தனி மனிதனாக நின்று தஃவாப் பணியை மேற்கொள்கின்றபோது எதிர்பார்க்கின்ற விளைவுகளை அடைய முடியாது

பயணம் சஞ்சிகையின், அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களுடனான நேர்காணல்.


கேள்வி: பயணம் வாசகர்களுக்கு உங்களைப் பற்றியும் நீங்கள் தற்போது வகிக்கும் பொறுப்புக்கள் பற்றியும் அறிமுகப்படுத்த முடியுமா?

பதில்: நான் 1960ஆம் ஆண்டு குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள தோரயாய என்ற கிராமத்தில் பிறந்தேன். என்னுடைய தாய்வழி மூதாதையர்களுள் ஒரு சாரார் ஹைதராபாத் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இன்னொரு சாரார் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். ஆனால், தந்தையின் பூர்வீகம் இலங்கை. தாயின் மூதாதையர்கள் உருது மொழியின் மூல மொழியான தக்னி மொழி பேசுபவர்கள். என்னுடைய தாய்க் கும் அந்த மொழிப் பரிச்சயம் இருந்தது. ஆனால் கவலைக்குரிய விடயம் எனக்கு அந்த மொழி தெரியாது. உருது மொழியைக் கற்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.

தோரயாய அத்தாரிக் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து, பின் பக்மீகொல்ல அல்மினா முஸ்லிம் மகா வித்தியாலயம், தெலியாகொன்ன ஹிஸ்புல்லாஹ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தொடர்ந்து, 1976இல் ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்தேன். அங்கு 7 வருடங்கள் கற்று, ஷரீஆ கற்கை நெறியை 1ஆம் தர சித்தியுடன் பூர்த்தி செய்தேன். இதனை எனது வாழ்வில் மனநிறைவான விடயமாகக் கருதுகின்றேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தேன்.

1982ஆம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யாவில் பட்டம் பெற்று வெளியேறிய நாள் முதல் இன்று வரை ஜாமிஆ நளீமிய்யாவில் பணி புரிகிறேன். ஆரம்பத்தில் ஒரு விரிவுரையாளராகவும் பின்னர் கல்விப் பீடத்தின் பீடாதிபதியாகவும் கடமையாற்றினேன். 2001ஆம் ஆண்டு முதல் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறேன். எனது வாழ்க்கையை இந்த நிறுவனத்திற்காக அர்ப்பணித்திருக்கிறேன், அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் ஒவ்வொரு மனிதனையும் ஒரு குறித்த பணிக்காகப் படைத்துள்ளான். என்னை இந்தப் பணிக்காகவே படைத்திருக்கின்றான் என்று இதுவரை காலமும் நம்பி வருகிறேன். அந்த வகையில் கடந்த 38 வருடங்களாக நளீமிய்யா வளாகத்தில் இருக்கின்றேன்.

இலங்கையில் பொதுவான நீரோட்டத்திலிருந்து தஃவாப் பணியிலும் சமூகப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றேன். ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் மாத்திரம் என்னைத் தொடர்புபடுத்தி பலர் நோக்குகின்றபோதிலும் என்னைப் பொறுத்தவரை முடியுமானவரை பிரதான நீரோட்டத்தில் இருந்து சன்மார்க்கப் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். இஸ்லாமிய இயக்கத்துடனான மிக நெருக்கமான தொடர்பு எனக்கு எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கின்றது. ஆனால், ஏனைய தஃவா அமைப்புகளுடனும் செயற்பட்டு வருகின்றேன். அந்த வகையில் இலங்கையில் சன்மார்க்கத் தலைமைத்துவமாகக் கருதப்படும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. தற்போது ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவராக இருக்கின்றேன். ஜம்இய்யதுல் உலமாவின் மிக முக்கியமான பிரிவான ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான அமைப்பின் செயலாளராகவும் மற்றொரு மிக முக்கிய குழுவான பத்வாக் குழுவிலும் அங்கத்தவராக இருக்கின்றேன்.

