைக் கருத்திற் கொள்ளல் வேண்டும்.

 


 

காபிர்களுடனான முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு


கேள்வி: பிறசமூகத்தவருடனான முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு பற்றிய ஒரு தெளிவுரையை நான் எதிர்பார்க்கிறேன்.

பதில்: பிறமதத்தவர்கள் எனும் வட்டத்தில் இறைவனுக்கு இணைவைத்து வணங்கும் சிலை வணங்கிகள், விக்கிரக ஆராதனைக்காரர்கள், வேதத்தை உடையவர்கள் என அழைக்கப்படும் யூத, கிறிஸ்தவர்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய 'முர்தத்'கள் உட்பட நாஸ்திகர்கள், மதநம்பிக்கையற்ற கம்யூனிஸ வாதிகள் போன்றோரும் அடங்குவர்.

ஒரு முஸ்லிம் பெண் மேற்குறிப்பிட்ட எப்பிரிவைச் சேர்ந்த ஆணையும் மணமுடிப்பது ஹராமாகும். இது இமாம்களினதும் இஸ்லாமிய அறிஞர்களினதும் 'இஜ்மாஃ' என வழங்கப்படும் ஏகோபித்த முடிவாகும். கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் இம்முடிவுக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.

'ஈமான் கொண்டோர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களது ஈமானை நன்கறிந்தவன். எனவே அவர்கள் முஃமினான பெண்கள் என நீங்கள் அறிந்தால் காபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள் ஏனெனில் (ஈமான் கொண்டுள்ள) இப்பெண்கள் அவர்களுக்கு மனைவியராக அனுமதிக்கப்பட்டவர்களல்லர். அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக) அனுமதிக்கப்பட்டவர்களுமல்லர்.' (60:10) மேலும் கீழ் வரும் வசனமும் இக்கருத்துக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது: 'அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.' (2:221)

முஸ்லிம் ஆண்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கும் முஷ்ரிக்கான பெண்களைத் திருமணம் செய்வது ஹறாமாகும். 'அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்' (2:221) அவ்வாறே ஒரு முஸ்லிம் ஆண், ஒரு நாஸ்திகப் பெண்ணையோ, மத நம்பிக்கையற்ற கம்யூனிஸம் போன்ற கொள்கைகளை ஏற்றுள்ள பெண்ணையோ மணமுடிப்பது ஹராமாகும்.

ஆயினும், முஸ்லிம் ஆண்களுக்கு வேதத்தை உடையவர்களான யூத கிறிஸ்தவப் பெண்களை மணம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரமாக உள்ளது.

'முஃமின்களான கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களையும் விலைப்பெண்களாகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக்கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து மணமுடித்துக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.' (5.5)

'ஆரம்ப காலத்தவர்களில் யூத, கிறிஸ்தவப் பெண்களை மணம் செய்வதை ஹறாம் என்று எவரும் கூறியமைக்கு தக்க ஆதாரம் எதுவும் கிடையாது' என இமாம் இப்னுல் முன்திர் குறிப்பிடுகின்றறார்.

இப்னு உமர் (றலி) அவர்கள் இவ்வாறு திருமணம் முடிப்பதை ஹறாம் எனக் கண்டிப்பாக கூறியிருக்கிறார்கள். ஆயினும் பல ஸஹாபாக்களும் பல தாபிஈன்களும் ஹறாமாக மாட்டாது என்ற கருத்தையே கொண்டுள்ளனர். உஸ்மான் (றழி), தல்ஹா (றலி), இப்னு அப்பாஸ் (றழி), ஜாபிர் (றழி), ஹுதைபா (றழி) போன்றோர் இக்கருத்துக்கு ஆதரவானவர்களாவர். தாபியீன்களில் ஸஈத் இப்னுல் முஸையிப் (றஹ்), ஸஈத் இப்னு ஜுபைர் (றஹ்), அல்ஹஸன் (றஹ்),முஜாஹித் (றஹ்), தாவூஸ் (றஹ்), இக்ரிமா (றஹ்), அஷ்ஷஃபீ (றஹ்), அழ்ழஹ்ஹாக் (றஹ்) போன்றோர் இக்கருத்துக்கு ஆதாரவானவர்களாவர்.

