Sheikhagar.org - Official site for sheikhagar
ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை
Created On: Tuesday, 28 October 2008 11:09
ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.'' (ஸுரா : அர்ரூம் :32)
''எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.'' (அல் அன்ஆம் :159)
ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;;(பகைத்துக்கொண்டு) புறம் காட்டிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக விளங்குங்கள். மேலும் ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொண்டிருத்தல் கூடாது.' (புகாரி,முஸ்லிம்)
இன்றைய உலகம் பூகோள ரீதியில் இஸ்லாத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எழுச்சியை, மறுமலர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கிறது. எவராலும் மறுக்கமுடியாத அளவுக்கு இவ்வெழுச்சி படியாத பாமரர், படித்த வாலிபர் உட்பட ஆண், பெண் எல்லோரையும் தழுவிய உலகின் சந்து பொந்துகளிலெல்லாம் வியாபித்து நிற்கும் ஒன்று என்ற வகையில் மிகவும் பலமிக்கதாக விளங்குகின்து.
இந்த உலகலாவிய இஸ்லாமிய எழுச்சியானது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கை போன்ற நாடுகளிலும் கூட அதன் தாக்கத்தை ஏற்படுத்துத்தியுள்ளது.
ஆயினும் இவ்வெழுச்சிக்கு பல தடைகள் உருவாகியுள்ளமை கவலைக்குறியதாகும். அவை இவ்வெழுச்சியின் விளைவுகளைத் தாமதப்படுத்தியும், இல்லாமல் செய்தும் வருகின்றன. அத்தiகைய தடைகளுள், குறிப்பிட்ட சிலரது அவசரப்போக்கு, நிதானமற்ற அணுகுமுறைகள், தீவிரப்போக்கு ஆகியன குறிப்பிடத்தக்கவை.
1. தீவிரமும் நிதானமின்மையும்
இங்கு நாம் 'தீவிரம்;' என்ற சொல்லை இஸ்லாத்தின் எதிரிகள் குறிக்கும் 'தீவிரவாதம்' என்ற கருத்தில் பயன்படுத்தவில்லை. அவர்களோ தூயமுஸ்லிம்கள் அனைவரையும் மதத்தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற பெயர்களில் சுட்டுகின்றனர். ஆயினும் இஸ்லாத்தின் பெயரால் சிலர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எதிரிகளின் இத்தகைய குற்றச்சாட்டுக்களை உண்மைப்படுத்துவது போல அமைவதுதான்; வேதனைக்குரியதாகும். இத்தகையவர்களின் நிதானமற்ற போக்கு இஸ்லாமிய எழுச்சியையும் அதனடியாக எழுந்துள்ள இஸ்லாமிய மறுமலர்ச்சியையும் பெரிதும் பாதித்து வருகின்றது. எனவே இத்தகையவர்கள் நிதானத்தைக் கைக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். 'அவசரப்படுதல் ஷைத்தானிலிருந்தும் உள்ளது. நிதானமும் அமைதியும் அல்லாஹ்விடமிருந்தும் உள்ளது.' என்ற நபிமொழி எமது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். (திர்மிதி)
'ஷிர்க்' போன்ற பெரும் பாவங்களை எதிர்ப்பதிலும், ஒழிக்க முற்படுவதிலும் கூட நிதானம் கடைபிடிக்கப்படல் வேண்டும்; நன்மையான விடயங்களை செய்வதில் கூட அளவு கடந்த அவசரமும், நிதானமிழந்த போக்கும் வரவேற்கத்தக்கதல்ல. பதறிய காரியம் சிதறும் என்பார்கள். பொறுத்தவன் புவி ஆள்வான்;. பொறுமை இழந்தவன் காடேருவான் என்பது முதுமொழி. இன்று உலக மட்டத்திலும் சரி எமது நாட்டு மட்டத்திலும் சரி எமது அவசரத்தின் காரணமாகவும், நிதானமிழந்த போக்குகளின் காரணமாகவும் நாம் பல கஷ்டங்களை அனுபவித்தும், நஷ்டங்களை அடைந்தும் வருகின்றோம். சமூக மாற்றம் என்பது ஓரிரவில், ஒருபகலில் ஏற்படக்கூடியதல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது படிப்படியாக, கட்டம் கட்டமாக ஏற்படக் கூடியதாகும். அத்தகைய மாற்றம்தான் ஆரோக்கியமானதும் நிலைக்கக் கூடியதுமாகும். அவசரத்தில் தோன்றுகின்ற செயற்கையான மாற்றங்கள் போலியானவை. நிலைக்காதவை.
