Sheikhagar.org - Official site for sheikhagar
பெண்கள் தொழில் புரிதல் - பகுதி 2
Created On: Monday, 28 May 2012 15:23

02. இஸ்லாத்தில் பெண்களின் பொருளாதாரம் சார் உரிமைகள்
இஸ்லாம் ஆண்களுக்கு பொருளாதாரம் சார் உரிமைகளை வழங்கியிருப்பது போலவே பெண்களுக்கும் அவ்வாறான உரிமைகளை வழங்கியிருக்கிறது. இதனைப் புரிந்து கொள்வதன் மூலம் பெண்கள் தொழில் புரிவது தொடர்பான நிலைப்பாட்டை சரியாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் தொழில் புரிதல், சம்பாதித்தல் என்பது பொருளாதாரத்தோடு தொடர்புபட்டது. எனவே, பொருளாதார உரிமைகள் தொடர்பான அடிப்படைகளை விளங்கிக் கொள்வதனூடாக இது பற்றிய தெளிவைப் பெற முடியும்.
வாரிசுச் சொத்து பெறும் உரிமை
இஸ்லாம் பெண்களுக்கு வாரிசுச் சொத்தில் பங்கு வழங்குகிறது என்பதே பெண்ணுக்கு இஸ்லாம் சொத்துரிமையை கொடுத்திருக்கிறது என்பதைக் காட்டுவதற்குப் போதுமான சான்று. ஆண் எவ்வாறு சொத்துக்களை வைத்துக் கொள்வதற்கு, அவற்றிற்கு உரிமையுடையவனாக இருப்பதற்கு அனுமதி பெற்றிருக்கின்றானோ அவ்வாறே பெண்ணும் சொத்து செல்வங்களின் சொந்தக்காரியாகத் திகழ்வதற்கு அனுமதி பெறுகிறாள். எனவே, வாரிசு சொத்தில் பங்கு பெறும் பெண் தனிப்பட்ட ரீதியில் தனக்கென்று சொத்துக்கள், பொருட்களை வைத்திருப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.
ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக, சகோதரியாக சிலபோது பெரிய தாய் (பெரியம்மா), சிறிய தாய் (சாச்சி) போன்ற நிலைகளில் வாரிசுச் சொத்தில் பங்கு பெறுகிறாள். வாரிசுச் சொத்தில் பங்கேற்கும் உரிமையையும் வாரிசாகப் பெற்ற சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது.
ஜாஹிலிய்யாக் காலத்தைப் பொறுத்தவரை இதற்கு நேர்மாற்றமான நிலை காணப்பட்டது. ஆண் இறந்து விட்டால் அவர் விட்டுச் சென்ற சொத்துக்களும் அவர்களுடைய பெண்மக்களும் பண்டங்களோடு பண்டங்களாகப் பகிர்ந்தளிக்கப் பட்டனர். பெண்களைப் போகப்பொருளாக மாத்திரம் பயன்படுத்திவந்த நிலையை மாற்றிய இஸ்லாம் பெண்ணுக்கு வாரிசுச் சொத்தில் எந்தளவுதூரம் பங்கு வழங்கியுள்ளது என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
'பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பங்குண்டு. அவ்வாறே பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர் விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பங்குண்டு (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே. (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பங்காகும்.' (அந்நிஸா: 07)
'உங்கள் பிள்ளைகளில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்று கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் அவரது பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற்றோர்களும் குழந்தைகளும் இவர்களில் யார் நன்மையளிப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். எனவே, (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.' (அந்நிஸா: 11)
எனவே, வாரிசுச் சொத்தில் ஓர் அங்கமாகக் கருதப்பட்ட பெண்ணை வாரிசுச் சொத்தில் பங்கு கொள்ளும் நிலைக்கு இஸ்லாம் மாற்றியது. வாரிசுச் சொத்தில் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட, பண்டத்தோடு பண்டமாக பகிர்ந்தளிக்கப்பட்ட பெண் வாரிசுச் சொத்தில் பங்கேற்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டாள். பல்வேறு நிலைகளில் வாரிசுச் சொத்தில் பங்கேற்கும் உரிமையை அவள் பெறுகிறாள். எனவே, ஆண் சொத்துக்களை வைத்திருக்க உரிமையைப் பெற்றிருப்பது போலவே பெண்ணும் சொத்துக்களை வைத்திருப்பதற்கான உரிமையைப் பெறுகிறாள்.