இமாம் ஷாபிஈயும் யூத, கிறிஸ்தவப் பெண்களை மண முடிப்பது ஆகும் என்ற கருத்தையே கொண்டிருக்கிறார். இமாம் நவவி அவர்களது கருத்தும் இதுவே.

இப்னு உமர் (றழி) அவர்கள் வேதத்தை உடைய யூத, கிறிஸ்த வர்களை முஷ்ரிக்குகள் எனக்கருதியே தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆயினும் அல்குர்ஆன் இவ்விரு பிரிவினரையும் பிரித்துக் குறிப்பிட்டிருப்பதனை அவதானிக்கலாம்.

'வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள், தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்களல்லர்.' (98:1)

யூத, கிறிஸ்தவப் பெண்களைத் திருமணம் முடிப்பதை ஆதரிக்கும் அறிஞர்களும் அதனை 'மக்றூஹ் எனக் குறிப்பிடுகின்றனர். அதிலும் 'தாருல்குப்ர்' என அழைக்கப்படும் காபிர்களின் நாட்டில் வாழும் இத்தகைய பெண்ணைத் திருமணம் முடிப்பதை, கடுமையான மக்ரூஹ் என்று சிலரும், ஹறாம் என வேறு சிலரும் கருதுகின்றனர். இப்னு அப்பாஸ் (றழி) ஹறாம் என்ற கருத்தையே கொண்டுள்ளார். தனது கருத்துக்கு ஆதாரமாக கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தைக் காட்டியுள்ளார்:

'வேதம் அருளப் பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹறாம்மாக்கியவற்றை ஹறாம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கிறார்களோ அவர்கள் (தம்) கைகளால் கீழ்படிதலுடன் 'ஜிஸ்யா' கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்' (9:20), இக்கருத்தை இமாம் இப்றாஹீம் அந்நகஈயும் ஆதரிக்கின்றார் என அல்குர்துபி குறிப்பிடுகின்றார்.

இத்தகைய கருத்துக்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு குர்ஆனினதும் ஹதீஸினதும் வெளிச்சத்தில், ஒரு யூத அல்லது கிறிஸ்தவப் பெண்ணை மணமுடிக்க விரும்பும் ஒரு முஸ்லிம் ஆண் கருத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களையும் நிபந்தனைகளையும் கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி கீழ்வருமாறு விளக்குகின்றார்:

   1. இஸ்லாம், வேதத்தை உடையவர்களின் பெண்களை மாத்திரமே திருமணம் முடிக்க அனுமதிக்கின்றது. அதாவது, அடிப்படையில் ஓரு வேதத்தைக் கொண்டுள்ள பெண்ணைத் திருமணம் முடிக்க அனுமதிக்கின்றது. ஒரு தீன் இல்லாத, ஒரு தீனை ஏற்றுக்கொள்ளாத நாஸ்திக, கம்யூனிஸ பெண் போன்றவர்களைப் பொறுத்தவரையிலும் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாத மார்க்கங்களான பஹாயிசம், நுஸைரிய்யா போன்ற கொள்கைகளை ஏற்ற பெண்களையும் திருமணம் முடிப்பது முற்றாகவே விலக்கப்பட்டதாகும். இத்தகைய பெண் அல்லது அவளது குடும்பத்தவர்கள் அவளை கிறிஸ்தவர்களிலோ அலலது யூதர்களிலோ ஒருவராகக் கருதினாலும் சரியே.
   2. மேலும் இஸ்லாம், கற்புடைய சுதந்திரமான, வேதத்தை உடைய பெண்ணை மணமுடிப்பதையே அனுமதிக்கிறது. எந்தவொரு ஆணுக்கும் தன் உடலை விற்கும் பெண்ணை திருமணம் செய்ய, அது அனுமதிப்பதில்லை.
   3. எந்த சமூகம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானதாக இருக்கின்றதோ அத்தகைய சமூகத்தைச் சேர்ந்த, வேதத்தை உடைய பெண்ணைத்திருமணம் செய்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல. ஏனெனில், திருமணம் என்பது பெண்ணின் குடும்பத்துடன் கொள்கின்ற தொடர்பாகும். அவர்கள் மீது காட்டும் அன்புமாகும். அவ்வாறே அப்பெண் தனது மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் விசுவாசமாக இருப்பாள் என்ற வகையில், அவள் முஸ்லிம்களுக்கெதிராக தம் மதத்தினருக்கு உதவியாக இருக்க மாட்டாள் என்பதற்கு எத்தகைய உத்தரவாமும் கிடையாது. இவ்வகையில் இன்றைய இஸ்ரேலியப் பெண்ணை மணப்பது ஆகாது.
   4. மார்க்கப்பற்றுள்ள, தனது தீனில் அக்கறையுள்ள முஸ்லிம் பெண்மணி, வெறுமனே தனது பெற்றோரிடமிருந்து இஸ்லாத்தை வாரிசாகப் பெற்ற பெண்மணியைவிடச் சிறந்தவள். றஸுலுல்லாஹ் (ஸல்) அதனை எமக்குக் கூறுகின்றார்கள்: 'மார்க்கமுள்ள பெண்ணை அடைந்து கொள்வீராக, இன்றேல் அழிந்துவிடுவீர்!' (ஆதாரம்-புகாரி), இவ்வகையில் ஒரு முஸ்லிம் பெண், எவ்வகையிலும் எந்த வேதத்தை உடைய பெண்களை விடவும் சிறந்தவளே.
   5. மேலும் ஒரு முஸ்லிம் இத்தகைய ஒரு மனைவியினால் தனது குழந்தைகளின் அகீதாவுக்குக் குந்தகமோ அலலது வழிகாட்டலில் குழப்பமோ ஏற்படும் எனப்பயந்தால் தனது தீனைப் பாதுகாத்துக் கொள்ள இவ்வபாயத்தை தவிர்ந்து கொள்ள முயல்வது வாஜிபாகும். குறிப்பாக மனைவியின் சூழலில் - அவளது சமூகத்தில் வாழுபவருக்கு இன்று இத்தகைய நிலை ஏற்படும்.
   6. முஸ்லிம்கள் எண்ணிக்கையிற் குறைவாக வாழுகின்ற ஒரு பிரசேத்தில் அங்குள்ள ஆண்கள் முஸ்லிம்களல்லாத பெண்களை மணப்பது ஹறாமாக்கப்பட வேண்டும் என்பதே பலமான கருத்தாகும். முஸ்லிம் பெண்களுக்கு முஸ்லிமல்லாத எவரையும் திருமணம் முடிப்பது ஆகாது என்றிருக்கும் போது இததகைய ஒரு சூழலில் முஸ்லிம் ஆண்கள் முஸ்லிமல்லாத எவரையும் திருமணம் செய்வது அங்குள்ள முஸ்லிம் பெண்களை அல்லது அவர்களில் பெருந்தொகையினரை அழிக்கும் செயலாகும். இதனால் முஸ்லிம் சமூகத்திற்குப் பாரிய அளவில் தீமை விளையும். இவ்வனுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இத்ததீங்கைத் தவிர்க்க முடியும்.

வேதத்தை உடைய பெண்களைத் திருமணம் முடிக்க அனுமதித்தமைக்கான காரணங்கள்:

இத்திருமணத்தின் மூலமாக வேதத்தை உடையவர்களுக்கும் இஸ்லாத்துக்குமிடையிலுள்ள தடைகள் நீங்க இடமுண்டு. திருமணத்தினால் தொடர்புகளும் பரஸ்பர குடும்ப உறவுகளும் ஏற்படும். இதனால், இஸ்லாத்தைப் படிப்பதற்கும் அதன் கொள்கைகளை, அடிப்படைகளை விளங்குவதற்கும் வழி பிறக்கும். இது அவர்களையும் இஸ்லாத்தில் இணையச் செய்வதற்கு வழியாகும். அவர்கள் ஓர் இறை வேதத்தை ஏற்றோர் என்ற வகையிலும் பல கொள்கைகளில் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒற்றுமை காணப்படுகின்றதென்ற வகையிலும் அவர்கள் இத்தகைய ஓர் உறவினால் இஸ்லாத்தை நெருங்குவதற்குக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு என இஸ்லாம் கருதுவதனால்தான் இத்தகைய திருமணத்தை அனுமதித்துள்ளது.