எமது முயற்சிகளுக்குரிய விளைவுகளை நாம் கண்டேயாக வேண்டும் என்று சிந்திப்பதும் அதற்காக எத்தகைய வழிமுறைகளையும் கையாள முயற்சிப்பதும் இஸ்லாமிய அணுகுமுறைகளல்ல. முயற்சிப்பதே எமது கடமை; விளைவுகள் அல்லாஹ்வின் கரங்களில். நாம் எமது முயற்சிகள் பற்றி விசாரிக்கப்படுவோமேயன்றி விளைவுகள் பற்றி கேட்கப்படமாட்டோம். மேலும் எமது இலக்குகள் புனிதமானவையாக இருப்பது போலவே அவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் புனிதமானவையாக அமைதல் வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டவிதியை நாம் மறந்துவிடக்கூடாது.
2. வேற்றுமைகளும் முரண்பாடுகளும்
இன்றைய இஸ்லாமிய எழுச்சிக்கு உருவாகியுள்ள மற்றுமொரு பெருந்தடை எம்மத்தியில் தோன்றியுள்ள வேற்றுமைகளும் முரண்பாடுகளுமாகும். அசத்தியக் கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட தம்மத்தியிலுள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை காண முயற்சிக்கின்ற காலமிது. தம்மத்தியில் பயங்கர முரண்பாடுகளைக் கொண்ட பல சக்திகளும் இன்று இஸ்லாம் என்ற பொது எதிரியைச் சந்திப்பதற்காக உடன்பட்டுச் செயற்படுவதைக் காண முடிகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடுபவர்களாக இருக்கின்றமை எவ்வளவு துரதிஷ்டமானது.!
இன்று நாம் எல்லா வளங்களையும், பலங்களையும் நிறைவாகப் பெற்றிருந்தும் எமது விவகாரங்களில் அடுத்தவர் தலையிடும் அளவுக்கும் தீர்மானங்கள் எடுக்கும் அளவுக்கும் உலக அரங்கில் பலயீனர்களாக மாறியுள்ளமைக்கு பிரதானமான காரணம் எமது ஐக்கியமின்மையாகும். அல்-குர்ஆன் இந்நிலைமையைப் பின்வருமாறு விளக்குகின்றது:
''நீங்கள் உங்களுக்குள் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் வலிமை குன்றிவிடும்'' (அன்பால்: 46)
நாம் எமது முரண்பாடுகளைக் கண்டு கொள்வது போல எம் மத்தியிலுள்ள உடன்பாடுகளைக் கண்டுகொள்வததில்லை. அவற்றை நாம் காண்பதை ஷைத்தான் விரும்புகின்றானில்லை. எம் மத்தியில் பகைமையும,; குரோதமும் நிலைக்க வேண்டுமென்பதுதானே அவனது விருப்பம்.
