வாழ்த்துச்செய்திகள் - அல்ஹாஜ் என்.எம். அமீன்
Last Updated (Saturday, 01 November 2008 06:43) Thursday, 30 October 2008 07:05
அல்ஹாஜ் என்.எம். அமீன்
வகை தொகையின்றிப் பெருகி வரும் இணையத்தளங்களின் வரிசையில் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளரும் சமூகச்சிந்தனையாளருமான சகோதரர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்களின் இணையத்தளத்திற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இஸ்லாதின் மீதும் முஸ்லிம்கள் மீதும் பலவித குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வரும் இக்கால கட்டத்தில் உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறும் உயரிய உணர்வோடு இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்படுவது நீண்டகால வெற்றிடத்தை நிறைவு செய்யும் ஒரு முயற்சியாகவே நான் காண்கின்றேன்.
கெய்ரோ அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வொன்றில் இஸ்லாத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்க்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நோக்கும் போது விரல் விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம்களால் நடத்தப்படும் இஸ்லாமிய இணையத்தளங்கள் காணப்படும் நிலையில் இந்த இணையத்தளம் வெளிவருவது பெருமகிழ்ச்சிக்குரியதாகும்.
சர்வ தேசத்தில் மட்டுமன்றி நாம் வாழும் தாய் நாட்டிலும் இஸ்லாமும் முஸ்லிம்களும் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பெரும்பான்மை இன மக்களது மொழியான சிங்களத்திலும் இந்த இணையத்தளத்தில் ஒரு தனிப் பகுதி வருவது மிக முக்கியமானது. இன்று எமது சமூகத்திலும் கணிசமான பிரிவினர் சிங்களத்தை போதனா மொழியாகக் கொண்டிருப்பதனால் அவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறிவதற்கு போதிய வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் இந்த இணையத்தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.
'இஸ்லாம் ஒன் லைன்' இணையத்தள அங்குரார்ப்பண வைபவத்தில் உரையாற்றிய அறிஞர் யூஸுபுல் கர்ளாவி 'இணையத்தளம் மூலமான பிரசாரமே தற்காலம் வேண்டிநிற்கும் ஜிஹாதாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். நாம் இந்த ஊடகங்களை இஸ்லாத்தின் தூதை எத்திவைப்பதற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு சிறந்த அறைகூவலாகும்.
பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் சமூக எழுச்சிக்கும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் உழைத்து வரும் சகோதரர் அகார் முஹம்மத் அவர்களின் இந்த முயற்சி காலத்தின் தேவை மட்டுமன்றி யுகத்தின் தேவையை நிறைவு செய்யும் ஒரு நல்ல முயற்சியாகும்.
ஊடகத்துறையில் அநாதைகளாக்கப்பட்டு மாற்று ஊடகங்களுக்குள் பிரவேசித்து கலாசார சீரழிவுக்குள் சிக்கியிருக்கும் எம் இளைய தலைமுறையினரை கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் இந்த இணையத்தளம் சிறப்பாக செயற்பட முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகின்றது.
அல்ஹாஜ் என்.எம். அமீன்
தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