இதே நேரத்தில், ஒரு முஸ்லிம் பெண் வேதத்தையுடைய ஓர் ஆணை திருமணம் முடிப்பதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எப்பொழுதும் கணவன், மனைவி மீது ஆதிக்கம் செலுத்துபவனாவான். அவனது கட்டளைகளை ஏற்பது, அவனுக்குக் கட்டுப்படுவது அவளது கடமையாகும். ஒரு முஸ்லிமை ஒரு காபிர் கட்டுப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இதனால்தான் இஸ்லாம் இத்தகைய திருமணத்தை அனுமதிப்பதில்லை. மேலும் காபிரான அந்தக் கணவன் தனது முஸ்லிம் மனைவியின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மாறாக, அதனைப் பொய்படுத்துவான். இத்தகைய விரிந்த முரண்பாடோடு குடும்ப வாழ்க்கை நடாத்துவது அசாத்தியமானதாகும். இதே நேரத்தில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு வேதத்தை உடைய பெண்ணைத்திருமணம் முடித்தால் அவன் அவளது மார்க்கத்தையும் அங்கீகரிப்பான். அவளது வேதத்தையும் நபியையும் விசுவாசிப்பான் தனது ஈமானின் ஒரு பகுதியாக அதைக் கொள்வான்.




ரெஜிஸ்ட்ரேஷனும், நிகாஹும்

கேள்வி: ரெஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்ட தம்பதிகள் திருமண வைபவத்திற்கு முன் திருமண தம்பதிகள் போன்று வாழ முடியுமா? அவர்களது ரெஜிஸ்ட்ரேஷன் தினத்தன்றே சொல்லப்பட்ட 'ஈஜாப், கபூல்' என்பதற்கான தீர்ப்பு என்ன?

பதில்: 'ஈஜாப்,கபூல்' நிகழ்வதற்கு முன்னர் நீங்கள் குறிப்பிடும் ரெஜிஸ்ட்ரேஷனை மாத்திரம் செய்து கொண்ட தம்பதி திருமணத்தம்பதிகள் போன்று பழக முடியாது. ஆனால், ரெஜிஸ்ட்ரேஷனுடன் 'ஈஜாப், கபூல்' நிகழ்ந்திருப்பின் குறித்த தம்பதிகளுக்கு கணவன், மனைவியாக வாழ்வதற்குப் பூரண அனுமதியுண்டு. இஸ்லாத்தில் திருமணம் என்பது ஈஜாப், கபூலையே குறிக்கும். திருமணம் நிறைவேற நீங்கள் கூறும் திருமண வைபவம் நடைபெற வேண்டியதில்லை. அவ்வாறே குறித்த ரெஜிஸ்ட்ரேஷன் அரசாங்கத்தின் தேவைக்கான ஒரு பதிவேயன்றி அது இஸ்லாமிய திருமணத்துடன் தொடர்பான ஒன்றல்ல.

ஒருவர் தான் திருமணமாகவிருக்கும் பெண்ணுடன் ஈஜாப், கபூல் நிகழ்வதற்கு முன்னர் தனிமையிலிருப்பதும் கூடிப் பழகுவதும் ஹராமாகுமென்பது குறிப்பிடதக்கது.

 

 


 

 

மஹரும் சீதனமும்


கேள்வி: பெண்ணிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைச் சீதனமாகப் பெற்று ஒரு சிறு தொகையை மஹராகக் கொடுத்து நிகழும் திருமணம் இஸ்லாத்தில் செல்லுபடியாகுமா?

