நூற்கள் - நபிவழி - 02
Last Updated (Saturday, 01 November 2008 07:34) Thursday, 30 October 2008 07:45
நபிவழி - 02
அல்குர்ஆனுக்கு நடைமுறை விளக்கமாக அமைந்திருப்பது ஸுன்னா. முஸ்லிம் தனிமனிதனுக்கும் இஸ்லாமிய சமூகத்துக்குமான செயல்முறையுடன் கூடிய விரிவான வாழ்க்கை நெறியை வகுத்துக் கொடுப்பது அதுவே.
தமது சொல்லாலும் செயலாலும் தமது வாழ்க்கைப் போக்கினாலும் அல்குர்ஆனுக்கு நடைமுறை விளக்கம் கொடுத்தவர்கள் நபி (ஸல்) அவர்கள். அன்னாரின் அந்தரங்கம், பகிரங்கம், தூக்கம், விழிப்பு, சொந்த வாழ்வு, பொது வாழ்வு, அல்லாஹ்வுடனான தொடர்பு, உறவினர்கள், அந்நியர்கள், நண்பர்கள், பகைவர்கள் ஆகியோருடனான நிலைப்பாடுகள் உட்பட பிற நடவடிக்கைகள் அனைத்தும் அல்குர்ஆனைப் பிரதிபலிப்பனவாக அமைந்தன.
எனவே, ஒருவர் ஸுன்னா வகுத்துக் காட்டும் வாழ்க்கை நெறியை அறிந்து கடைப்பிடிக்க முன்வரும் போதே அவர் இஸ்லாத்தை ஏற்று வாழ அருகதையுடையவராகின்றார். இவ்வகையில், ஸுன்னாவை அதன் மூல உருவில் விளங்குவது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் முதல் தரக் கடமைகளில் ஒன்றாக அமைகின்றது. அப்போதுதான் அவரால் ஸுன்னாவை முறையாகப் பின்பற்ற முடியும்.
ஆனால், நடைமுறையில், ஸுன்னாவின் முக்கியத்துவமும் அவசியமும் உணரப்பட்டாலும் பலர் ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்கள் அவற்றின் மூலம் கருதியதைப் புரிந்து கொள்வதில் தவறிவிடுவது அவதானிக்கப்படுகின்றது.
இன்று ஸுன்னாவைப் பொறுத்தவரையில் திரிபுகள், இடைச்செருகல்கள், பிழையான விளக்கங்கள் பரவலாக இடம்பெறுகின்றன. பிற்பட்ட காலத்தில் ஸுன்னாவுக்கு ஏற்படக் கூடிய இத்தகைய ஆபத்துக்களிலிருந்து அதனைப் பாதுகாப்பது அவ்வக்கால அறிஞர்களின் கடமை என முன்னறிவிப்புச் செய்யும் ஒரு ஹதீஸும் உண்டு. அது கீழ்வருமாறு:
'இந்த (ஸுன்னா என்ற) அறிவை ஒவ்வொரு சந்ததியிலும் நியாயமானவர்கள் (அறிஞர்கள்) சுமப்பர். அவர்கள் அதனை வரம்பு மீறியோரின் திரிபு, குழப்பவாதிகளின் இடைச்செருகல், அறிவீனர்களின் விளக்கம் ஆகியவற்றிலிருந்து காப்பர்.' (இப்னு ஜரீர், இப்னு அதீ)
மேற்குறிப்பிட்ட குறைகள் ஏற்படுவதனைக் தவிர்ப்பதற்கு ஸுன்னாவைக் கையாளும் ஒருவர், சில அம்சங்களைப் பற்றிய தெளிவைப் பெற்றிருப்பது முக்கியம். அவற்றில் பிரதானமானவை பின்வருமாறு:
1. ஸுன்னா என்ற பதப்பிரயோகமும் அதற்குரிய வரைவிலக்கணங்களும்
2. இஸ்லாத்தில் ஸுன்னாவுக்குரிய இடம்
3. ஸுன்னாவின் வகைகள், தராதரங்கள்
4. ஸுன்னா தொடர்பான மூலாதார நூல்கள்
5. ஸுன்னாவைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கான விதிமுறைகள்
ஸுன்னாவைப் படிக்க விரும்பும் எவரைப் பொறுத்தவரையிலும், இவ்வம்சங்கள் பற்றிய தெளிவை அவர் பெற்றிருப்பது இன்றியமையாததாகும்.