நாம் முரண்படுகின்ற விடயங்கள் ஐந்து என்றால் உடன்படுகின்ற அம்சங்கள் ஐம்பது இருக்கின்றன. இவ்வுண்மையை எம்மால் புரிந்து கொள்ள முடியுமென்றிருந்தால் எமது சமூக, சன்மாரக்க நிலைகள் எவ்வளவு ஆரோக்கியமடையும்.! அர்க்கானுல் ஈமான் எனும் ஈமானின் அடிப்படைகளிலும், அர்க்கானுல் இஸ்லாம் எனும் இஸ்லாமியக் கடமைகளிலும் எம்மத்தியில் பலத்த கருத்து வேறுபாடுகள் இல்லை என்றே கூற வேண்டும். சன்மார்க்கத்தின் உஸுல் (அடிப்படைகள்) கவாயித் (விதிகள்) புரூழ்கள் (கடமைகள்) கபாயிர் (பெரும் பாவங்கள்) முதலானவற்றிலும் எம்மத்தியில் அபிப்பிராயபேதங்கள் குறைவு எனலாம். கருத்து வேறுபாடு நிலவுவதெல்லாம் புரூஃ (கிளை அம்சங்கள்), நாவாபில் (ஸுன்னத்துக்கள்), ஸகாயிர் (சிறுபாவங்கள்) போன்ற ஒப்பீட்டு ரீதியில் முக்கியத்துவம் குறைந்த விடயங்களிலாகும். 'காயாத்' எனும் இலக்குகளைப் பொறுத்தவரையில் எம்மத்தியில் முரண்பாடுகள் குறைவு. அவற்றை அடைவதற்கான 'வஸாயில்' எனும் வழிமுறைகளிலும், அணுகுமுறைகளிலும்தான் சில உடன்பாடற்ற நிலைகள் காணப்படுகின்றன. இத்தகைய விடயங்களில் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதில் தவறில்லை. ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாடுகளுக்கு உரிய சன்மார்க்க ஆதாரங்களை கொண்டிருக்கும் வரை எத்தகைய ஆட்சேபனையும் தெரிவிப்பதற்கில்லை. ஆனால் இவ்விடயங்களில் ஏற்படும் 'கிலாபுகள்' (வேறுபாடுகள்) எம்மத்தியில் 'ஷிகாக்கை' (பிளவுகளை) தோற்றுவிக்கலாகாது. கருத்து முரண்பாடுகளின் போது எமது முனனோர்கள் கைக்கொண்ட ஒழுங்குகளை கடைபிடிக்கப்படாமையினாலேயே இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு விடயத்தில் நான் ஒரு கருத்தை கொண்டிருக்கலாம், மற்றொருவர் அதில் என்னோடு முரண்படுகின்ற போது அவர் முஃமினாக இருக்கும் வரை அவருடன் மிகவும் பண்பாடாக நடந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்கக்கடமையாகும்.
'இது விடயத்தில் எனது கருத்து சரியானது. அது பிழையாக இருக்கவும் இடமுண்டு. இது விடயத்தில் அடுத்தவரின் கருத்து பிழையானது. அது சரியாக இருக்கவும் இடமுண்டு.' இக் கூற்று எமது முன்னோர்கள் கருத்து வேறுபாடுகளின் போது கைக்கொண்ட 'ஆதாபுகளுக்கு' ஒரு சிறந்த உதாரணமாகும்.
காபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.'மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.' (16:125) ஆனால் நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீது பழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு. மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.
3. குறைந்த சன்மார்க்க அறிவு
உண்மையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் எம்மத்தியில்லுள்ள பிரிவுகளும் பிரிவினைகளும் பெரும்பாலும் எமது சன்மார்க்க அறிவிலுள்ள குறைபாட்டினால் உருவானவையாகும். இவ்வாறு சன்மார்க்க அறிவிலுள்ள கோளாரின் காரணமாகவே ஒவ்வொரு குழுவினரும் தாம் மாத்திரமே சரி என்றும் தம்மை மாத்திரம் 'அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ' அமைப்பாக இனம் காட்டி தம்முடன் சிற்சில விடயங்களில் முரண்படுகின்ற பிற இஸ்லாமியச் சகோதரர்களை அதற்;கு அப்பால் இருப்பவர்களாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். மேலும், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தஃவாக்களத்தில் - அறிவும் அறிவும் மோதுவதாக தெரியவில்லை; அறிவும் அறியாமையும் முட்டிக்கொள்வதையும் காண்பது அரிது. அறியாமையும் அறியாமையுமே முட்டி மோதி சமூகத்தில் புரளிகளை கிளப்புவதைப் பார்க்க முடிகின்றது. மேலும் குறுகிய இயக்க வாதங்கள், தனிமனித பலவீனங்கள், தப்பபிப்பிராயங்கள் முதலானவையும் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து வருகின்றன.
