அரபு மத்ரஸாக்களின் கவனத்திற்கு
Last Updated (Wednesday, 06 May 2015 15:05) Wednesday, 06 May 2015 14:51

ஷரீஆக் கல்வியைக் கற்ற ஆலிம்களையும் சமூக,சன்மார்க்கப் பணியில் ஈடுபடும் தாஇகளையும் உருவாக்குகின்ற பொறுப்பு வாய்ந்த பர்ளு கிபாயாவை அரபு கலாசாலைகள் நிறைவேற்றிவருகின்றன.கல்வியின் குறிக்கோள் அறிவு,திறன்,மனப்பாங்கு,செயட்பாடு ஆகிய இலக்குகளை அடைவதாகும்.நமது மத்ரசாக்கள் குறித்த இலக்குகளை அடைவதில் ஒப்பீட்டு ரீதியில் வெற்றி கண்டுள்ளன என்றே கூறல் வேண்டும்.ஆயினும் சமகால சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும் வகையில் எமது மத்ரஸாக்களின் தரத்தையும் அடைவு மட்டத்தையும் மேம்படுத்துதல் இன்றியமையாததாகும்.இந்நிலையை உணர்ந்து பல மத்ரஸாக்கள் கடந்த காலங்களில் தமது கல்விக் கொள்கையிலும் கலைத்திட்டத்தலும் காத்திரமான மாற்றங்களைச் செய்துள்ளதை இங்கு குறிப்படாமல் இருக்க முடியாது.இந்த வகையில் பல மத்ரசாக்கள் தமது மாணவர்களைத் தகுதி படுத்தும் நோக்கத்துடன் அவர்களை க.பொ.த சாதாரண,உயர் தர பரீட்சைகளுக்கும் தயார்படுத்துவது காலத்தின் தேவையைக் கவனத்திற் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஒரு காத்திரமான முன்னெடுப்பாகும்.
மேலும் தற்போது ஆலிம்களில் கணிசமான தொகையினர் பட்டப் படிப்பை பூர்த்தி செய்பவர்களாகவும் பட்டப் பின் படிப்பை மேற்கொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.இவை பாராட்டத்தக்க முன்னெடுப்பக்களும் முன்னேற்றங்களுமாகும்.ஆயினும் பட்ட,பட்டப் பின் படிப்புகள் வெறுமனே சான்றிதழையும் தொழிலையும் பணத்தையும் இலக்காக் கொண்டு அமைந்து விடக் கூடாது.மாறாக சமகால சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து,அல்லாஹ்வின் தீனை மேலோங்கச் செய்வதற்கு குறித்த பொதுக் கல்வி துணை புரிதல் வேண்டும்.இல்லாத போது அக்கல்வி ஷரீஆ துறைக்கு சாவு மணியடிக்கும் ஒன்றாக மாறும் ஆபத்து உண்டு என்பதையும் இங்கு ஈண்டு குறிப்பிட விரும்பிகின்றேன்.அவ்வாறே எல்லா வகையான அறிவும் அல்லாஹ்வின் பாட்பட்டதாகவும் புனிதமானதாகவும் கொள்ளப்பட்டாலும் ஒப்பீட்டு ரீதியில் படைப்புகள் பற்றிய அறிவை விட படைப்பாளன் பற்றிய அறிவு மிகவும் புனிதமானது என்ற வகையில் ஷரீஆ அறிவின் புனிதத்துவத்தை அனைவரும் ஆழமாகப் புரிந்திருத்தல் வேண்டும்.
உலகில் இருவகைத்துறைகள் உண்டு.அதில் ஒருவகை தொழில் சார் துறையாகும்.மற்றையது சேவை சார் துறையாகும்.ஷரீஆத்துறை இரண்டாம் வகையைச் சார்ந்தாகும்.இது வெறும் சேவை மாத்தரமல்ல மிகப்புனிதமான சேவையாகும்,நுபூவ்வத்தினதும் ரிஸாலத்தினதும் பின் புலத்தைக் கொண்ட பணியுமாகும் என்பதையும் இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.
