நோன்பு தொடர்பான சில சட்டங்கள்
Last Updated (Monday, 27 October 2008 19:04) Sunday, 14 September 2008 16:59
| Article Index |
|---|
| நோன்பு தொடர்பான சில சட்டங்கள் |
| Ulaha Asai |
| All Pages |
நோன்பு தொடர்பான சில சட்டங்கள்
''நோன்புடைய இரவுகளில் நீங்கள் உங்களுடைய மனைவிமாருடன் உடலுறவு கொள்வது ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்திருந்தாலும், உங்களை அவன் மன்னித்து விட்டான். எனவே, நீங்கள் இனி உங்கள் மனைவிமார்களுடன் கூடுங்கள். மேலும் அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பவைகளைத் தேடிக்கொள்ளுங்கள். மேலும் இரவின் இருள் நீங்கி பகலின் ஒளி தெரியும் வரை நீங்கள் உண்ணுங்கள். பருகுங்கள். எனினும், கிழக்கு வெழுத்த பின்பு இரவு வரை நோன்பை பூரணமாக்குங்கள். நிங்கள் பள்ளிவாயில்களில் இஃதிகாப் இருக்கும் போது (உங்கள் மனைவிமார்களுடன்) அவர்களுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய வரம்புகள். அதனால் அவற்றை நீங்கள் நெருங்க வேண்டாம். மனிதர்கள் தக்வாவடையவர்களாக மாறுவதற்காகத்தான் தன்னுடைய வசனங்களை அவர்களுக்க இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான். அன்றி, நீங்கள் உங்களுக்கிடைமயில் ஒருவர் மற்றவரின் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்களது சாட்சி பொய்யானது என) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் விழுங்கி விடும் நோக்கில் அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.'' (ஸூறா அல்பகறா:187-188)
இவை ஸூறா அல்பகராவின் 187ஆம், 188ஆம் வசனங்களாகும். முதல் வசனத்தில் அல்லாஹ் புனித நோன்புடன் தொடர்பான சில சட்டங்களை விளக்குகின்றான். நோன்பு கால இரவுகளில் மஃரிபுக்கும் பஜ்ருக்கும் இடைப்பட்ட நேரத்தில் உண்ணுதல், பருகுதல் உட்பட உடலுறவு கொள்ளுதல் போன்றன ஆகுமாக்கப்பட்டுள்ளமை பற்றியும் பள்ளிவாயலில் இஃதிகாப் இருக்கும் வேளையில் மனைவியுடன் கூடுவது தொடர்பான சட்டம் பற்றியும் இந்த வசனம் விளக்குகின்றன.
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு நோம்பாளி நோன்பு திறந்ததன் பின்னால் நித்திரை கொண்டு, பின்னர் இரவில் பஜ்ருக்கு முன்பு எழுந்தாலும் உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் போன்றன ஹலாலானவையாக இருக்கவில்லை. நோன்பு திறந்து இஷா தொழுகை வரையுமே ஒருவருக்கு மேலே குறிப்பிட்டவற்றைச் செய்வது ஆகுமானதாக இருந்தது. இதனால் ஆரம்ப கால முஸ்லிம்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.
ஒருமுறை ஓர் அன்ஸாரி நபித்தோழர் தனது தோட்டத்மதில் வேலை செய்து விட்டு நோன்பு திறக்கும் வேளை வந்த போது வீட்டுக்கு வந்தார். ஆனால், வீட்டில் உண்பதற்கு உணவு எதுவும் இல்லை. எனவே, உணவு தேடி வெளியே சென்றார். இடையில் தூக்க மிகுதியால் நித்திரை கொண்டு விட்டார். பின்னர் அந்த இரவிலேயே அவர் விழித்துக் கொண்டார். அவருக்கு உணவு உட்கொள்ள அனுமதி இருக்கவில்லை. அதனால் அவர் அடுத்த நாள் பகல் வேளையில் மயக்கமுற்று விழுந்தார். இவ்விடயம் நபி (ஸல்) அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இவ்வாறே இப்தாரில் தூங்கியெழுந்த ஒரு நபித்தோழர் தனது மனைவியுடன் கூட வேண்டும் என விரும்பினார். ஆனால் அது அக்காலத்தில் அனுமதிக்கப்படாமல் இருந்ததனால் அவர் சிரமத்திற்குள்ளானார். இந்நிலை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இந்த அல்குர்ஆன் வசனம் இறங்கியது.
