நொலேஜ் பொக்ஸ் நம்பிக்கையிருக்கிறது!
Last Updated (Wednesday, 13 July 2011 20:05) Wednesday, 13 July 2011 20:01

‘‘சொல்வதைச் செய்பவன் செய்வதைச் சொல்பவன்’’ இது அரசியல்வாதிகளுக்கு கை தட்டல்களை வாங்கிக் கொடுத்த வசனம். ஆனால் அதுபோன்று எதுவும் நடப்பதில்லை என்பது வேறு கதை!
அரசியல்வாதிகளை விடுங்கள், நமது சமூகத்தில் துவக்கப்படும் அமைப்புகளும் நிறுவனங்களும் எப்படி ஆர்ப்பாட்டதுடன் ஆரம்பித்து அந்தப்புகை அடங்கும் முன் இழுத்து மூடப்படுகின்றன என்பதை யதார்த்தத்தில் நாம் கண்டே வருகிறோம்.
ஆனால், சமூகத்தளத்தில் நிலைத்து நின்று... கால்பதித்து... சாதனைகளை அறுவடை செய்யத் துவங்கிய ஒரு நிறுவனம் இப்போதுதான் அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறதென்றால்... இதுதான் ‘‘செய்வதையே சொல்வது’’ என்பதன் அர்த்தம்!
‘நொலேஜ் பொக்ஸ்’(knowledge box) ஊடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு புதிய பெயரல்ல. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு ரமழான் மாதத்தில் ‘அகமும் புறமும்’ நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தவர்களுக்கு அது புதிய பெயரல்ல. தலைநகரின் பல முக்கிய நிகழ்வுகளைப் படம்பிடித்து பதிவுசெய்து பின்னர் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு வரை சென்று தனது கால்களை ஆழப்பதித்து சாதனை படைத்த ஒரு நாமம்தான் இந்த நொலேட்ஜ் பொக்ஸ்!
இதுவெல்லாம் செய்துவிட்டுத்தான் கடந்த ஜூன் 19 ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் அறிஞர்கள் நிறைந்த ஒரு குளிருட்டிய மண்டபத்தில் தனது உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணத்தை செய்து கொண்டது நொலேஜ் பொக்ஸ்.
‘‘விழுமியத்துடன் கூடிய சமூக சிந்தனையை நோக்கிய வலைப்பின்னல்’’ இப்படி ஒரு இலட்சியமிக்க ஊடக நிறுவனமொன்று உண்மையில் அந்த இலக்கை நோக்கி செயற்பட்டால் எப்படி இருக்கும் என்று ஒருகணம் கற்பனை செய்து பாருங்கள். ஆம், நொலேஜ் பொக்சின் குறிக்கோள் இதுதான் என்பதை, அது எழுத்தில் மட்டுமன்றி நடத்தையிலும் காட்டியிருக்கிறது.
நொலேஜ் பொக்சின் அங்குரார்ப்பண வைபவத்துக்கு தலமைதாங்கியவரும் அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் உரை நிழலில் நோக்கும்போது, மேற்குறித்த குறிக்கோள்களுடன் கூடிய ஊடகத்தின் தேவை எந்தளவு முக்கியத்துவமானது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
‘‘இன்றைய நவீன உலகு எதிர்நோக்கியிருக்கும் சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் ஆணிவேரே பண்பாட்டு வீழ்ச்சிதான். கல்வி, பொருளாதாரம், அரசியல், சுற்றுச் சூழல் என எத்துறையை நோக்கினாலும் அவற்றில் புகுந்திருக்கின்ற பண்பாட்டு வீழ்ச்சிதான் அத்துறைகளினூடாகப் பெறவேண்டிய பயன்களை அடைய முடியாமல் தடுத்து வருகின்றது.
மனித விழுமியங்களோடு பின்னிப் பிணைந்திருக்கும் தொடர்பூடகங்கள் இந்தப் பண்பாட்டு எழுச்சியை கட்டியெழுப்பும் கடப்பாட்டில் உள்ளன. ஆனால், துரதிஷ்டவசமாக இன்றைய ஊடகங்கள்தான் பண்பாட்டு வீழ்ச்சிக்கு வித்திட்டுக் கொண்டிருக்கின்றன.
எனவே, இதற்கு மாற்றமான பண்பாட்டு எழுச்சியை விதைக்கும் ஊடகம் காலத்தின் தேவையாகும். இந்த தேவையை உணர்ந்துதான் மூன்று வருடங்களுக்கு முன்னர் நொலேஜ் பொக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது ...’’
அஷ்ஷெய்க் அகார் அவர்கள் சொல்லிக் கொண்டு போனார்.
உண்மையில் நடுப்பக்கத்தைத் திறந்தால் அரைவாசியைக் காட்டிக் கொண்டு போஸ் கொடுக்கும் மொடலழகிகளின் போட்டோக்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தாலே பத்திரிகை விற்பனையாகும் என்று விற்பனைத் தந்திரம் மேலோங்கியிருக்கின்ற ஒரு சூழலில்...
