நூற்கள் - சன்மார்க்க சட்ட விளக்கங்கள் - (கேள்வி - பதில்)
Last Updated (Saturday, 01 November 2008 07:34) Thursday, 30 October 2008 07:45
ஒரு முஸ்லிம் தனது வாழ்வை இஸ்லாமிய மயப்படுத்திக் கொள்வதாயின் சிறிய, பெரிய விடயங்கள் அனைத்திலும் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை, ஹலால், ஹராம் பற்றிய விபரங்களை அறிந்து வைத்திருப்பது இன்றியமையாததாகும். அவ்வாறில்லாத போது அவர் இஸ்லாத்தின் பேரிலேயே பல பாவங்களையும் தவறுகளையும் செய்வது தவிர்க்க முடியாதவொன்றாய் இருக்கும்.
இன்று நாம் காணும் உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியின் விளைவாக முஸ்லிம்கள் மத்தியில் எந்தவொரு பிரச்சினையின் போதும் அது பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பை அறிந்து கொள்வதில் ஒரு வகை முனைப்பு காணப்படுவது தெளிவாக அவதானிக்கப்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்னால் நளீமிய்யா வெளியீட்டுப் பணியகத்தின் பருவ வெளியீடான இஸ்லாமிய சிந்தனையில் பிக்ஹுஷ்ஷரீஆ என்ற பேரில் கேள்வி - பதில் பகுதியொன்றை அறிமுகப்படுத்தி ஆரம்பித்தபோது வந்து குவிந்த கேள்விகள் இதற்கு சிறந்த சான்றாகும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சட்ட விளக்கங்கள் எனது சொந்த ஆய்வினடிப்படையில் பிறந்தவையல்ல. மாறாக அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகியவற்றின் ஒளியிலும் ஆரம்பகால இமாம்களின் தீர்ப்புகளைத்தழுவியும் அமைந்தவையாகும். மேலும், பல சட்ட விளக்கங்களை எழுதுவதில் குறிப்பாக நவீன கால பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதில் ஆரம்பகால அறிஞர்களின் ஆக்கங்களைப் போலவே அஷ்ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி, அஷஷெய்க் முஹம்து அல்கஸ்ஸாலி, மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி, ஸெய்யித் ஸாபிக் உட்பட மற்றும் பல பிற்பட்டகால, சமகால அறிஞர்களின் எழுத்துக்கள் எமக்கு பேருதவியாக அமைந்தன என்பதையும் இங்கு நன்றியுடன் நினைவு கூற விரும்புகின்றேன்.
