இஸ்லாமிய நோக்கில், சமநிலைக் கொள்கை
Last Updated (Tuesday, 30 November 1999 00:00) Saturday, 27 June 2015 19:23

-நாகூர் ழரீஃப்-
கத்தாரில் (22-06-2015) ஆரம்பமான மேற்படி கருத்தரங்கில் வளவாளராகக் கலந்துகொண்ட அஷ்ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் குறிப்பிட்ட சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
இத்தகைய கருத்தரங்குகளின் மூலம் சமூகத்தில் சிந்தனைத் தெளிவு பிறக்கின்றது. அதன் ஊடாக எமது இலக்கை அடைந்து கொள்ள முடியும்.
நாம் ஏற்றிருக்கும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்கள் சிலவற்றை நோக்குவதன் மூலம் அதன் வாழ்வியல் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். அவை :
01- தெய்வீகமானது
02- உலகளாவியது
03- நடைமுறைச் சாத்தியமானது
04- முழுமை பெற்றது
05- நிலையான தன்மையும் மாறும் தன்மையும் கொண்டது
06- நடுநிலையானது.
மேற்சொல்லப்பட்ட தனிச்சிறப்புக்களின் அடியில் பார்க்கும் பொழுது எமக்கு மயக்கமாக தென்படும் பல விடயங்கள் மிகத் தெளிவாகப் புலப்படும்.
இஸ்லாம் இறைவனிடம் இருந்து எமக்குக் கிடைக்கப் பெற்றது. அதுபோன்று அவனிடத்தில் எம்மைக் கொண்டும் இணைக்கும் வல்லமையும் கொண்டது. இது மனித சிந்தனையில் தோன்றிய ஒன்றல்ல என்பதனால் மனித வாழ்வின் இலக்கை அது தெளிவுபடுத்தி நிற்கின்றது.
மனித சிந்தனைகள் தோற்றுவித்துள்ள கோட்பாடுகள் படு தோல்வியடைந்தமைக்கான அடிப்படைக் காரணிகள் ஒன்று அது தெய்வீகமானதாக அமையாமையே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அடிப்படையான மூல நம்பிக்கை மற்றும் வணக்க முறைகள் சார் கோட்பாடுகள் தவிர்ந்த, இஜ்திஹாதுக்கு உட்பட்ட அம்சங்களில் விரிந்து கொடுக்கும் தன்மை கொடுக்கப்பட்டமையானது நவீனகாலத்துக்கும் ஒத்துப் போகும் சன்மார்க்கம் என்ற உண்மையை பரைசாற்றுகின்றது எனலாம்.
அத்துடன் சமகால உலக நிலையை நோக்கும் பொழுது தீவிரவாதம், தாராண்மை வாதம், மதத் தீவிரவாதம், மதத்தாராண்மை வாதம், மத எதிர்ப்புத் தீவிரவாதம் போன்றவற்றிக்கிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இஸ்லாம் இவற்றிற்கிடையில் சமநிலை அல்லது நடுநிலை என்ற சிறப்பான கோட்பாட்டின் ஊடாக இரு துருவங்களுக்கு இடைப்பட்ட நிலையை உருவாக்கி தீவிரத்துக்கும் பொடுபோக்கிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையை வழங்கிநிற்கின்றமை அதன் சிறப்பியல்பாகும்.
மத்தியஸ்தம் வகித்தல், சீராக்கல், நேராக்கல் எனும் தன்மையைக் கொண்டுள்ளதால்; எக்கோட்பாடுகளினாலும் தீர்க்கமுடியாத சவால்களை இஸ்லாத்தினால் தீர்க்கமுடிகின்றது.
நடுநிலைக் கொள்கையில் நலவுகளும், பாதுகாப்புத் தன்மையும் பலமும் கிடைக்கப் பெறுவதுடன் ஒற்றுமையின் மையப்புள்ளியாகவும் அமைகின்றது.
