கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள் தொடர்பானவை. - பெண்கள் வெளிநாடு சென்று உழைத்தல்
Last Updated (Sunday, 02 November 2008 07:13) Thursday, 30 October 2008 08:56
பெண்கள் வெளிநாடு சென்று உழைத்தல்
கேள்வி: இன்று நம் இஸ்லாமியப் பெண்மணிகள் உழைப்பதற்கென்று வெளிநாடு செல்கின்றார்கள். பெண்கள் உழைப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? அத்துடன் தனிமையில் அவர்கள் உழைப்பதற்காக வெளிநாடு செல்லலாமா? விளக்கம் தேவை.
பதில்: பொதுவாக பெண்கள் தொழில் செய்வதை இஸ்லாம் வரவேற்பதில்லை. ஒரு பெண்ணைப் பராமரிக்கும் பொறுப்பு அவனின் தந்தை,கணவன், சகோதரன் போன்றோருக்கே உரியது என இஸ்லாம் கூறுகிறது. பெண் அவளது தன்மைக்கும் இயல்பிற்குமேற்றாற் போல் குடும்ப வாழ்க்கையிலும் தாய்மைக்குரிய விவகாரங்களிலும் ஈடுபட வேண்டுமெனவும் அது எதிர்பார்க்கிறது.
ஆயினும் இஸ்லாம் பெண்கள் தொழில் புரிவதைத்தடுப்பதில்லை. ஆனால், அவர்களது தொழிலும் உழைப்பும் இஸ்லாம் பெண்களுக்கென வகுத்துள்ள அடிப்படைகளுக்கும், பண்பாடுகளுக்கும் முரணில்லாத வகையில் அமைதல் வேண்டுமென்பதில் கண்டிப்பாகவுள்ளது. இவ்வகையில் ஒரு பெண் புரியும் தொழில் அவள் தன் வீட்டில் ஒரு தாய் என்ற வகையிலுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும், வீட்டு விவகாரங்களைக் கவனிப்பதற்கும் தடையாக அமைதல் கூடாது.
தொழில் புரியுமிடத்தில் பிற ஆண்களுடன் கலந்திருப்பதும் தனது உடலில் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை வெளிக்காட்டிக் கொண்டிருப்பதும் கூடாது.
ஓரிடத்தில் ஓர் ஆணுடனோ அல்லது பல ஆண்களுடனோ தனித்திருத்தல் கூடாது.
தனது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத போது ஒரு மஹ்ரமான (திருமணம் செய்வதற்கு ஹராமான) துணையுடனன்றி பிரயாணத்திலீடுபடுவதும், பிற இடங்களில் போய் தங்குவதும் கூடாது.
பெண்கள் உழைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. ஆனால் தற்காலத்தில் அவர்கள் வெளிநாடு சென்று தொழில் செய்வதானது ஹராமானதென்றே தீர்மானிக்க வேண்டியுள்ளது.