''நோன்புடைய இரவுகளில் நீங்கள் உங்களுடைய மனைவிமாருடன் உடலுறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது.''
இது அனுமதிக்கப்பட்டதற்கான நியாயத்தை அல்லாஹ் அடுத்து விளக்குகின்றான்:
''அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.''
அதாவது, கணவனும் மனைவியும் மிக நெருக்கமான தொடர்பையும் இருக்கமான பிணைப்பையும் கொண்டவர்கள். அவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படாத போது அவர்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதனையே அல்லாஹ் இங்கு கூற விரும்புகின்றான்.
இங்கு, அல்லாஹ் கணவனும் மனைவியும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்கின்றனர் என்று கூறுவதன் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்க வேண்டிய கிட்டிய உறவை விளக்குகின்றான். ஆடை மறைகக் கூடியது. பாதுகாக்கக் கூடியது. அவ்வாறே கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடையைப் போன்று திரையாகவும் பாதுகாவலாகவும் விளங்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூற விரும்புகின்றான்.
இஸ்லாம் தீனுல் பித்ரா இயற்கை மார்க்கமாகும். அது மனிதன் தனது இயல்புகளுக்கு முரணாக செயற்பட வேண்டும் என எச்சந்தர்ப்பத்திலும் எதிர்பார்ப்பதில்லை. அவனது இயற்கையான தேவைகளுக்கு மதிப்பளித்து இடம் கொடுக்க விரும்புகின்றது இஸ்லாம்.
பல நபித்தோழர்கள் குறித்த தடை இருந்த போது தங்களது ஆசைகளை அடக்கியும் அடக்க முடியாமலும் பெரும் சங்கட நிலையில் இருந்தார்கள். இதனைப்பற்றியே வசனத்தின் அடுத்தப்பகுதி இப்படிக் கூறுகின்றது:
''உங்களை நீங்களே ஏமாற்றிக் கொன்டிருந்ததை அல்லாஹ் அறிந்திருந்தாலும் உங்களை அவன் மன்னித்து விட்டான்.''
அதாவது, உங்களில் சிலர் சிரமத்துடன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியும் மேலும் சிலர் அடக்க முடியாது தவறிழைத்தும் தங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை அல்லாஹ் அறிந்திருந்தான். ஆயினும், அவன் உங்கள் இயல்பை, பலவீனத்தை அறிந்து உங்களை மன்னித்ததுடன் உங்களுக்கு இருந்த விரக்தியை நீக்குவதற்காக தடையை நீக்கியும் தந்தான். வசனத்தின் அடுத்த பகுதி பின்வருமாறு கூறுகின்றது:
''எனவே, நீங்கள் இனி உங்கள் மனைவிமார்களுடன் கூடுங்கள்.''
ஆனால் இந்த அனுமதி வெறும் உடல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக மாத்திரம் வழங்கப்பட்டதல்ல. இவ்விடயத்தில் அல்லாஹ்வின் திருப்தி நாடப்பட வேண்டுமென தொடர்ந்து குறிப்படப்படுகின்றது.
''மேலும் அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பவைகளை தேடிக்கொள்ளுங்கள்.'' அதாவது இத்தொடர்பு மூலம் அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ள உடல் இன்பம், பிள்ளைச் செல்வம் போன்ற பயன்களை கருத்திற் கொள்ளுங்கள் என்பதே இதன் கருத்தாகும்.