பதில்: சீதனம் பெறும் வழக்கம் பற்றி ஹிஜ்ரி 1404 றஜப் மாதம் பிறை 12ல் கூடி ஆராய்ந்த இஸ்லாமிய சட்டமன்றம் மேற்படி வழக்கம் குர்ஆன், ஸுன்னா, இஜ்மா ஆகிய சட்ட மூலாதாரங்களுக்கு முரணானதும், காலாகாலமாக இருந்து வரும் முஸ்லிம்களின் வழிமுறைக்கு மாறானதும், மோசமான ஒரு பாவமும், பித்அத்துமாகுமென முடிவெடுத்தது.

மேற்படி வழக்கத்தை ஒழிப்பதற்காக உலமாக்களுட்பட அனைவரும் போராட வேண்டுமெனவும் இம்மன்றம் வேண்டிக்கொண்டுள்ளது. ஆயினும், சீதனம் பெற்று நடந்த திருமணத்தைப் பொறுத்வரையில் அது ஷரீஅத்திற்கு முரணான ஒரு விடயத்துடன் தொடர்புற்றிருப்பினும், திருமணம் செல்லுபடியானதாகவே கொள்ளப்படும் எனும் விளக்கத்தையும் மன்றம் கொடுத்துள்ளது.


 

மஹ்ரமிகளின் விபரம்


கேள்வி: சிற்றப்பா, சிற்றன்னை, பெரியப்பா, பெரியம்மா ஆகியோரின் பெண்பிள்ளைகளோடு மஹ்ரமிய்யத்தான தொடர்புகள் வைத்துக் கொள்ளத் தடையுண்டா? அவர்களைத் திரையின்றி பார்ப்பது கூடாதா? திருமணம் செய்ய முடியாதா? விளக்கம் தேவை.

பதில்: ஒருவரின் பெரியம்மா, பெரியப்பா, சிற்றப்பா, சிற்றன்னை, ஆகியோரின் பிள்ளைகள் அவருக்கு மஹ்ரமிய்யத் ஆனவர்கள் அல்ல. எனவே, குறித்த நபர்களைத் திரையின்றிப் பார்ப்பதற்கு அனுமதியில்லை. திருமணம் செய்து கொள்ளத் தடையுமில்லை.

கீழ்வரும் குர்ஆன் வசனங்கள் மஹ்ரமிகளை வரையறுத்துக் கூறுகின்றன. அவற்றில் நீங்கள் குறிப்பிடுவோர் இடம் பெறாமையை அவதானிக்கலாம்.

'முன்னர் கடந்து போன சம்பவங்களைத் தவிர, நீங்கள் உங்கள் தந்தைகள் மணம் செய்து கொண்ட பெண்களில் எவரையும் மணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கத் தக்கதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது.'

'உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்விகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தகப்பனின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்விகளும், உங்கள் சகோதரியின் புதல்விகளும், உங்களுக்குப் பாலூட்டிய உங்கள் செவிலித் தாய்மார்களும், உங்கள் பால் குடி சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்மார்களும் (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நீங்கள் வீடு கூடிய மனைவிக்கு முந்திய கணவனிடத்துப் பிறந்து, உங்களிடம் வளர்ந்து வரும (மனைவியின்) மகளையும், (நீங்கள் திருமணம் செய்வது கூடாது) ஆனால், அவளுடன் வீடு கூடாதிருந்தால் (அவளை நீக்கி விட்டு அவளுக்கு முந்திய கணவனிடத்துப் பிறந்த மகளைத்திருமணம் செய்து கொள்வது) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவிகளையும் (நீங்கள்திருமணம் முடிக்கலாகாது) இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்த்து வைப்பதும் (விலக்கப்பட்டுள்ளது) இதற்கு முன்னர் கடந்து விட்டவைகளைத் தவிர நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையவனுமாக இருக்கின்றான்!' (4:22, 23)




குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும்

கேள்வி: குடும்பக் கட்டப்பாடு, கருச்சிதைவு போன்றன பற்றிய இஸ்லாமிய வரையறைகளை விளக்குவீர்களா?