அரபுக் கலாசாலைகள் ஒன்றியத்தை உருவாக்கி வழிநடத்துவதிலும் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறேன். அதன் உயர்மட்ட ஆலோசனை குழுவிலுள்ள ஐவரில் ஒருவராக நானும் உள்ளேன். இலங்கையில் முஸ்லிம்களின் நலனுக்காக உழைக்கின்ற பல அமைப்புகளின் ஆலோசகராக இருக்கின்றேன். கல்வித் திணைக்களத்தின் இஸ்லாம் பாட ஆலோசனைக் குழுவின் தலைவராக கடமையாற்றி வருகின்றேன். இவற்றோடு கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு என்னால் முடியுமான பங்களிப்பை செய்து வருகின்றேன். குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளின் இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், அறபு ஆகிய பாடங்களின் கலைத்திட்டங்களை வகுப்பதிலும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நூல்களைத் தயாரிப்பதிலும், பாடநூல்களைத் தயாரிப்பதிலும் தொடர்ந்து ஈடுபடும் வாய்ப்பு கிடைத்து வந்திருக்கின்றது. அத்தோடு ஊடகங்களுக்கூடாக இஸ்லாமிய தஃவாவை முன்னெடுப்பதில் கூடிய கரிசனை செலுத்தி வருகிறேன்.

இலங்கையில் முதலில் தமிழில் அறிமுகமான தஃவா இணையத்தளம் எனது பெயரில் உருவாக்கப்பட்டது. அது நான் உருவாக்கியது அல்ல. ஓர் ஊடக வலைப்பின்னலை உருவாக்குவதிலும் நிருவகிப்பதிலும் அங்கம் வகிக்கின்றேன். இலங்கையிலுள்ள ஏனைய ஊடகங்கள் குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தஃவாப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.

எழுத்துத் துறையிலும் கணிசமானளவு கவனம் செலுத்தியிருக்கின்றேன். இதுவரை 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றேன், அல்ஹம்துலில்லாஹ்.

கேள்வி: பிரதான நீரோட்டத்தில் இருந்தபோதும் இஸ்லாமிய இயக்கத்துடனான தொடர்பைப் பேணிவருவதாகக் கூறினீர்கள். அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...

பதில்: பொதுவாக எனது இளமைக் காலம் முதலே தஃவாவில் ஈடுபாடு காட்டி வந்திருக்கிறேன். 10 வயதிலிருந்தே தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபாடு காட்டினேன். 1970களின் பிற்பகுதியில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பான ஜம்இய்யதுத் தலபாவுடனான தொடர்பு ஏற்பட்டது. பின்னர் 1980களின் ஆரம்பத்தில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியுடன் தொடர்பு ஏற்பட்டது. இன்றுவரை அந்தத் தொடர்பு இருந்து வருகின்றது. கால்கள் ஜமாஅத்தின் மீது இருந்தாலும் கண்கள் உம்மத்தின் மீது இருக்கின்றது. எனது அடையாளத்தை இழக்காமல் இலங்கையிலுள்ள பெரும்பாலான ஜமாஅத்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். இந்தப் பார்வை எல்லா இயக்கத்தவர்களிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.
சமூகமே எமது இலட்சியம் (காயா)ளூ இயக்கம் ஒரு வழிமுறை (வஸீலா) மட்டுமே. வழிமுறை மாற்றமடையும். ஆனால் இலட்சியம் ஒருபோதும் மாறாததுளூ நிலைத்து நிற்கக் கூடியது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியுடன் தொடர்புள்ள ஒருவராக நான் கருதப்படுகின்றபோதிலும் தப்லீக் ஜமாஅத் மற்றும் இஃவானிய தொடர்புகள் உள்ளவராகவும் இருக்கிறேன். நடுநிலையான ஸலபி ஜமாஅத்களுடனும்  தொடர்பைப் பேணி வருகின்றேன். தஸவ்வுப் பற்றியும் என்னிடம் பிழையான அபிப்பிராயம் கிடையாது. அழைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அத்தனை இயக்கங்களுடனும் தூய்மையாக ஒத்துழைக்க விரும்புகின்றேன். இதுதான் நான் கற்ற இஸ்லாம்.

