Sheikhagar.org - Official site for sheikhagar
இன்றைய தஃவாவில் முன்னுரிமை பெற வேண்டிய அம்சங்கள்
Created On: Friday, 31 July 2015 16:28

கடந்த மாதம் (20.05.2015) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற விஷேட தேசிய மாநாட்டில் ஜம்இய்யதுல் உலமாவின் துணைத் தலைவரும் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சத்தை அல்ஹஸனாத் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அவ்வக்கால பிரச்சினைகளுக்கு, சவால்களுக்கு முகங்கொடுத்து இஸ்லாத்தின் ஔியில், குர்ஆன், ஸுன்னாவின் வௌிச்சத்தில் தீர்வுகளை முன்வைக்கின்ற ஒரு செயற்பாடுதான் தஃவா. தூய இஸ்லாம் எதிர்நோக்குகின்ற சவால்களுக்கும் அறைகூவல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுப்பதுதான் தஃவா என்று வேறு வார்த்தைகளில் சொன்னாலும் பிழையாக இருக்க மாட்டாது. முன்னுரிமை என்ற அம்சம் இஸ்லாமிய ஷரீஆவில் குறிப்பாக, இஸ்லாமிய பிக்ஹில் முக்கியத்துவம் பெறுகின்ற விடயமாகும். எனவேதான் இது பிக்ஹுல் அவ்லவிய்யாத் என ஒரு கலையாக தோற்றம் பெற்றிருக்கிறது.
இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய போதனைகள், வாழ்க்கை வழிமுறை, குலபாஉர் ராஷிதூன்களின் வாழ்க்கை வழிமுறை, பிற்பட்ட கால ஸலபுகளின் வாழ்க்கை வழிமுறை ஆகியவற்றை உற்றுநோக்குகின்றபோது அவர்கள் அவ்லவிய்யாத் என்ற முன்னுரிமைகளை கவனத்திற் கொண்டு தமது தஃவா பணியை எவ்வாறு அமைத்துக் கொண்டார்கள் என்பதனை அவதானிக்க முடியும்.
இறைதூதரின் மக்கா கால வாழ்க்கை அகீதாவுக்கு, இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்கின்ற, முக்கியத்துவம் கொடுக்கின்ற, முன்னுரிமை கொடுக்கின்ற வகையிலேயே அமைந்தது. ஒப்பீட்டு ரீதியில் நபியவர்களின் மதீனா வாழ்க்கைக் காலத்தைப் பொறுத்தவரை, அதில் முஆமலாத் என்ற பகுதிகளுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். மக்காவில் இறக்கப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள், அத்தியாயங்கள் அகீதாவுக்கு அதிக முக்கியத்துவம் பேசுகின்றன. மதீனாவில் இறக்கப்பட்ட ஸூராக்களில் அகீதா சார்ந்த அம்சங்களோடு அஹ்காம், முஆமலாத் முதலான பகுதிகளுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறே மக்கா காலத்தில் நபியவர்கள் முஷ்ரிக்களுடைய விவகாரங்களை முன்னுரிமைப்படுத்தினார்கள்.
நபியவர்கள் மதீனாவுக்குச் சென்றதன் பின்னர் முஷ்ரிக்களுடைய விவகாரங்களை கவனத்திற் கொண்டது போலவே அஹ்லுல் கிதாப் சார்ந்த விவகாரங்களுக்கு குறிப்பாக யூதர்கள், நஸாராக்களுடைய விவகாரங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து செயற்பட்டதற்கு நபி (ஸல்லல்லாஹு0 அலைஹி வஸல்லம்) அவர்களின் ஸீரா தௌிவான சான்றாதாரம். சற்று ஆழமாக பார்க்கின்றபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அத்தனை செயற்பாடுகளிலும் முன்னுரிமை என்ற கருத்தாழம் அவதானமாக கையாளப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடியும்.
Page 16 of 64
<< Start < Prev 11 12 13 14 15 16 17 18 19 20 Next > End >>