பதில்: மனித இனம் நிலைபெற வேண்டுமென்பது திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும். இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி உற்சாகப்படுத்துகின்றது. ஆயினும், ஏற்புடைய நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்குகின்றது. நபிகளாரின் காலத்தில் குடும்பக்கட்டுப்பாட்டிற்குரிய வழிமுறையாக அமைந்தது 'அஸ்ல்'எனும் செயற்பாடாகும். 'அஸ்ல்' என்பது ஆண் தனது இந்திரியத்தைப் பெண்ணின் கர்ப்பவறையைப் போய் அடைய விடாது தடுத்துக் கொள்வதைக் குறிக்கும். நபித்தோழர்கள் இம்முறையைக் கையாள்வோராய் இருந்துள்ளனர். 'அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் 'அஸ்ல்' செய்வோராய் இருந்தோம்.' என ஜாபிர் (ரலி) கூறியுள்ளார். (ஆதாரம் - புஹாரி, முஸ்லிம்)

'ஒருபோது ஒருவர் நபிகளாரிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு பெண் இருக்கிறாள். நான் அவளிடத்தில் அஸ்ல் செய்கின்றேன். அவள் கர்ப்பமுறுவதை நான் விரும்பவில்லை. ஆயினும், யூதர்களோ அஸ்ல் என்பது சிறிய கொலையாகும் என்கின்றனர்' என்றார். இதனைச் செவிமடுத்த நபியவர்கள் 'யூதர்கள் பொய் கூறுகின்றனர். அல்லாஹ் படைக்க நாடினால் அதனை உம்மால் தடுக்க முடியாது' (திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா) எனக் கூறினார்கள். (அதாவது சிலவேளை கணவன் அஸ்ல் செய்யினும், அவன் அறியாதவாறு ஒரு துளி இந்திரியமாவது தவறி, பெண்ணின் கர்ப்பத்தையடைந்து, அவள் கர்ப்பம் தரிக்க இடமுண்டு என்பதாகும்.) 'அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்வோராயிருந்தோம். இவ்விடயம் நபிகளாருக்கு எட்டியபோது அவர்கள் கூடாது என்று தடை செய்யவில்லை' என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய மேலும் ஓர் அறிவிப்பு ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் உமர் (ரலி) அவர்களது அவையில் 'அஸ்ல் பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டது. அங்கு வீற்றிருந்த ஒருவர், 'அது சிறிய கொலை என நம்பப்படுகிறது' என்றார். அவ்வேளை அங்கிருந்த அலி (ரலி), 'அதுகொலையல்ல. அது கொலையாக அமைய (குறித்த கரு) ஏழு கட்டங்களைக் கடந்திருக்க வேண்டும். அவையாவன: களிமண் சத்து, இந்திரியத்துளி, இரத்தக்கட்டி, எலும்புத்தொகுதி, சதையமைப்பு, வேறு (முழு) உருவம்' என்றார்கள். இதனைக் கேட்ட உமர் (ரலி) 'அலியே, உண்மை சொன்னீர், அல்லாஹ் உமக்கு நீண்ட ஆயுளை அளிப்பானாக' எனக் கூறினார்.

குடும்பக் கட்டுப்பாட்டை அனுமதிக்கின்ற நியானமான காரணங்கள்:

   1. தாயின் உயிருக்கோ அல்லது உடல் நலனுக்கோ ஆபத்து ஏற்படும் என அனுபவத்தின் வாயிலாகவோ அல்லது நம்பத்தகுந்த ஒரு மருத்துவர் மூலமோ அறிந்தால், குடும்பக்கட்டுபாட்டிற்கு அனுமதியுண்டு. இக்கருத்துக்கு ஆதாரங்களாகக் கீழ்வரும் திருவசனங்களை அறிஞர்கள் குறிப்பிடுவர் அவையாவன:

''உங்களை நீங்கள் அழிவுக்கு உட்படுத்த வேண்டாம்' (2:195)

'மேலும் உங்களை நீங்கள் கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது அதிகம் அன்பு கொண்டவனாய் இருக்கிறான்.' (4:29)

   2. லௌகீக ரீதியில் அமைந்த சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். அது பின்னர் மார்க்க விவகாரங்களையும் பாதிக்கும். தனது குழந்தைகளுக்காக வேண்டி ஹராத்தையோ அல்லது பாவத்தையோ செய்ய வேண்யேற்படுமென்று ஒருவர் அஞ்சும் நிலையிலும் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு.