உதாரணமாக, கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு குறைந்த பட்சம் அவரது சொத்தில் 1ஃ8 பங்கு கிடைக்கிறது. அதே போல மகள் என்ற நிலையில், சகோதரி என்ற நிலையில் மற்றும் பல நிலைகளில் அந்தப் பெண்ணுக்கு வாரிசுச் சொத்தில் பங்குபெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இஸ்லாம் பெண்களுக்கு வாரிசுச் சொத்தில் பங்கு வழங்கிய போதும் அது ஆணின் பங்குக்குச் சமமானதாக அமைவதில்லை;ளூ இந்த வகையில் வாரிசுரிமையில் பெண் புறக்கணிக்கப்படுகின்றாள் என்றொரு குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. உண்மையில் இஸ்லாமிய ஷரீஆ பெண்ணுக்கு வழங்கியுள்ள சொத்துரிமை தொடர்பான முழுமையான பார்வை இல்லாதவர்களே இக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இஸ்லாம் நான்கு சந்தர்ப்பங்களில் மட்டுமே பெண்ணை விட ஆணுக்கு சொத்துப் பங்கீட்டில் அதிகமாக வழங்குகின்றது. ஏனைய சந்தர்ப்பங்களில் பெண் ஆணுக்குச் சமமான பங்கை அல்லது ஆணை விட அதிகமான பங்குகளைப் பெற்றுக் கொள்வதை அவதானிக்கலாம். முப்பதிற்கும் அதிகமான சந்தர்ப்பங்களில் வாரிசுரிமைச் சட்டத்தில் பெண் ஆணுக்குச் சமனாக ஆணை விடக் கூடுதலாக சொத்தில் பங்கு பெறுகின்றாள் என்ற உண்மையை ஆழமாகப் பார்க்கின்ற போது புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரு குடும்பத்தின் அனைத்துச் செலவினங்களும் ஆணிண் மீதே சுமத்தப்பட்டுள்ளது. குடும்பச் செலவுகளைப் பெண் பொறுப்பேற்றல் வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்ப்பதில்லை. இதனால் தான் சில சந்தர்ப்பங்களில் இஸ்லாம் ஆணுக்கு பெண்ணை விட சில பங்குகளை அதிகமாக வழங்குகின்றது.
பெண்கள் தொழில் புரிதல் - பகுதி 1
Created On: Sunday, 27 May 2012 18:12

பெண்கள் தொழில் புரிதல்
பெண்கள் தொழில் புரிதல் தொடர்பான ஷரீஆவின் கண்ணோட்டத்தையும் தொழில் புரியும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள், நெறிமுறைகள், வரையறைகள் என்பவற்றையும் விளங்குவதற்கு முன்னர் சில முக்கியமான அடிப்படை விடயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றின் வெளிச்சத்தில்தான் பெண்கள் தொழில் புரிவது தொடர்பான விடயம் அலசி ஆராயப்பட வேண்டும்.
ஆண்-பெண் வேறுபாடு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்
இஸ்லாம் ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி இரு பாலாருக்குமிடையே சமத்துவத்தைப் பேண விரும்புகிறது. சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர பொதுவாக இஸ்லாம் ஆண் -பெண் இரு பாலாருக்குமிடையே அனைத்து விவகாரங்களிலும் சமத்துவத்தைப் பேணுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பெண்கள் ஆண்களின் சரிபாதி, சமபாதி.” (அஹ்மத், அபூதாவூத்)
“ஆணோ பெண்ணோ உங்களில் ஒருவருடைய செயலையும் நான் வீணாக்க மாட்டேன். நீங்கள் ஒரு சாரார் மற்றைய சாராரைச் சார்ந்தவர்களாக இருக்கின்றீர்கள்.” (ஆலு இம்ரான்: 195)
ஆணோ பெண்ணோ எவராக இருந்தாலும் அவர் செய்கின்ற எந்த ஒரு செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக அல்லாஹ் மனிதர்களுடைய செயற்பாடுகளையே பார்க்கிறான் எண்ணங்களுக்கேற்ப அவர்களது செயற்பாடுகளுக்கு கூலி வழங்குகின்றான். இதில் எத்தகைய வேறுபாட்டையும் அவன் காண்பிப்பதில்லை.
“ஆணோ பெண்ணோ முஃமினாக இருக்கும் நிலையில் எவர் நற்காரியங்கள் செய்கிறாரோ நிச்சயமாக நாம் அவருக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவோம். மேலும் அத்தகையவர்கள் செய்து கொண்டிருந்த நற்காரியங்களுக்கு நிறைவான கூலியையும் நாம் கொடுப்போம்.” (அந்நஹ்ல்: 97)
ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி யாராக இருந்தாலும் ஈமான் கொண்ட நிலையில் நற்காரியங்கள் செய்கிறாரோ அவருக்கு நல்ல வாழ்க்கையையும் அவர் செய்து கொண்டிருந்த செயல்களுக்கு உரிய கூலியையும் நிச்சயமாக நாம் வழங்குவோம் என்று அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.
“ஆணோ பெண்ணோ யார் முஃமினாக இருக்கும் நிலையில் நற்காரியங்கள் செய்கின்றாரோ நிச்சயமாக அவர்கள் சுவனம் நுழைவார்கள்.” (அந்நிஸா: 124)
ஆண் என்ற காரணத்தினாலோ அல்லது பெண் என்ற காரணத்தினாலோ எவருக்கும் அணுவளவு அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. அவர்களது செயற்பாடுகளுக்கான கூலி கூட்டியோ குறைத்தோ வழங்கப்பட மாட்டாது. அனைவரது செயலுக்கும் நிறைவான கூலி கிடைக்கும். இதில் ஆண்-பெண் என்ற வேறுபாடு கிடையவே கிடையாது என்று இந்த வசனம் தெளிவாகச் சொல்கிறது.
இம் மூன்று ஸூராக்களில் வரும் முப்பெரும் வசனங்கள் இஸ்லாம் எவ்வாறு பால் வேறுபாட்டைக் கவனத்திற் கொள்ளாமல் ஆணையும் பெண்ணையும் ஒரே தரத்தில் வைத்து நோக்குகிறது என்பதனை மிகத் தெளிவாகவும் அழகாகவும் எடுத்துரைக்கின்றன.
தொடரும்...
Page 42 of 64
<< Start < Prev 41 42 43 44 45 46 47 48 49 50 Next > End >>