4. உலமாக்களின் கடமை
இவ்வாரோக்கியமற்ற நிலை மிக அவசரமாக மாற்றப்படல் வேண்டும். இல்லாத போது இன்று நாம் காணும் இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகள் பூச்சியமாகி விடும் பேராபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும். இங்கு உலமாக்களின் பணி அவசியமாக வேண்டப்படுகின்றது. குறுகிய இயக்க வாதங்களை மறந்து அவர்கள் சமூகத்தின் ஒற்றுமைக்காக உழகை;கும் மகத்தான பொறுப்பை சுமந்தாக வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் உம்மத் பலயீனமுற்ற சந்தர்பங்களிலெல்லாம் அதனை பலப்படுத்தி கட்டிக்காத்த பெருமை அவ்வக்கால உலமாக்களையே சாரும். இறையச்சமும், நிறைந்த அறிவும், துணிச்சலுமிக்க ஒரு தலைமைத்துவம் எம் சமூகத்திற்கு இன்று தேவைப்படுகின்றது. இது ஒரு தனிமனித தலைமைத்துவமாகவன்றி ஒரு கூட்டு தலைமைத்துவமாக அமைவதே தற்போதைக்கு சாத்தியமானதாகும். இதற்காக நாம் என்றும் வலியுறுத்துவது போல அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நிழலின் கீழ் எல்லா உலமாக்களும் தம்மத்தியிலுள்ள சிறுசிறு பேதங்களையும் மறந்து அணிதிரளவேண்டும். உடன்பாடான விடயங்களை கண்டறிந்து அவற்றில் அனைவரும் இணைந்து செயற்படவும், முரண்படும் விடயங்களில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும் எமது உலமாக்கள் முன்வர வேண்டும். இதுவே இஸ்லாமியப் பண்பும், எமது முன்னோர்களின் முன்மாதிரியுமாகும்.
இந்த மாற்றம் மிக விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய நலன்விரும்பிகளின் வேணவாவாகும். உலமாக்களே! உங்களை கடமை அழைக்கிறது. கட்டுக்களை அவிழ்த்து (உம்மத்தின் நலன்) கருதி களத்திற்கு வர எல்லாம் வல்ல அல்லாஹ்வை இந்தப் புனிதமான மாதத்தில் பிராத்திப்போமாக.
உலகளாவியப் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் வட்டியாகும்
Created On: Thursday, 08 March 2012 18:18

இன்று ஏற்பட்டுள்ள உலகளாவியப் பொருளாதார நெருக்கடிக்கு மூல முதற் காரணம் வட்டியாகும். தற்போது இலங்கையில் சீரோ(zero) வட்டி அதாவது வட்டி இல்லை என்ற சுலோகத்துடன் தவணை முறையிலான வர்த்தகம் பெருகியிருக்கின்ற அதே வேளை, பல இடங்களில் கூட்டாக ஸகாத் சேகரிக்கப்படுவதுடன் பாரிய தொழிலதிபர் முதல் மிகச் சாதாரண பெட்டிக் கடை வியாபாரிகள் வரை ஸகாத் வழங்குவதில் ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படுவ- தாக ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தெரிவித்தார்.
'ஸகாத் எனும் கூட்டுக் கடமை' என்ற தொனிப்பொருளில், புத்தளம் முஹைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளி வாசலில் அண்மையில் நடைபெற்ற சிறப்புரையின் போதே அஷ்ஷெய்க ஏ.ஸீ. அகார் முஹம்மத்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடும் போது,அண்மைய இஸ்லாமிய எழுச்சியினால் உந்தப்பட்ட இளைஞர், யுவதிகள் ஸகாத் தொடர்பான விழிப்புணர்வுடன் நோன்பு காலம் நெருங்கும் போது நேரில் சந்தித்தும் தொலைபேசி ஊடாகவும் நிசாப் தொடர்பான விளக்கங்களைக் கேட்டறிகின்றனர் எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, புத்தளம் பெரிய பள்ளியினால் மேற்கொள்ளப் பட்டு வரும் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் பணிகளை அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் மனம் திறந்து பாராட்டினார். புத்தளம் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து அதன் நிருவாக உருபபினர் ஒருவர் குறிப்பிடும் போது, கடந்த வருடம் 2011 றமழான் முதல் இன்று வரையான 5 மாதங்களுக்குள் ரூ. 37 இலட்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் முழுவதுமாக சேர்ந்த ரூ. 48 இலட்சத்துடன் ஒப்பிடும் போது திருப்த்திகரமான வளர்ச்சியாகும் எனக் குறிப்பிட்டார். புத்தளத்தில் திரட்டப்படக் கூடிய ஸகாத் தொகை சுமார் 40 மில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2000 பேர் வரை கலந்து கொண்ட இச்சிறப்புரையினை Knowledge Box நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக இணையப்பரப்புச் செய்தது.