'அல்லாஹ் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்புவதில்லை.' (5:6)

   3. தனது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்புறுமென்றோ அல்லது அவர்களை முறையாக வளர்ப்பதில் பிரச்சினைகள் தோன்றுமென்றோ அஞ்சுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் குறித்த செயற்பாட்டிற்கு அனுமதியுண்டு. உஸாமா (ரலி) அறிவிகின்றார்: 'ஒருமுறை ஒருவர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் எனது மனைவியிடத்தில் அஸ்ல் செய்கின்றேன்' என்றார். 'அதற்கு நபிகளார் 'ஏன் அப்படிச் செய்கின்றீர்?' என்று வினவ அதற்கு அம்மனிதர் 'நான் எனது குழந்தையையிட்டு அல்லது குழந்தைகளையிட்டு அஞ்சுகின்றேன்' என்றார். அதற்கு நபிகளார் 'அது (அஸ்ல்) தீங்கிழைப்பதாக இருப்பின் பாரசீகத்தையும், ரோமாபுரியையும் பாதித்திருக்கும்' (அதாவது இத்தகைய தனிமனிதர்களின் நிலைகள் முழுச் சமூகத்தையும் பாதிக்காது. அவ்வாறு இருப்பின் அன்றைய வல்லரசுகளாகத் திகழ்ந்த ரோம, பாரசீகத்தைப் பாதித்திருக்கும் என்பதாகும்.) என்றார்கள்.'

   4. பால்குடிக் குழந்தையின் நிலையைக் கருத்திற்கொண்டு, தாய் கருத்தரிப்பதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுவதும் குடும்பக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துகின்ற ஒரு காரணமாகும்.

பால் குடிக் குழந்தை இருக்கும் நிலையில் தன் மனைவியுடன் (கருத்தரிக்கும் நோக்கோடு) உடலுறவு கொள்வதனை நபியவர்கள் இரகசியக் கொலை என வர்ணித்துள்ளனர். (ஆயினும், இதனை ஷரீஅத் ஹராம் என முற்றாகத் தடை செய்யவில்லை என்பதனைக் கவனத்திற்கொள்க.)

மேலே குறிப்பிட்ட நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதனை இஸ்லாம் அனுமதித்திருப்பினும், கருச்சிதைவை அது அனுமதிப்பதில்லை. அக்கருவானது ஹராமான முறையில் தரித்திருப்பினும் சரியே, ஒரு கருவை அதற்கு ரூஹ் ஊதப்பட்டதன் பின்னர் சிதைப்பது ஹராமான மாபெரும் குற்றமாகும்.

ஆயினும், குறித்த கருவானது சிதைக்கப்படாது தொடர்ந்து தாயின் வயிற்றில் இருப்பது அவளின் உயிருக்கு ஆபத்தையேற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரியவரின் இரு தீங்குகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டியிருப்பின், அவற்றில் குறைந்ததைத் தெரிவு செய்தல் வேண்டும் எனும் சட்டவிதியின் அடிப்படையில் கருவைச் சிதைப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத போது அதற்கு அனுமதியுண்டு. ஏனெனில், கருவிலிருக்கும் சிசுவுக்காக வாழுகின்ற தாயை இழக்க முடியாது. அது அறிவுடைமையும் ஆகாது. மேலும், சிசுவானது உருக்குலைந்ததாக இருந்து, பிறந்து வாழும் பாக்கியத்தைப் பெறினும், பெரும் அவஸ்தையுடனேயே வாழும் நிலைக்கு உட்படும் என்பது விஞ்ஞான பூர்வமான உறுதியாகக் கண்டறிய முடியும் நிலையிலும் கருவைச் சிதைக்க ஷரீஅத்தில் இடமுண்டு.