றமழானுடைய இரவுகளில் உடலுறவு கொள்வது அனுமதிக்கப் பட்டுள்ளது போலவே உண்ணுதல், பருகுதல் போன்றனவும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதை தொடர்ந்து இவ்வசனம் விளக்குகின்றது:
''மேலும் இரவின் இருள் நீங்கி பகலின் ஒளி தெரியும் வரை நீங்கள் உண்ணுங்கள். பருகுங்கள். எனினும் கிழக்குவெழுத்த பின்பு இரவு வரை நோன்பை பூரணமாக்குங்கள்.''
இங்கு பஜ்ர் வரை சாப்பிடுவது அனுமதிக்கப்படுகின்றது. இது அல்லாஹ் வழங்கியுள்ள ஒரு சலுகை என்ற வகையில் இதனை எடுத்து நடப்பது வரவேற்கத்தக்கது எனக் கூறும் இமாம் இப்னு கஸீர் அவர்கள் இதனால்தான் நோன்பின் போது சஹர் செய்வது பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக கூறிப்பிட்டுள்ளார்கள் என்றும் கூறுகின்றார்.
'நீங்கள் ஸஹர் செய்வீர்களாக. சஹர் செய்வதில் பரகத் இருக்கின்றது' என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (புகாரி,முஸ்லிம்)
'ஸஹரை முடியுமான வரை இரவின் பிற்பகுதியில் வைத்துக் கொள்வதே சிறந்தது' என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
முஸ்னத் அஹ்மதில் ஒரு நபி மொழி கீழ்வருமாறு பதிவாகியுள்ளது.
'எனது உம்மத் இப்தாரை அவசரப்படுத்தி ஸஹரை பிட்படுத்தி நடந்து கொள்ளும் காலமெல்லாம் நல்ல நிலையிலேயே இருக்கும்.'
தொடர்து பள்ளி வாயலில் இஃதிகாப் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவர் தனது மனைவியுடன் சேர்வது கூடாது என்பது விளக்கப்படுகின்றது:
''நீங்கள் பள்ளிவாயில்களில் இஃதிகாப் இருக்கும் போது (உங்கள் மனைவிமார்களுடன்) அவர்களுடன் கூடாதீர்கள்.''
நோன்புடன் தொடர்பான விடயங்களைப் பற்றி விளக்கும் இந்த வசனங்களில் இஃதிகாப் சமபந்தமாக குறிப்பிடுவதற்குக் காரணம், இஃதிகாப் என்பது ஒரு பொதுவான, எல்லாக் காலங்களிலும் செய்யக் கூடிய ஒரு அமலாக இருந்தாலும் நோன்பு காலத்தில் குறிப்பாக ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருப்பது ஒரு சிறப்பான அமலாகும்.
இந்த அல்குர்ஆன் வசனத்தில் நோன்புடன் இணைந்து இஃதிகாபை குறிப்பிட்டிருப்பதன் மூலம் நோன்பு காலங்களில் சிறப்பாக இறுதிப்பத்தில் இஃதிகாபுடைய அமலைச் செய்வதற்கு தூண்டுதல் வழங்கப்படுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் ரமழானுடைய இறுதிப்பத்தில் வழமையாக தனது வபாத் வரை இஃதிகாப் இருந்து வந்தார்கள்.