'தனி மனிதர்களையோ இயக்கங்களையோ குறை கூறுவதை முற்று முழுதாக தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று இமாம் ஹஸனுல் பன்னா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியிருக்கின்றார். என்னைப் பொறுத்தவரை கடும்போக்குடையோரை  மாத்திரமே நான் விமர்சிக்கின்றேன். அதுவும் பகைமை உணர்வுடனோ வெறுப்புடனோ அல்ல.

கேள்வி: தற்போதையை சூழலில் இஸ்லாத்தை, தகவலாகத் தெரிந்து வைத்திருக்கும் ஒரு பெரிய கூட்டமே இருக்கின்றது. ஆனால் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி வாழ்வில் கொண்டு வருதல், தஸ்கியா, ஆன்மீகப் பகுதி போன்றன குறைவாகவே காணப்படுகின்றன. ஆன்மீக வறுமைச் சூழலே நிலவுகின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில்: அறிவு மூன்று வகைப்படும்.

01. இல்முன் பி ஹல்கிஹி
02. இல்முன் பி அம்ரிஹி வனஹ்யிஹி
03. இல்முன் பிஹி

இல்முன் பி ஹல்கிஹி என்றால் அல்லாஹ்வின் படைப்புகள் பற்றிய அறிவு. இதில் இயற்கை விஞ்ஞானங்களும் சமூக விஞ்ஞானங்களும் அடங்கும். இன்று இது உலகக் கல்வி என அழைக்கப்படுகிறது. இப்பிரயோகத்தில் எனக்கு  உடன்பாடு இல்லை. அல்லாஹ் முதல் மனிதன் ஆதமுக்கு இந்த அறிவையே முதலில் கொடுத்தான்.

இல்முன் பி அம்ரிஹி வனஹ்யிஹி என்பது அல்லாஹ்வின் ஏவல், விலக்கல் பற்றிய அறிவு. இன்று இது மார்க்கக் கல்வி என அழைக்கப்படுகின்றது. இப்பிரயோகத்திலும் எனக்கு  உடன்பாடு இல்லை.

இவ்விரு அறிவு வகைகளையுமே நாம் பெற்று வருகிறோம். இதனூடாக தஸ்கியா கிடைப்பதில்லை. ஏனென்றால்,நாம் மூன்றாவது வகை அறிவான இல்முன் பிஹி எனும் அல்லாஹ் பற்றிய அறிவை சரியாக அடையாளம் காணத் தவறி விட்டோம். முதல் இரண்டு வகைகளையும் கற்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மூன்றாவது வகையை கற்பதன் (முதாரஸா) மூலம் பெற்றுக் கொள்ள முடியாதுளூ முயற்சியின் (முஜாஹதா) மூலமே பெற்றுக் கொள்ள முடியும்.

எந்தளவுக்கு அமல், இபாதத்களில் ஈடுபடுகின்றோமோ எந்தளவுக்கு அல்லாஹ்வுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றோமோ எந்தளவு ஸுஜூதில் கண்ணீர் வடித்து அழுகின்றோமோ, துஆவில், திக்ரில் ஈடுபடுகின்றோமோ உணர்வுபூர்வமாக அமல்களில் ஈடுபடுகின்றோமோ அந்தளவுக்கு இல்முன் பிஹீ என்ற அறிவு கிடைக்கும்.

இன்று ஷரீஆத் துறையில் ஆழமாகக் கற்ற ஆனால் பேணுதல் இல்லாத ஆலிம்களைக் காண முடிகிறது. அதேநேரம் குக்கிராமம் ஒன்றில் எவ்வித படிப்பறிவுமில்லாத பாமர மனிதரொருவர் இரவில் எழுந்து தஹஜ்ஜுத் தொழுவார்ளூ கண்ணீர் வடிப்பார்ளூ திக்கித் திக்கியேனும் குர்ஆனை ஓதுவார்ளூ ஹராம், ஹலால் பேணுவார். அமல், இபாதத்களில் கவனமாக இருப்பார். இவரிடம் அல்லாஹ்வின் படைப்புகள் பற்றிய அறிவோ ஏவல், விலக்கல்கள் பற்றிய அறிவோ இருக்காது. அல்லாஹ் பற்றிய அறிவுதான் இவ்வாறு அடிபணிய அவரைத் தூண்டியிருக்கிறது.