கவனயீர்ப்பைப் பெற வேண்டிய இளைஞர் விவகாரம்
Created On: Thursday, 08 March 2012 17:16

இளமைப் பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும் (Childhood) முழு வளர்ச்சிப் பருவத்திற்கும் (Full manhood) இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் (Physical strength and energy) கொண்ட பருவமாகும். வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்திறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவன் வளமான வாழ்வுக்கு உரித்துடையவனாவது சாத்தியமானதன்று. இதனாலேயே முதுமை வரும் முன்னர் இளமையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிமொழி வழிகாட்டி நிற்கின்றது.
பருவ வயது என்பது முற்றிலும் நல்ல பருவமல்ல, கெட்ட மோசமான பருவமுமல்ல. இளமை என்பது வாளைப் போன்றது. அதனை போர் வீரனும் பயன்படுத்தலாம்; கொள்ளைக்காரனும் பயன்படுத்த முடியும். மனித இன வரலாற்றில் ஆக்க பணிகளில் முன்னின்று உழைத்த பெருமை அதிகம் இளைஞர்களையே சாரும். அதேவேளை, உலகில் நாச வேலைகளுக்கும், அழிவுகளுக்கும் அவர்களே துணை நின்றதையும் காணலாம்.
ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் இளைஞர் பரம்பரையை சரியாக பயிற்றுவித்து முறையாக நெறிப்படுத்தி வழிப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. அத்தகையதொரு சமூகமே எழுச்சி பெற முடியும் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. இளைஞர்களை இழந்த சமுதாயம் தன் இருப்பை இழந்து விடும் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும். இவ்வகையில் இளமையின் முக்கியத்துவத்தை பக்குவப்படுத்தி அதன் மூலம் பயன் பெறுமாறு வலியுறுத்துகின்றது. முன்மாதிரியான ஓர் இளைஞனுக்கு உதாரணமாக அல்-குர்ஆன் நபி யூஸுபைக் குறிப்பிடுகின்றது. அவரின் ஆளுமைப் பண்புகளை அவர் பெற்றிருந்த திறன்களையும் தருகின்றது. அடையாள புருஷர்களாகக் கொள்ளத்தக்க ஓர் இளைஞர் குழுவை பற்றி அல்-குர்ஆனில் அல்-கஹ்ப் அத்தியாயம் விளக்குகின்றது.
'நிச்சயமாக அவர்கள் சில இளைஞர்கள்; அவர்கள் தங்கள் இரட்சகனை விசுவாசித்தார்கள்; மேலும் நேர்வழியை அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்தினோம். மேலும் (அக்கால அரசன் முன்னிலையில்) அவர்கள் எழுந்து நின்று வானங்களுக்கும் பூமிக்கும் இரட்சகன் தான் எங்கள் இரட்சகன்; அவனையன்றி வணக்கத்திற்குரிய வேறு நாயனை நாம் அழைக்க மாட்டோம்; (அவ்வாறு அழைத்தால்) அப்போது உண்மையில் நாம் வரம்பு மீறிய வார்த்தையை கூறிவிட்டோம் என்று அவர்கள் ள உறுதியாக கூறிய போது அவர்களுடைய உள்ளங்களை (நேரான வழியில்) நாம் உறுதிப்படுத்தி விட்டோம்'.; (18:13, 14)
நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவ பணிக்கு தோல் கொடுத்தவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்களாகவே இருந்தனர். இஸ்லாமிய வரலாற்றில் ஸ்பெயினை கைப்பற்றிய தாரிக் பின் ஸியாதும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முஹம்மத் பின் காஸிமும் இளம் வாலிபர்களே.