நாம் இது வரை விளக்கிய வசனங்களின் இறுதிப்பகுதி கீழ்வருமாறு அமைகின்றது:
''இவை அல்லாஹ்வுடைய வரம்புகள். அதனால் அவற்றை நீங்கள் நெருங்க வேண்டாம்''
அதாவது, இதுவரை விளக்கிய நோன்புடன் இஃதிகாபுடனும் தொடர்பான சட்டங்கள் அல்லாஹ்வுடைய வரம்புகளாகும். அவற்றை நெருங்கவும் கூடாது என்பதாகும். அவற்றை மீறுவது ஒரு புறம் இருக்க அவற்றை அண்மிக்கவும் வேண்டாம் என அல்லாஹ் கூறுகின்றான். இந்தவகையில் எப்போதும் அல்லாஹ்வின் வரம்புகளுக்கும் எங்களுக்குமிடையே ஒரு பாதுகாப்பு இடைவெளி இருத்தல் வேண்டும். ஏனெனில் வேலியை நெருங்கி நின்றால் சில வேளை பலவீனமான சந்தர்ப்பங்களில் வரம்பை மீறிவிட இடமேற்படலாம். எனவே, ஹராமான விடயங்களை விட்டும் முடியுமானவரை தூர நிற்பது எல்hலவகையிலும் பாதுகாப்பானதாகும்.
மனிதர்கள் தக்வாவுடையவர்களாக மாறுவதற்காகத்தான் தன்னுடைய வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகினன்றான் என்று தொடாந்து கூறுகின்றது அல்குர்ஆன்.
இனி அடுத்த வசனத்தைக் கவனிப்போம்:
முன்னைய வசனம் உண்ணுதல், பருகுதல் போன்றவற்றை தவர்த்துக் கொள்வது பற்றி பேசியது. அடுத்த வசனத்திலும் தவிர்ந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு உணவு பற்றி விளக்கப்படுகின்றது. அதுதான் பிறரின் சொத்துக்களை உண்பதாகும். அதிகாரிகளிடம் பொய்யான ஆதாரங்களைக் காட்டி, நாவன்மையை வைத்து பிறர் உடமைகளை அபகரித்து விழுங்குவது கண்டிப்பாக தவர்க்கப்பட வேண்டியவொன்று என்பதையே இந்த வசனம் கூறுகின்றது:
''அன்றி, நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்களது சாட்சி பொய்யானது என) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் விழுங்கி விடும் நோக்கில் அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.''
ஒருவர் பிறருக்குச் சொந்தமான சொத்தை அது தனக்குரியதல்ல என்பதனை அறிந்திருந்தும் அதனை அபகரித்துக்கொள்ளும் நோக்குடன் நீதிமன்றத்தில் வழக்காடச் செல்லும் மனிதனைப் பற்றியே இந்த வசனம் பேசுகின்றது என இமாம் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒருவர் தன் பக்கத்தில் அநீதி இருக்கின்றது என்பதனை அறிந்த நிலையில் வழக்காடக்கூடாது என பல தாபிஈன்கள் குறிப்பிட்டுள்ளதை இமாம் இப்னு கஸீர் தனது தப்ஸீரில் குறிப்பிடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கீழ்வருமாறு கூறினார்கள்:
'நான் ஒரு சாதாரண மனிதனே. என்னிடம் ஒரு வழக்கு வந்து அவர்களில் ஒருவர் மற்றவரைவிட நாவன்மையும் வாதாட்டத் திறமையுமுடையவராக இருந்து, நான் அவருக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கி விட முடியும். ஆனால், நான் ஒரு முஸ்லிமின் உரிமையை வழங்கி தீர்ப்புக் கொடுத்திருப்பின் அது ஒரு நெருப்புத் துண்டாகும். அவர் விரும்பின் அதனை சுமந்து செல்லட்டும். அல்லது விட்டு விட்டுச் செல்லட்டும்.'
நீதிபதி வெளிப்படையான வாதப் - பிரதிவாதந்களையும் முன்வைக்கப்படும் சாட்சியங்களையும் வைத்தே தீர்ப்பு வழங்குவார். நீதிபதியை பிழையாக வழிநாடாத்தி தனக்குச் சார்பாக தீர்வைப் பெற்றுக் கொள்பவர் மாபெரும் குற்றத்தைச் செய்பவர் என்பதையே இவ்வசனம் சொல்கின்றது.
