உலகளாவியப் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் வட்டியாகும்
Last Updated (Thursday, 08 March 2012 18:21) Thursday, 08 March 2012 18:18

இன்று ஏற்பட்டுள்ள உலகளாவியப் பொருளாதார நெருக்கடிக்கு மூல முதற் காரணம் வட்டியாகும். தற்போது இலங்கையில் சீரோ(zero) வட்டி அதாவது வட்டி இல்லை என்ற சுலோகத்துடன் தவணை முறையிலான வர்த்தகம் பெருகியிருக்கின்ற அதே வேளை, பல இடங்களில் கூட்டாக ஸகாத் சேகரிக்கப்படுவதுடன் பாரிய தொழிலதிபர் முதல் மிகச் சாதாரண பெட்டிக் கடை வியாபாரிகள் வரை ஸகாத் வழங்குவதில் ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படுவ- தாக ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தெரிவித்தார்.
'ஸகாத் எனும் கூட்டுக் கடமை' என்ற தொனிப்பொருளில், புத்தளம் முஹைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளி வாசலில் அண்மையில் நடைபெற்ற சிறப்புரையின் போதே அஷ்ஷெய்க ஏ.ஸீ. அகார் முஹம்மத்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடும் போது,அண்மைய இஸ்லாமிய எழுச்சியினால் உந்தப்பட்ட இளைஞர், யுவதிகள் ஸகாத் தொடர்பான விழிப்புணர்வுடன் நோன்பு காலம் நெருங்கும் போது நேரில் சந்தித்தும் தொலைபேசி ஊடாகவும் நிசாப் தொடர்பான விளக்கங்களைக் கேட்டறிகின்றனர் எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, புத்தளம் பெரிய பள்ளியினால் மேற்கொள்ளப் பட்டு வரும் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் பணிகளை அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் மனம் திறந்து பாராட்டினார். புத்தளம் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து அதன் நிருவாக உருபபினர் ஒருவர் குறிப்பிடும் போது, கடந்த வருடம் 2011 றமழான் முதல் இன்று வரையான 5 மாதங்களுக்குள் ரூ. 37 இலட்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் முழுவதுமாக சேர்ந்த ரூ. 48 இலட்சத்துடன் ஒப்பிடும் போது திருப்த்திகரமான வளர்ச்சியாகும் எனக் குறிப்பிட்டார். புத்தளத்தில் திரட்டப்படக் கூடிய ஸகாத் தொகை சுமார் 40 மில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2000 பேர் வரை கலந்து கொண்ட இச்சிறப்புரையினை Knowledge Box நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக இணையப்பரப்புச் செய்தது.
