ரமழான்: இரு உறவுகள் சீர்பெற பயிற்சியளிக்கும் மாதம்!
Last Updated (Friday, 10 July 2015 16:55) Friday, 10 July 2015 16:50

-அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி)-
அண்மையில் வாமி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விஷேட இப்தார் நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் துணைத் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ஆற்றிய சிறப்புரையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
படைப்பாளன் மற்றும் படைப்பினங்களுடனான உறவை சீர்செய்து கொள்கின்ற ஓர் அருள் மிகு காலம் ரமழான். ஒப்பீட்டு ரீதியில் எமது சமூகம் அல்லாஹ்வுடனான உறவை மிகவும் ஆரோக்கியமாக பேணி வருகிறது. அண்மைக் காலமாக என்றுமில்லாத அளவுக்கு எமது சமூகம் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் முதலான கடமைகளையும் உம்றா போன்ற உபரியான கிரியைகளையும் முனைப்புடன் நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தபோதிலும் ஷஷஹுகுல் இபாத்|| என்கின்ற மனிதர்களுக்கு நிறைவேற்றுகின்ற கடமைகள் விடயத்தில் எமது சமூகம் எந்தளவு தூரம் கரிசனை செலுத்தி வருகிறது என்பது கேள்விக்குறியே.
ரமழான் இந்த இரண்டு வகையான கடமைகளையும் ஒருங்கே நிறைவேற்ற வேண்டிய, அதற்கான பயிற்சியைக் கொடுக்கின்ற ஒரு பருவ காலம் ஆகும். மனிதர்களுடனான உறவைப் பொறுத்தவரை, உலகளாவிய ரீதியில் முஸ்லிம் உம்மத் எத்தகையதோர் அவல நிலைக்கு முகம் கொடுத்திருக்கிறது என்பதை நாம் எல்லோரும் அறிந்து வைத்திருக்கின்றோம். நாடுகள், சமூகங்கள், அமைப்புக்கள் என்பவற்றுக்கிடையில் மோதல்கள், முரண்பாடுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
எனவே, இது தொடர்பில் இன்றைய கல்விமான்கள், புத்திஜீவிகள், ஆலிம்கள் கரிசனை செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் அவல நிலை குறித்து நாம் சிந்திக்கின்ற, அலட்டிக் கொள்கின்ற போதிலும் நாம் வாழும் சூழலை மையப்படுத்தி அதிகம் சிந்தித்து செயலாற்ற வேண்டி இருக்கிறது. நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
யெமன், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் முதலான இன்னும் பல நாடுகளில் நடப்பவை பற்றி அறிந்து அங்குள்ள நிலைவரங்களை ஆராய்ந்து பார்த்து நமது நாட்டு முஸ்லிம் சமூகத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டிய தேவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கடப்பாடும் இருக்கிறது.
நாம் இந்த நாட்டில் எமது பாரம்பரிய முரண்பாடுகளோடு தொடர்ந்தும் வாழப் போகிறNhமா அல்லது அவற்றை ஒரு புறம் மூட்டை கட்டி வைத்து விட்டு புதிய பயணத்தை ஆரம்பிக்கப் போகின்றோமா என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய தேவை உள்ளது. முன்னொரு காலத்தில் மத்ஹப்கள், தரீக்காக்களை மையப்படுத்திய முரண்பாடுகள் காணப்பட்டன. ஆனால், அவை காலப்போக்கில் மறைந்து இப்போது ஜமாஅத்களை மையப்படுத்திய முரண்பாடுகள் தலைதூக்கியிருக்கின்றன. நிச்சயமாக இந்த முரண்பாடுகளும் வெகு விரைவில் ஒழிந்துவிடும். ஆனால், போதுமான இழப்புக்களும் நஷ்டங்களும் ஏற்பட்டிருக்கும். அதன் பிறகு நாம் சிந்தித்து கவலைப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எனவே, இது விடயத்தில் நிதானமாக சிந்தித்து செயலாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்.
பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தை புத்திஜீவித்துவ சமூகம் என்று கூறினால் அது பிழையாகாது. பல நாடுகளில் இல்லாத அளவுக்கு இந்த சமூகம் படித்த, பல்வேறு விடயங்களை சீர்தூக்கி பார்க்கின்ற ஒரு சமூகமாக இருக்கிறது. அந்த வகையில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தை ஓர் அணியில் திரட்டுவது என்பது சிரமசாத்தியமானதல்ல. இந்த நாட்டில் ஒரே ஒரு ஜம்இய்யதுல் உலமாதான் இருக்கிறது. வேறு சில நாடுகளில் பல உலமா சபைகள் இருக்கின்றன. உலமாக்கள் பிரிந்து நின்று பல்வேறு தளங்களில் பணிபுரிகின்ற நிலையை அவதானிக்க முடிகிறது.
அல்லாஹ்வின் அருளால் எமது நாட்டில் பல அபிப்பிராய பேதங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் உலமாக்கள் ஓர் அணியில் இருக்கிறார்கள். எமது சமூகமும் இந்த உலமா தலைமைத்துவத்தை அங்கீகரித்திருக்கிறது. மறுபக்கம் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சறீலங்கா, தேசிய ஷூரா சபை முதலான அமைப்புக்களும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றுக்கிடையில் ஒரு சில அபிப்பிராய பேதங்கள் இருந்த போதிலும் சமூக நலன் என்று வருகின்றபோது அனைவரும் சேர்ந்து செயற்பட தயாராக இருக்கின்றமை ஆரோக்கியமானது. அவர்களிடம் அறிவும் முதிர்ச்சியும் பக்குவமும் காணப்படுவது மிகப் பெரிய வளமாகும்.
