நூற்கள் - இஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்
Last Updated (Saturday, 01 November 2008 07:34) Thursday, 30 October 2008 07:45

அல்லாஹ்வின் பேரருளினால் இன்று முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க ரீதியிலான விழிப்புணர்வு தோன்றியுள்ளதை பரவலாக அவதானிக்க ளாயசநநய எயசயலயசihயடமுடிகின்றது. இதன் விளைவாக வணக்க வழிபாடுகளில் மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக உறவுகளிலும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும், ஹலால், ஹராம் வரையறைகளைப் பேண வேண்டும் என்ற ஆர்வம் எல்லோர் மத்தியிலும் உருவாகி வருவதைக் காண முடிகின்றது. இப்பின்னணியில் பலர் மார்க்க விடயங்களை அறிந்து கொள்ள உலமாக்களை அணுகுகின்றனர். நூல்களைத் தேடிப் படிக்கின்றனர்.
ஆயினும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, அவர்களின் பிரச்சினைகளுக்கு விளக்கம் சொல்லும் அளவுக்கு போதுமான படைப்புகள், ஆக்கங்கள் தமிழில் இல்லை என்றே கூற வேண்டும். இக்குறையை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்யும் நோக்குடனேயே எனது சன்மார்க்க சட்டவிளக்கங்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.
மக்களுக்கு ஷரீஆ வரையறைகளைப் பற்றிய விளக்கங்களை மேலும் விரிவாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறை வாழ்வில் இஸ்லாம் என்ற தலைப்பில் ஒரு தொடர் பேச்சை இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கூடாக நிகழ்த்தி வருகின்றேன். இந்நிகழ்ச்சிக்கு நேயர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன் உரைகளை நூலுருவில் கொண்டு வருவது பயனுள்ளதாக அமையும் என பலர் ஆலோசனை கூறினர். அந்தவகையில் எனது தொடர் பேச்சின் முதற் பகுதியே இங்கு நூலுருப் பெற்றிருக்கின்றது.
ஹலால், ஹராம் தொடர்பாக குர்ஆன், சுன்னாவின் ஒளியில் இமாம்களால் பெறப்பட்டுள்ள பொது விதிகளை நூலின் முதற் பகுதி விளக்குகின்றது. இவ்விதிகள் இஸ்லாமிய ஷரீஆவின் தனிப் பெரும் சிறப்பம்சங்களை விளங்கிக் கொள்ள துணை புரிவதுடன் ஹலால், ஹராம் வரையறைகளுக்குப் பின்னாலுள்ள தத்துவங்களையும் தாத்பரியங்களையும் அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. நாம் எமது அன்றாட வாழ்வில் எதிர் நோக்கும் புதுப்புது பிரச்சினைகளைப் பற்றிய முடிவுகளைப் பெறுவதற்கும் இவ்விதிகள் பெரும் துணையாய் அமையும்.
நூலின் இரண்டாம் பகுதி உணவு தொடர்பான ஹலால், ஹராம் வரையறைகளை விளக்குகின்றது. தொடர்ந்து உடை பற்றிய மார்க்க விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
ஷெய்க் யூஸுப் அல்-கர்ழாவி, ஸெய்யித் ஸாபிக், முஸ்தபா அஹ்மத் ஸர்கா, ஸகரிய்யா அல்பர்ரீ, அப்துல் ஹலீம் மஹ்மூத் முதலான பிற்கால, சமகால அறிஞர்களின் சில நூல்களும் இப்னுல் கையிம், ஷெளகானி போன்ற ஆரம்ப கால அறிஞர்கள் சிலரின் ஆக்கங்களும் இவ்வாக்கத்தைத் தயாரிப்பதற்கு எனக்குப் பெரிதும் துணைபுரிந்தன என்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