மேலும், ஒருவர் நடைமுறையில் ஒரு ஹதீஸை அணுகும் போது முதலில் அதன் நம்பகத்தன்மையையும் தரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
அடுத்த கட்டமாக குறித்த ஹதீஸ் அதனை விடத் தரத்தில், பலத்தில் கூடிய ஒரு சட்ட வசனத்துடன் முரண்படுகின்றதா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளல் வேண்டும்.
இறுதியாக, உரிய விதிமுறைகளினடியாக அந்த ஹதீஸ் முன்வைக்கும் கருத்தை - உள்ளடக்கத்தை முடியுமான வரை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு முனைய வேண்டும்.
உண்மையில், ஒவ்வொரு ஹதீஸின் மூலமும் நபி (ஸல்) அவர்கள் கூற வந்த கருத்து எது என்பதனைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. வெறுமனே மொழி ரீதியாக மாத்திரம் ஹதீஸ் ஒன்றை விளங்க முற்படுவது பாரதூரமான பிழைகளுக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.
ஒரு ஹதீஸை அணுகும் போது, அதனை மொழி ரீதியில் நோக்குவது போன்றே அதன் வசனப் போக்கு, அது சொல்லப்பட்ட பின்னணி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் அல்குர்ஆன் வசனங்கள், பிற நபிமொழிகள், பொதுவான சன்மார்க்க விதிகள் முதலியவற்றின் ஒளியிலும் நோக்கியே விளங்க வேண்டும்.
ஹதீஸ்களில் சட்டவாக்கத்திற்குட்பட்டவை, உட்படாதவை, பொதுப்படையாக வந்தவை, குறிப்பாக (ஒரு சந்தர்ப்பத்திற்காக) வந்தவை ஆகியவற்றைப் பிரித்து அறிந்து கொள்வதும் தேவையான ஒன்றாகும்.
ஸுன்னாவைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் சில அடிப்படையான வழிகாட்டல்களை முன்வைக்கின்றார்கள். அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:
1. ஸுன்னாவை அல்குர்ஆனின் ஒளியில் விளங்க வேண்டும்
2. ஒரு ஹதீஸை விளங்கிக் கொள்வதற்கு, அது பேசும் விடயம் தொடர்பான எல்லா ஹதீஸ்களையும் திரட்டி இணைத்து நோக்கல் வேண்டும்
3. முரண்படும் ஹதீஸ்களுக்கிடையில் இணக்கம் காணல்வேண்டும். அல்லது பலமானதைத் தெரிவு செய்தல் வேண்டும்
4. ஹதீஸ்களை, அவை கூறப்பட்ட பின்னணிகள், நோக்கங்கள் ஆகியவற்றை வைத்து அணுகுதல் வேண்டும்
5. ஹதீஸகள் கூற வரும் அடிப்படைக் கருத்துக்களையும் அவற்றுக்குக் கூறப்படும் சந்தர்ப்ப உதாரணங்களையும் பிரித்து விளங்கல் வேண்டும்
6. ஹதீஸ்களில் வெளிப்படையான பொருளில் கூறப்பட்ட கருத்துக்களையும் உருவகமாகக் கூறப்பட்டுள்ளவற்றையும் பகுத்தறிதல் வேண்டும்
7. ஹதீஸகளில் இடம்பெற்றுள்ள சொற்பிரயோகங்கள் உணர்த்தும் கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
இத்தகைய வழிகாட்டல்களைப் பேணி ஹதீஸ்களைக் கையாளும் போதே அவற்றின் மூலம் நாடப்பட்ட கருத்துக்களை விளங்கிப் பயனடைய முடியும்.