பல நாடுகளில உடன்பட முடியாத பிரச்சினைகள் காணப்படுகின்றன. மொழி, பிரதேசம், மத்ஹப் என்று பல முரண்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவைச் சேர்ந்தவர்கள். ஷாபி மத்ஹப் அடிப்படையில் பெரும்பாலானோர் மார்க்க நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டில் பாரிய மத்ஹப் பேதம் இல்லாததனால் வெகு விரைவில் ஒரு கட்டுக் கோட்பாட்டுக்குள் இந்த சமூகத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எமக்கு ஆழமாக இருக்கிறது.
இந்த முயற்சியின் ஓர் அங்கமாக களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம பிரதேசத்தை மையப்படுத்தி ஓர் அழகிய திட்டத்தை நாங்கள் ஆரம்பித்து வைத்திருக்கிறோம். மஸ்ஜிதை மையப்படுத்தி ஓர் ஊரைக் கட்டியெழுப்புதல் என்ற திட்டமே அது.
அந்த ஊரின் வரலாற்றை ஆராய்ந்து, அங்குள்ள சமூக நிலை முதலான இன்னோரன்ன விடயங்களைக் கவனித்து மஸ்ஜிதை மையப்படுத்தி ஊரின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், பெண்கள் விவகாரம், இளைஞர் விவகாரம் உட்பட ஊரின் ஐக்கியம், சகவாழ்வு ஆகிய அனைத்தையும் கட்டியெழுப்பும் ஒரு பாரிய திட்டம் அந்த ஊரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த ஊர் மக்கள், அங்குள்ள இஸ்லாமிய அமைப்புக்கள், நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளனர். இதனையொத்த திட்டங்களை ஏனைய பிரதேசங்களுக்கும் அறிமுகப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் அண்மைக் காலமாக சிவில் சமூகம் ஒன்றுபட்டு ஓரளவு விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ளும் நிலை மலர்ந்துள்ளபோதிலும் அரசியல் கட்சிகள், அரசியல் சார்ந்த அமைப்புக்களுக்கிடையே இத்தகைய புரிந்துணர்வும் உடன்பாடும் ஏற்பட்டிருக்கிறதா? என்பது ஒரு கேள்விக்குறியாகும். அவர்கள் அரசியல் களம் சூடு பிடிக்காத காலத்தில் ஒற்றுமையாக, ஐக்கியமாக இருப்பார்கள் அல்லது ஒற்றுமையாக இருப்பது போன்று நடந்து கொள்வார்கள். ஆனால், அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டால், தேர்தல் வந்து விட்டால் பிரிந்து நின்று பகைமை பாராட்டுவார்கள். ஓர் அணியில் கை கோர்க்க மாட்டார்கள்ளூ அவ்வாறு அவர்களால் ஒற்றுமைப்படவும் முடியாத துர்ப்பாக்கிய நிலை தொடர்கிறது.
இங்குதான் சிவில் சமூகத்திற்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. அதாவது எமது அரசியல் தலைவர்களுக்கு சரியான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் குறித்து அல்லாமா யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் சொன்ன குறிப்பொன்றை நான் இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
'பிளவுபட்டிருக்கும் பெரும்பான்மை சமூகத்திற்கு முன்னால் ஒன்றுபட்டிருக்கும் சிறுபான்மை சமூகம் பலமானது.'
உண்மையில் இது மிகப் பெரிய யதார்த்தமாகும். இதனை நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பண்கூடாகப் பார்த்தோம். அந்த வகையில் சிவில், தஃவா சமூகம் மாத்திரம் ஒற்றுமையாக செய்றபட்டால் போதாது. அரசியல் சார்ந்த சமூகமும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
எனவே, நாம் பாரம்பரிய முரண்பாடுகளை மறக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். பிரச்சினை, பிளவுகளை நாம் சரியாக இனங்காண வேண்டியுள்ளது. கருத்து வேறுபாடுகளைக் கொண்டு நாம் பிளவுபடும்போது நாம் தோல்வியையே காணுவோம்.
முஸ்லிம் சமூகம் ஒற்றுமையை கைக்கொள்வதோடு ஏனைய சமூகங்களுடனான நல்லுறவை மேலும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய கடமையில் இருக்கிறது. அண்மையில் முஸ்லிமல்லாதவர்களால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முஸ்லிம்கள் ஓர் அந்நியமான, கலந்து வாழத் தெரியாத ஒரு சமூகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஓர் ஆரோக்கியமற்ற நிலை. இதிலிருந்தும் நாங்கள் விடுபட வேண்டியுள்ளது.
இவை தவிர, அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ அடிப்படையில் இலங்கைவாழ் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உண்டு. அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவைச் சார்ந்தவர்கள் பிரிந்து நின்று பகைமை பாராட்டும் காலமெல்லாம் தூய இஸ்லாமிய அகீதாவுக்கு வேட்டு வைக்கும் சக்திகளின் ஊடுருவலைத் தடுத்த நிறுத்த முடியாமற் போகும்.
எனவே, அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவைச் சார்ந்த நாம் எமது கொள்கையில் உறுதியாக இருந்து ஏனைய சவால்களுக்கு முகம் கொடுத்து சிறந்ததொரு முஸ்லிம் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்.
தொகுப்பு: எஸ். ஸஹீர் அப்பாஸ் (இர்பானி)