ஆனால், இன்றைய முஸ்லிம் உம்மாவைப் பொறுத்த வரையில் அதன் இளைய தலைமுறையினரின் நிலை பெரிதும் கவலைக்கிடமானதாகக் காணப்படுகின்றது. மேற்கத்தேய சடவாத, உலகாயத கலாசாரத்தின் படைபெயடுப்புக்களுக்கு முன்னால் எமது இளைஞர்கள் நாளாந்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். சிற்றின்பங்களும் அற்ப உலகாயத அடைவுகளுமே இவர்களில் பெரும்பான்மையானோரின் இலக்குகளாக இருக்கின்றன. வாழ்வின் அர்த்தத்தைப் புரியமால், தம் மீதுள்ள பொறுப்புக்களை உணராமல் தான்தோன்றித்தனமாக வாழும் வாலிபர்களையே எங்கும் காண முடிகின்றது. இளைஞர் சமூகத்தின் இவ்வீழ்ச்சி நிலையின் பயங்கர விளைவை உலகளாவிய 'முஸ்லிம் உம்மா' இன்று அனுபவித்து கொண்டிருக்கின்றது.
எனவே, இன்றைய சமூக புனர்நிர்மாண சீர்திருத்த பணியிலும், பிரசார பணியிலும் இளைஞர் விவகாரம் முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெற வேண்டியது அவசியமாகும். அதிலும் இளைஞர்களின் தனிப்பட்ட ஒழுக்க வாழ்வை ஒழுங்குபடுத்துவது பிரதான இடத்தைப் பெறல் வேண்டும். இன்றைய இளைஞர்களின் இருப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்சினை ஒழுக்க சீர்கேடுகளே என்பதை அறியாதோர் இருக்க முடியாது. ஆயினும் நடைமுறையில் முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்களின் பிரச்சினைகள் உரிய இடத்தை பெறாமை கவலைக்குரியதாகும்.
உலமாக்கள், தாஇகள் உட்பட இஸ்லாமிய அமைப்புகள் தமது நிகழ்ச்சி நிரலில் இளைஞர் உருவாக்கத்திற்கு உரிய இடமளிப்பது காலத்தின் இன்றியமையாத தேவையாகும். அண்மைக் காலமாக இஸ்லாமிய மாணவர், இளைஞர் அமைப்புகள் இவ்விடயத்தில் கூடிய கரிசனை காட்டுவது மகிழ்ச்சிக்குரியதாகும். இளைஞர் விவகாரங்களை கவனத்திற் கொண்டு தமது தஃவாவை அமைத்துக் கொண்டுள்ள சில உலமாக்களையும் அண்மைக் காலமாக தஃவாக் களத்தில் பார்க்க முடிகின்றது. இவர்களும் எமது பாராட்டுக்குரியவர்களாவர்.
இன நல்லிணக்கமும், சகவாழ்வும்
Created On: Tuesday, 14 February 2012 16:35

இலங்கை பல இனத்தவர்களும் பல மதங்களைச் சார்ந்தவர்களும் வாழுகின்ற ஒரு நாடு. இங்குள்ள இனங்களுக்கிடையிலும், மதத்தவர் மத்தியிலும் நிலவுகின்ற நல்;லுறவிலேயே இந்நாட்டின் மேம்பாடும், முன்னேற்றமும் தங்கியுள்ளது. இந்த வகையில் இந்நாட்டில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களாகிய மூவினத்தவர் மத்தியிலும் காலாகாலமாக நல்லிணக்கம் நிலவி வந்த போதிலும் கடந்த சில தசாப்த காலமாக இந்நிலைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. அதன் கோரமான விளைவை கடந்த சுமார் மூன்று தசாப்த காலமாக ஒரு பயங்கர யுத்தமாக இந்நாடு அனுபவித்தது. இப்;போது யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சமாதானம் மலர்ந்துள்ளது. ஆயினும், இனங்களுக்கிடையில் சுமுகமான ஒரு நிலை தோன்றியதாகத் தெரியவில்லை. கசப்புணர்வும், பகைமையும், வெறுப்பும், சந்தேகமும் தொடர்ந்தும் நிலைத்திருக்கும் ஒரு கவலைக்குரிய நிலையை அவதானிக்க முடிகின்றது.