ஆனால், எம்மிடமுள்ள மிகப் பெரிய குறைபாடு 'இல்முன் பிஹீ' மிகப் பலவீனமாக இருக்கின்றமையே. இதை ஆலிமிடமோ புத்தகத்தின் மூலமோ கற்க முடியாது. இதைப் பெற வேண்டுமெனில் நாம் முஜாஹதா எனும் முயற்சியில் ஈடுபடல் வேண்டும்.

எமது தஃவாவில் நாம் தஸ்கியாவுக்கு எவ்வளவு தூரம் இடம் கொடுத்திருக்கின்றோம்?! இந்த சந்தர்ப்பத்தில் அறிஞர்கள் சொல்கின்ற 'தஸ்வீப் அஸ்ஸலபிய்யா வ தஸ்லீப் அஸ்ஸூபிய்யா' என்ற யதார்த்தத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது, இன்றுள்ள சூபிஸம் ஸலபிமயப்படுத்தப்பட வேண்டும்ளூ ஸலபிஸம் ஸூபிமயப்படுத்த வேண்டும். இன்று எமது சமூகத்தில் ஒருவருக்கு இஸ்லாம் ஸூபிஸமாகக் கிடைத்தால், அவரது மார்க்கத்தில் அதிக ஈரத்தன்மை இருக்கும். ஆனால், அவரது மார்க்கத்தின் நம்பகத்தன்மையில் சில கோளாறுகள் இருக்கும். அவருக்கு மார்க்கம் ஸலபிஸமாகக் கிடைத்திருந்தால் அவரது நம்பகத்தன்மை பலமாக இருந்தாலும் அதில் உணர்வுபூர்வமான பகுதி- ஈரத்தன்மை குறைவாக இருக்கும். அவர் வெறுமனே சட்டம் பேசுகின்ற ஒருவராக இருப்பார். எதிரும் புதிருமான இவ்விரு நிலைப்பாட்டையும் எப்படி ஒன்று சேர்ப்பது என்பது குறித்து சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இதனைத்தான்
அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பை அறிமுகப்படுத்தும்போது, 'எமது அமைப்பு அகீததுன் ஸலபிய்யா, ஹகீகதுன் ஸூபிய்யா' என இமாம் ஹஸனுல் பன்னா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொன்னார்கள்.

இவ்வாறு இரண்டையும் ஒன்று சேர்க்கும் இடத்திலேயே உண்மையான  தஸ்கியாவைக் காண முடியும்.

கேள்வி: தற்போதைய இலங்கை சூழலில் தஃவாவில் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் என்னவென்று கருதுகிறீர்கள்?

பதில்: இது குறித்து பலமுறை பேசியிருக்கிறேன், எழுதியிருக்கிறேன். சமூக ரீதியான பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணமாக விளங்குவது பண்பாட்டு, ஒழுக்க வீழ்ச்சியே. இளைஞர், யுவதிகள், நடுத்தர வயதினர்கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுள்ள நவீன ஊடகங்களும் விளம்பரங்களும் கீழ்த்தரமான மனித உணர்வுகளைத் தூண்டும் விதத்திலேயே அனைத்தையும் காட்சிப்படுத்துகின்றன.

ஒரு பக்கம் பண்பாட்டு வீழ்ச்சிளூ மறுபக்கம் ஒழுக்க வீழ்ச்சி. நான் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கின்றேன். இன்று மனிதர்கள் மனித விழுமியங்களை மறந்து விட்டார்கள். இதன் விளைவுதான் அரசியல் நெருக்கடி. பேராசை, ஆக்கிரமிப்பு, அதிகார வெறி, பிறர் நலனில் கரிசனை இன்மை, மேலாதிக்கம், நம்பிக்கை, நேர்மை இன்மை. இவைதான் அரசியல் பிரச்சினைக்கான காரணங்கள்.

