ஸீறதுன் நபியின் சிறப்புப் பண்புகள்

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு பன்முகங்களைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லுக்கு ஒப்பானதாகும். ஆதனை எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் அது ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதையைப் படிக்கும் ஒருவர் மனித வாழ்வின் எல்லாத்துறைகளையும் தழுவிய வொன்றாக அவர்களின் வாழ்வு அமைந்திருப்பதைக் காண்பார். இந்த வகையிலேயே கடந்த பல நூற்றாண்டு காலமாக பல நூறு ஆய்வாளர்கள் நபியவர்களின் பன்முக ஆளுமையை பல் வேறு கோணங்களில் அணுகி ஆராய்ந்துள்ளதைப் பார்க்கின்றோம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு தனக்கே உரிய பல தனிப் பெரும் சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றது.

  1. அது ஒரு திறந்த புத்தகமாக விளங்குகின்றது. நபிகளாரின் பெற்றோர்களான அப்துல்லாஹ், ஆமினா தம்பதிகளின் திருமணம் முதல் நபியவர்களின் பிறப்பு, குழந்தைப் பருவம், இளமைக் காலம் உட்பட மேற் கொண்ட பயணங்கள் வரை அனைத்தம் மிகவும் துள்ளியமாக, ஆதாரபூர்வமாக பதியப்பட்டுள்ளன. இதனால் தான் சூரிய ஒளியில் பிறந்து வாழ்ந்த ஒரு வரலாற்றுப் புருஷர் என நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு மேற்குலக வரலாற்றாசிரியர் வர்ணிக்கின்றார்.நபியவர்களின் உணவு, உடை, நடை, பாவனை அனைத்தும் மிக நுனுக்கமாக அவதானிக்கப்பட்டு வரலாற்றேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  2. உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் வரலாறுகளில் இன்று வரை அழியாமலும் திரிக்கப்படாமலும் இடைச் செருகல்களில் சிக்காமலும் நம்பகமாகக் கிடைக்கின்ற ஒரு வரலாறு என்ற வகையிலும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு சிறப்பிடம் பெறுகின்றது.
  3. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதை இறைத்தூதைப் பெற்ற ஒரு மனிதனின் வரலாறாகவே எமக்குக் கிடைக்கின்றது. அவர்களை ஒரு தெய்வமாகவோ, தெய்வீகப் பிறவியாகவோ சித்தரிக்கும் முயற்சி அங்கே மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் ஒரு மனிதனாகப் பிறந்து ஒரு முன்மாதிரியான மனிதனாக வாழ்ந்துக் காட்டினார்கள். இதனால் தான் அன்னாரின் வாழ்வு அவர்களைப் பின்பற்றியவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் ஒரு தெயிவீகப் பிறவியாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பின் அவர்களை முழுமையாகப் பின்பற்றுவது சாத்தியமானதாக இருந்திருக்காது. இதனாலேயே அல்லாஹ்; நபியாகிய தான் ஒரு மனிதனே என்பதைப் பிரகடனம் செய்யுமாறு அவர்களை வேண்டியுள்ளான்.
    '(நபியே!), சொல்லுங்கள்: நிச்சயமாகவே நான் உங்களைப் போன்ற மனிதனே. எனக்கு வஹி அறிவிக்கப்படுகின்றது.' (18:110) ஒரு மனிதன் என்ற காரணத்தினால் நபியவர்களின் வாழ்வில் எல்லா மனிதர்களுக்கும் முழுமையான முன்மாதிரி இருப்பதையும் அல்-குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது:
    'لقد كان لكم في رسول الله أسوة حسنة ......'
    'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரில் நிச்சயமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது' (33:21)
  4. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு மனிதவாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவிய ஒருவரின் வாழ்வு என்ற வகையில் அதில் அனைத்து தரப்பினருக்கும் தேவையான வழிகாட்டல்களும் முன்மாதிரிகளும் உண்டு. ஓர் இளைஞன், கொள்கைவாதி, வழிகாட்டி, சீர்திருத்தவாதி, நாட்டின் தலைவர், கணவன், தந்தை, நண்பன் முதலான எந்நிலையில் இருப்பவருக்கும் நபியவர்களின் வாழ்விலிருந்து வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளலாம்.
  5. நபிகளாரின் சரிதை அவர்களின் நுபுவ்வத்திற்கு தெளிவான சான்றாதாரமாகவும் விளங்குகின்றது. ஸீராவைப் படிக்கும் ஒருவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத்தூதராகவே இருத்தல் வேண்டும் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டு கொள்வார்.

We have 21 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player