வாழ்த்துச்செய்திகள் - அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
Last Updated (Saturday, 01 November 2008 06:43) Thursday, 30 October 2008 07:05
அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
இந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தால் நன்குணரப்பட்ட கல்விமான் அஷ்-ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் இணையத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளமை பற்றி எனக்கு அறிவிக்கப்பட்டபோது உண்மையிலேயே பெருமகிழ்வடைந்தேன். கொடைவள்ளல் அல்ஹாஜ் நளீம் அவர்களில் தொடங்கி பிக்ஹ், வானொலி, தொலைக்காட்சி நிகழச்சிகள், தஃவா, குத்பாக்கள் என நீண்ட விடயதானத்தைக் கொண்டு அமையும் இவ்விணையத்தளம் காலத்தின் தேவையை அனுசரித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறந்த கைங்கரியமாகும்.
இவ்விணையத்தளத்தில் சிங்களத்துக்கான ஒரு தனிப்பகுதியை அஷ்-ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் ஏற்படுத்த உத்தேசித்துள்ளமை பற்றியும் அறியக் கிடைத்தது. இஸ்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் இஸ்லாத்தின் தூய வடிவை எம்மோடு வாழும் மாற்றுச் சமூகத்தாருக்கு சரியாக விளக்கும் பொறுப்பை ஆலிம்கள் தோள் சுமக்கும் நிலையில் ஆலிம்கள் சார்பாக அப்பணியை அஷ்-ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் இவ்விணையத்தள சிங்களப் பகுதி மூலம் செய்ய முயல்வதை அவதானிக்க முடிகிறது.
ஒரு ஆலிம் என்ற முறையிலும், இந் நாட்டின் ஆலிம்களின் அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் என்ற முறையிலும் இப்பணி நெடிதே வளர்ந்து இலங்கைத் தீவினோடு மாத்திரம் வரையறை கொண்டு விடாது உலகத்தின் அடுத்த கோடி வரையும் வியாபித்துச் செல்ல வேண்டுமென இதயம் திறந்து பிரார்தித்து வாழ்த்துகிறேன்.
அஷ்-ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களின் நற்பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!.
அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