ஊழல், வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமே இன்றைய உலக பொருளாதாரப் பிரச்சினைக்கான மூலகாரணம். ஏமாற்று, மோசடி, பொருளாதாரம் குறிப்பிட்ட சாராரின் கையில் மாத்திரம் சுழலுதல், செல்வப் பங்கீட்டிலுள்ள குளறுபடி, முதலாம் மண்டல நாடுகள் ஏனைய நாடுகளைச் சுரண்டுதல் இவை பொருளாதாரப் பிரச்சினையா பண்பாட்டுப் பிரச்சினையா?

ஓசோன் மண்டலத்தில் துளை விழுந்துள்ளமை, பூகோளம் வெப்பமடைதல், இயற்கை அனர்த்தங்கள் அதிகரிக்கின்றமை... முதலான சூழல், சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் மூலகாரணம் பண்பாடற்ற மனித நடவடிக்கைகளே. சுகாதார சீர்கேடுகளுக்குசும், நோய்களுக்கும் மூலகாரணம் மனிதனின் பண்பாட்டு வீழ்ச்சியே.

ஒழுக்க வீழ்ச்சி என்பது மனிதனின் நடத்தைக் கோளாறுகளாகும். ஆபாசம், விரசம், வன்முறை என்பவை இதிலடங்கும். திரைப்படம், நாடகம், கதை, நாவல் என எதை எடுத்தாலும் பாலியலும் வன்முறையுமே விரவிக் கிடக்கின்றன.

எனவே, உலகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவும், எமது நாட்டைப் பொறுத்தவரை குறிப்பாகவும் எமது தஃவாவின் முதன்மை இலக்காக அமைய வேண்டியது அடுத்த தலைமுறையின் பண்பாடும் ஒழுக்கமுமாகும். ஏனையோர் போன்றே எமது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். முன்னர் தீமையை, ஒழுக்கச் சீர்கேட்டை தேடிப் போக வேண்டியிருந்தது. இன்று அவை எம்மைத் துரத்தி வருகின்றன.

கையிலுள்ள தொலைபேசி, வீட்டிலுள்ள கணினி என எல்லாவற்றிலும் அவை  எம்மைத் தேடி வருகின்றன.

இன்று பல தஃவா இயக்கங்கள் களத்தில் செயற்படுகின்றன. எனினும், எமது சமூகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், 10-20 வயதிற்கு இடைப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீண் கேளிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் மூழ்கிப் போயிருக்கிறார்கள்.
எனவே, பண்பாட்டு, ஒழுக்க எழுச்சி எமது முதல் இலக்காக இருக்க வேண்டும். அடுத்த தலைமுறையை இளைஞர்களை, யுவதிகளை இலக்கு வைத்து செயற்பட வேண்டும்.

எமது தஃவாவின் முன்னுரிமைப் பட்டியலில் இரண்டாவது அம்சமாக இடம்பெற வேண்டியது ஒற்றுமை. வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன்று ஒற்றுமையின் தேவை உணரப்படுகின்றது. துரதிஷ்டவசமாக இலங்கை முஸ்லிம் சமூகம் எல்லாக் காலங்களிலும் ஏதோ ஒரு பெயரில் சச்சரவில் ஈடுபட்டு வந்திருக்கின்றது. ஒரு காலத்தில் தரீக்கா சண்டை இருந்தது. பின்னர் ஷாபி, ஹனபி என்ற மத்ஹப் சண்டை. ஆனால், இன்று அத்தகைய பிரச்சினைகள் அடங்கி தற்போது தஃவா அமைப்புகளுக்கிடையிலான சண்டை ஆரம்பித்திருக்கின்றது. அணிகளுக்குள்ளேயே பிளவுகள் அதிகரித்திருக்கின்றன.

இந்தச் சண்டைகளும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். ஆனால், அப்போது கணிசமான பாதிப்புகள் நடந்து முடிந்திருக்கும். நாம் தாமதமாக விழித்துக் கொள்வோம். எனவே, எமது தஃவாவில் சமூக ஒற்றுமை வலியுறுத்தப்பட வேண்டும்.