இந்நாட்டில் வாழும் சகல இனங்களுக்கு இடையிலும் நல்லுறவைக் கட்டியெழுப்புவதே இன்று அனைவர் முன்னாலும் உள்ள பெறும் சவாலாகும். இச்சவாலை சமாளித்து வெற்றி கொள்வதிலேயே நமது நாட்டின் சுபீட்சமும், வளமான எதிர்காலமும் தங்கியுள்ளது என்பதை எவறும் மறுக்க முடியாது. குறிப்பாக முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழும் சகோதர இனங்களோடு இறுக்கமான உறவை வளர்த்துக் கொள்வது காலத்தின் தேவையாகும். முஸ்லிம் சமூகத்தைப் பற்றியும் அவர்கள் பின்பற்றும் மார்க்கத்தைப் பற்றியும் பல மட்டங்களிலும் தப்பபிப்பிராயங்கள் நிலவுகின்ற காலம் இது. சந்தேகங்களைக் களைந்து எம்மைப் பற்றிய உண்மை நிலையை பிற சமூகத்தவர்கள் விளங்கிக் கொள்வதற்கு நாம் ஆவண செய்தல் வேண்டும். இதன் முதற் கட்டமாக பரஸ்பர அறிமுகம் முக்கியத்துவம் பெறுகின்றது. அடுத்த கட்டமாக பரஸ்பர புரிந்துணர்வு வளர்க்கப்படல் வேண்டும். சகிப்புத் தன்மையைக் கைக்கொள்வது மூன்றாம் கட்டமாகும். நான்காம் கட்டமாக உடன்படும் விடயங்களில் ஒத்துழைக்கும் நிலை உருவாக்கப்படல் வேண்டும். திட்டமிட்ட அடிப்படையில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் இம்முன்னெடுப்பு மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இஸ்லாம் பிற மதத்தவர்களுடன் மோதலை விரும்பும் மார்க்கமல்ல. மாறாக அது பிற சமயத்தவர்களுக்கு நன்மை செய்யுமாறும் அவர்களுடன் நீதியாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ளுமாறும் வலியுத்துகின்ற மார்க்கமாகும். முஸ்லிம்களுடன் சுமுகமாக வாழும் முஸ்லிம் அல்லாதவர்களை இம்சிப்பது தன்னை இம்சிப்பதற்குச் சமமான செயலாகும் என நபியவர்கள் குறிப்பிட்ட வாக்கு இங்கு நினைவு கூரத்தக்கதாகும். இஸ்லாமிய வரலாற்றில், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத சமூகங்கள் எல்லா வகையான உரிமைகளையும், சலுகைகளையும் பெற்று எந்தளவு தூரம் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்தார்கள் என்பதை அனைவரும் படிக்க வேண்டும். ஒரு யூதனுடைய ஜனாஸா ஊர்வலத்தைக் கண்டு நபியவர்கள் எழுந்து நின்றமை, கிறிஸ்தவர்களான நஜ்ரான் பிரதேசத் தூதுக் குழுவை நபியவர்கள் மஸ்ஜி;துன் நபவியில் வைத்து வரவேற்று கௌரவித்தமை, அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டமை, நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு யூதனை அல்லாஹ் நிரபராதி எனக்; கூறி அல்- குர்ஆன் வசனங்களை இறக்கியமை என இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பிற சமயத்தவர்களுடனான நல்லுறவிற்கு பல சான்றுகளை அடுக்கடுக்காகக் காணலாம்.
எனவே, இஸ்லாத்தினதும், இஸ்லாமிய வரலாற்றினதும் பின்புலத்தில் நின்று சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கி சுபீட்சமான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எமது பங்களிப்பைச் செய்வதோடு, இஸ்லாத்தின் உண்மைக்கு சான்று பகர்பவர்களாக மாறவும் திடசங்கற்பம் பூணுவோமாக!
Page 43 of 64
<< Start < Prev 41 42 43 44 45 46 47 48 49 50 Next > End >>