தலாக்

கேள்வி: இஸ்லாமிய ஷரீஆவின்படி ஒருவரது மனைவியை அவர் தலாக் சொல்ல நேரிட்டால், அவர் விரும்பிய நேரத்தில் தலாக் சொல்ல முடியுமா? அல்லது சொல்லக் கூடாத சந்தர்ப்பங்களும் உண்டா? விரிவான விளக்கம் தேவை.

பதில்: கீழ்வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் தனது மனைவியைத் 'தலாக் சொல்லுவது ஹராமானதாகும்.

   1. மனைவி ஹைளுடனோ, நிபாஸுடனோ இருக்கும் நிலை.

   2. குறித்த இரண்டிலிருந்தும் சுத்தமாக இருப்பினும், அச்சுத்தமான காலத்தில் உடலுறவு கொண்ட நிலை.

மேலே குறிப்பிட்ட இரு சந்தர்ப்பங்களிலும் தனது மனைவியைத் தலாக் கூறுபவர் பாவியாவார்.

குறித்த சந்தர்ப்பங்களில் கூறப்படும் தலாக் 'தலாக் பிதஈ' (ஸுன்னத்தான் அமைப்புக்கு முரணான தலாக் என வழங்கப்படுகின்றது.) ஒரேவார்த்தையில் மூன்று தலாக்கையும் கூறுதல், ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று முறைகளாக தலாக் கூறுதல் ஆகிய இரண்டும் தலாக் பிதஈ, ஹராமானதாக இருப்பினும் அது நிறைவேறும், செல்லுபடியாகும் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். தலாக் கூறுப்படும் பெண்களுக்கேற்படும் சிரமங்களைத் தவிர்ப்பது குறித்த நிலைகளில் தலாக் கூறுதல் விலக்கப்பட்டுள்ளமைக்கான ஒரு காரணமாகும்.

ஹைழ், நிபாஸ் ஆகிய நிலைகளில் கணவனுக்கு மனைவியுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிடைக்காமையினால், அவன் உணர்ச்சி வசப்பட்டு அவள் மீது அதிருப்தியுற்றுத் தலாக் கூற முற்படலாம். எனவே, சுத்தமடையும் வரை எதிர்பார்த்திருந்து இறுதித் தீர்மானத்திற்கு வருவது நல்லதல்லவா? மேலும், சுத்தமான நிலையில் உடலுறவு கொண்டிருந்தால், சிலவேளை அவள் கருவுற்றிருக்க இடமுண்டு. அவசரப்பட்டுத் தலாக் சொல்லாமல் தாமதிப்பதனால், அவள் கருவுற்றிருப்பதை அறிந்து, கணவனின் மனம் மாறவும் இடமுண்டல்லவா? இத்தகைய விடயங்களைக் கருத்திற் கொண்டும் மேலே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் 'தலாக் கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

 


 

செல்லுபடியற்ற வஸீய்யத்

கேள்வி: ஒருவர் தான் வபாத்தாக முன்னர் தன் மனைவியிடம் 'இத்தா' இருக்க வேண்டாம் என்று 'வஸிய்யத்' செய்திருந்தால் அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா?

பதில் : கணவனின் மரணத்தை தொடர்ந்து மனைவி நான்கு மாதங்களும் பத்து நாட்களும்'இத்தா அனுஷ்டிக்க வேண்டும் என்பது இறை கட்டளையாகும். இதை யாவரும் அறிவர். இத்தகைய ஒரு சன்மார்க்கக் கடமையை விட்டுவிடுமாறு வஸிய்யத் செய்வதோ அலலது பணிப்பதோ பாவமானதாக அமைவதுடன், செல்லுபடியற்றதுமாகும். இது போன்ற வஸிய்யத்துக்களையோ வேண்டுகோள்களையோ நிறைவேற்றுவது கூடாது.

'அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் சிருஷ்டிகளுக்குக் கட்டுப்படலாகாது' என்பது ஹதீஸாகும்.

பாவமான காரியங்களைச் செய்யுமாறு தலைவரோ கணவரோ அல்லது பெற்றோரோ தூண்டினால், அவர்களுக்குக் கட்டுப்படலாகாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அத்தகைய கட்டளைகளுக்கு மாறு செய்வது கடமையாகி விடுகின்றது

We have 44 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player