மூன்றாவதாக, இலங்கை ஒரு பல்லின, பல்சமய, பல்கலாசார நாடு என்ற வகையில் ஒரு யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அதுதான் சமூக நல்லிணக்கம். இனங்களுக்கிடையில் நல்லுறவு வளர்க்கப்படாத வரை எமது இருப்புக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். எமக்கு இலக்கை நோக்கி செல்வது கடினமாக அமையும். எமது இலக்கை நோக்கிய பயணத்தில் இருப்பை மறந்து விடக் கூடாது. சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஓர் ஒழுங்கு பேணப்பட வேண்டும்.

முதலாவது பரஸ்பர அறிமுகம் உருவாக வேண்டும். இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தாலும் இன்னும் பரஸ்பர அறிமுகம் எமக்கிடையே வளரவில்லை.

அறிமுகம் ஏற்பட்டால் புரிந்துணர்வு வரும். புரிந்துணர்வு ஏற்பட்டால் சகிப்புத்தன்மை வரும். சகிப்புத்தன்மை ஏற்பட்டால் உடன்படும் விடயங்களில் ஒத்துழைத்து முரண்படும் விடயங்களில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளரும்.

ஆனால், இன்று ஒரேயடியாக ஒத்துழைப்புக்கு நகர்ந்துள்ளோம். 'தன்ஸல்' கொடுத்தல், விஹாரை கட்டிக் கொடுத்தல், சிலை அமைத்துக் கொடுத்தல் என்று சமூக செயற்பாடுகள் நடந்து வருகின்றன.

பரஸ்பர அறிமுகமும் புரிந்துணர்வும் ஏற்பட்டிருந்தால் எதற்கு நாம் உதவுவோம், எதற்கு நாம் உதவி செய்ய மாட்டோம் என்பதைப் புரிந்திருப்போம். பாடசாலை, வைத்தியசாலை, வீதி என்பவற்றின் புனரமைப்புக்கோ நோயாளிகள், ஏழைகள் முதலானோரின் தேவைகளை நிவர்த்திக்கவோ இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றில் உதவிக் கரம் நீட்டவோ நாம் பயிற்றுவிக்கப்படவில்லை. தவறவிட்ட அனைத்துக்காவும் மொத்தமாக பிராயச்சித்தம் காண முயற்சிக்கின்றோம். முறையான அறிமுகமும் புரிந்துணர்வும் ஏற்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

எமது அடையாளத்தை இழந்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஒதுங்கிப் போகவும் கூடாதுளூ கரைந்து போகவும் கூடாது. தனித்துவத்தைப் பேணிய நிலையில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.

எனினும், அண்மைக் காலமாக அடையாளங்களை விட்டுக் கொடுத்தல் பற்றி சிந்திக்கிறோம்.

முதலில் நிகாபைக் கழற்றுமாறு சொல்வார்கள். பின் ஹிஜாபைக் கழற்றச் சொல்வார்கள். பின் அரபுப் பெயரை மாற்றுமாறு சொல்வார்கள். இவ்வாறு பெரும்பான்மையுடன் கலந்துபோகச் சொல்வார்கள். காலப்போக்கில் கரைந்து போகும் நிலை உருவாகலாம்.

விட்டுக் கொடுக்க வேண்டியவற்றில் விட்டுக் கொடுப்போம். விட்டுக் கொடுக்க முடியாத விடயங்களில் உறுதியாக இருப்போம். சிலபோது முஸ்லிம் பெரும்பான்மை நாடு ஒன்றில் விட்டுக் கொடுக்க முடியுமான பிரச்சினைகள் இங்கு விட்டுக் கொடுக்க முடியாதவையாக இருக்கலாம். ஏனெனில், எமது அடையாளம் மிக முக்கியமானது. கடந்த 200 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற ஆப்கானியர்களும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். தற்போது அவர்களின் சந்ததியினரில் எவருமே முஸ்லிமாக இல்லை.