வாகன விளம்பரத்துக்கும் ஒரு மொடலழகி போஸ் கொடுக்க வேண்டும். அப்போதுதான் காட்சி நன்றாக இருக்கும் என்று காலத்தையோட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மலிந்த சூழலில் ...
இரவு இரண்டு மணிக்கும் ‘‘ஜொலியாக விடிய விடிய இரவுச் சூரியன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...!’’ என்று பேசும் பைத்தியங்களை நேயர்களாகக் கொண்ட வானொலி அலைவரிசைகள் நிரம்பி வழியும் ஒரு நாட்டில் ...
இந்தக் கொள்கை இலட்சியங்களோடு பயணிக்கும் ஊடகங்களைக் கொண்டு நடத்துவது குருவித் தலையில் பனங்காய்தான்!
அதனால்தான் குறித்த இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய நொலேஜ் பொக்ஸின் பணிப்பாளர் அஷ்கர்கான், ஆயிரம் மேடைகளை ஆட்டிப்படைத்த அனுபவம் இருந்தாலும் இந்த மேடையில் எனக்கு முன்பதட்டம் ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று, அறிஞர்கள் நிறைந்த அவையில் எமது நிறுவனம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வு.
அடுத்தது, விழுமியங்கள் நோக்கிய ஊடகப் பயணம் எனும் அமானிதத்தை இறைவனுக்குப் பொருத்தமாக தூய்மையாக வழிநடத்துவோமா என்ற அச்சம்...!
இதுதான் இறையச்சம் என்பது. எனது பணியைச் செய்கிறேன் என்ற ஆறுதல் ஒருபக்கம் இதனைத் தொடர்ந்து தக்கவைப்பேனா என்ற ஆதங்கம் மறுபக்கம் இவை இரண்டும் ஒற்றை வழிப்பாதையிலிருந்து விலகிப் படுகுழியில் விழுந்து விடாமல் பாதுகாக்கும் ஆயுதங்கள்! நொலேஜ் பொக்ஸ் இந்த ஆயுதங்களை தனது கமராவின் லென்சில் வைத்துப் பூட்டியிருக்க வேண்டும்.
‘‘இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஒரு வீதத்தினரை விழுங்கி ஏப்பமிட்ட சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தபோது முஸ்லிம்களுக்கேற்பட்ட இழப்பினை உலகுக்குக் காட்ட எமது கையில் ஒரு பலமான ஊடகம் இருக்கவில்லை. அன்று நொலேஜ் பொக்ஸ் இருந்திருந்தால் அடுத்த நிமிடம் சர்வதேசம் எமது அவலங்களைக் கண்டிருக்கும்.
இன்றும் ஏதாவது ஓர் அசம்பாவிதம் முஸ்லிம் சமூகத்துக்கு நடந்தால் ஒரு வாரம் கழித்தே வெளிவரும் நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம், மீள்பார்வை பத்திரிகைகள்தான் சொல்ல வேண்டும் என்ற கையறு நிலைதொடரும் சூழலில் நொலேஜ் பொக்சின் துரித வளர்ச்சி காலத்தின் தேவையாகும்’’ என இங்கு விஷேட உரை நிகழ்த்திய முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் அவர்கள் சொன்னதுபோல் நொலேஜ் பொக்ஸ் தூக்கமின்றிப் பயணிக்க வேண்டும்.
இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் இரண்டாவது அமர்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் பெரோஸ்கான் அவர்களின் சில நூல்கள் வெளியீடு செய்யப்பட்டன.
இலத்திரனியல் ஊடகத்துறையில் கால்பதித்துள்ள நொலேஜ் பொக்ஸ் அச்சு ஊடகத் துறையிலும் கால்பதிக்கும் முதல் நிகழ்வே இந்த நூல் வெளியீடாகும் என அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் கூறியமை நொலேஜ் பொக்சின் தூரநோக்கைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
துடிப்பான இளைஞர்களின் அர்ப்பண சேவை இலட்சியப் பயணத்தின் ஒரு மைல்கல்லாக விளங்கும் நொலேஜ் பொக்சின் காத்திரமான ஊடகப் பங்களிப்பு ஒழுக்க விழுமியத்தை நோக்கிய சமூகத்துக்கான சேவையே அன்றி பணம் சம்பாதிக்கும் கடை அல்ல. ஆனாலும் நாம் நிலைத்திருக்க வேண்டும் எனபதற்காக செய்யும் சேவைகளுக்கு கட்டணம் அறவிடுகிறNhம் என்கிறார்கள் நொலேஜ் பொக்ஸார்.
உண்மையில் விழுமியத்துடன் கூடிய சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தை தடுமாற்றமின்றி நொலேஜ் பொக்ஸ் தொடருமாக இருந்தால், நூற்றாண்டுகள் கடந்தும் அது பயணிக்கும். பல அலைவரிசைகளை அது பிரசுரிக்கும், பல நாளிதழ்களை அது இலங்கை மண்ணுக்குப் பரிசளிக்கும் என்று நம்பிக்கை வைப்போம்!