நிகாப் அணிவது தொடர்பில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை. நான் நிகாப் அணியச் சொல்பவன் அல்ல. அதனை வலியுறுத்துபவனுமல்ல. ஆனால், நாமாக தவிர்ந்து கொள்வதிலும் கடும்போக்காளர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அதைக் கழற்றுவதிலும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. நிகாப் தடையென்று வந்தால் அதற்கெதிராக குரல் கொடுப்பது எமது கடமை.

முதன் முதலாக அனுராதபுரத்தில் ஸியாரம் ஒன்று உடைக்கப்பட்டபோது நான் கவலைப்பட்டேன். என்னிடம் பலர் 'உடைக்கப்பட வேண்டியது உடைக்கப்பட்டது' என்று கருத்துச் சொன்னார்கள். அப்போது நான் 'அவர்கள் அழித்தது ஸியாரத்தை அல்ல. முஸ்லிம்களின் 400 வருட பழமையான வரலாற்றுச் சின்னம் ஒன்றையே அவர்கள் அழித்திருக்கிறார்கள். இன்று ஸியாரத்தை உடைப்பார்கள். நாளை பள்ளிவாசலை உடைப்பார்கள்' என்று சொன்னேன். அன்று மௌனம் காத்தோம். விளைவுகளைத் தொடர்ந்து கண்டு வருகின்றோம்.

சிறுபான்மை சமூகத்தில் முஸ்லிம்களின் வரலாற்றைச் சொல்பவை என்ற வகையில்; ஸியாரங்கள் கூட பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படும்போதுகூட பழைய பள்ளிவாசலின் சில பகுதிகள் அப்படியே பேணப்பட வேண்டும். வீடியோ பதிவுகள் பேணப்பட வேண்டும். சில பகுதிகள் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். கண்காட்சி அறைகள் வேண்டும். மாலைதீவில் பழைய பள்ளிவாசல்களைப் பாதுகாத்து வருகின்றார்கள். ஏன் எம்மால் முடியாது?

கேள்வி: இலங்கையில் தஃவா இயக்கங்கள் வந்த பிறகு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா? இது குறித்து...

பதில்: ஆரம்ப காலத்தில் இலங்கையில் இஸ்லாத்தின் அறிமுகத்துக்கும் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் தரீக்காக்கள் ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது. ஷெய்குமார்கள், ஸூபி மகான்கள் வந்து போதனை நடத்தினார்கள். இதனால் முஸ்லிம்களை இஸ்லாம் என்ற வட்டதினுள் வைத்துக் கொண்டார்கள். 1940 இற்குப் பின்னரே இலங்கையில் இயக்கங்கள் அறிமுகமாகின. இதன் முன்னோடியாக விளங்குவது ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸுன்னா அல்முஹம்மதிய்யா அமைப்பாகும். பின் தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, ஜமாஅதுஸ் ஸலாமா, வேறு சில தௌஹீத் அமைப்புக்கள் களத்தில் தோன்றின.

இந்த எல்லா அமைப்புக்களும் இலங்கையில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பு நல்கியுள்ளன. 1970களுக்குப் பின் உலகளாவிய இஸ்லாமிய மறுமலர்ச்சியின் விளைவாக இலங்கை தஃவா அமைப்புக்களின் வீச்சு அதிகரித்தது. இதில் எந்த தஃவா அமைப்பும் தனியுரிமை கோர முடியாது. இதன் விளைவாக இஸ்லாமிய அறிவில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னர் ஷரீஆத் துறை என்பது ஒரு புறக்கணிக்கப்பட்ட துறையாகவே இருந்தது. இன்று அது உரிய இடத்தை அடையாத போதிலும் முன்பை விட அதன் அந்தஸ்து அதிகரித்துள்ளது. ஷரீஆக் கற்றலை பெருமையாக நினைக்கின்றார்கள். மத்ரஸாக்கள் ஊடாக, பல்கலைக்கழகங்கள் ஊடாக, தஃவா அமைப்புக்கள் ஊடாக அல்லது வேறு கற்கை நெறிகள் ஊடாக பலர் இஸ்லாமிய கலைகளைக் கற்கின்றனர்.  டாக்டர் ஸாகிர் நாயக் தன்னை ஒரு தாஈ என்று அழைப்பதிலே மகிழ்ச்சி அடைகின்றார். இவ்வாறு இளைஞர்கள், யுவதிகள் ஷரீஆ கல்வியை கற்கின்றனர். அதில் பெருமிதம் கொள்கின்றனர்.

1970களின் ஆரம்பத்தில் இலங்கையில் 15 மத்ரஸாக்களே இருந்தன. இன்று 250இற்கும் மேற்பட்ட மத்ரஸாக்கள் உள்ளன. 1970களில் பெண்கள் ஷரீஆ கல்வியைப் பெறுவதற்கு ஒரேயொரு கலாநிலையமே இருந்தது. இன்று 40க்கும் மேற்பட்ட பெண்களுக்கான ஷரீஆ கல்வி நிலையங்கள் இருக்கின்றன. இது தானாக வந்த மாற்றம் அல்ல. தஃவா இயக்கங்களின் உழைப்பே இவை. இஸ்லாமிய இயக்கங்கள் பாரிய அறிவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

1970க்கு முன் பள்ளிவாசல்களில் தொழுவதற்கு மனிதர்கள் குறைவாகவே இருந்தனர். பல பள்ளிவாசல்களில் தொழுவிப்பதற்கு இமாம்களில்லாத நிலை இருந்தது. அதான் சொல்ல முஅத்தின்கள் இருக்கவில்லை. ஆனால், 1970களின் பின் தொழுகையாளிகள் கணிசமானளவு அதிகரித்ததாலேயே பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்னர் ஹஜ்ஜுக்கு உம்ராவுக்கும் சில வயோதிபர்கள் மாத்திரமே சென்று வந்தனர். 1970களுக்கு முன் ஹிஜாப் அணிந்தவர்கள் எத்தனை பேர்? ஹபாயா அணிந்தது எத்தனை பேர்? பல்கலைக்கழகங்களில்கூட தலையை மூடும் முஸ்லிம் மாணவிகளை அரிதாகவே  பார்க்க முடியுமாக இருந்தது.இன்று அந்நிலை முற்றாக மாறியிருக்கின்றது. நோன்பு நோற்பதில்; பொடுபோக்காக இருந்த ஒரு காலம் இருந்தது. இன்று நோன்பு பிடிக்காதவர்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது. ஹலால், ஹராம் பேணுவதிலும் பெரும்பாலானோர் கூடிய கரிசனை செலுத்துகின்றார்கள்.

இஸ்லாமிய உணர்விலும் கணிசமானளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலஸ்தீன முஸ்லிம்களுக்காக இலங்கை மக்கள் கொதித்தெழுகிறார்கள். எகிப்து பிரச்சினை இங்கு பேசுபொருளாக மாறியுள்ளது. நாம் முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கம் என்று சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய இயக்கங்கள் சமூகத்தின் பொதுக் கல்வியிலும் எல்லா மட்டங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இளைஞர் யுவதிகள், வயோதிபர்கள், ஆண்கள், பெண்கள், பாமரர்கள், படித்தவர்கள்... என்று எல்லா வட்டத்தினரையும் இஸ்லாம் சென்றடைந்துள்ளது. முன்னர் கல்வி கற்றவர்கள் கம்யுனிஸவாதிகளாகவும் நாஸ்திகர்களாகவும் இருந்தனர். இன்று நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள் என்று எல்லா மட்டத்தினரையும் இஸ்லாம் சென்றடைந்துள்ளது. இவையெல்லாம் இஸ்லாமிய இயக்கங்களது உழைப்பின் விளைவே. இன்று இஸ்லாத்துக்கெதிரான அலைக்குக் காரணமும் இந்த மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட பீதியுமே என்று சொல்லலாம்.

கேள்வி: இன்று எந்தவொரு இஸ்லாமிய அமைப்புடனும் இணைந்த கொள்ளாத பலர் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரையும் கட்டாயமாக இஸ்லாமிய அமைப்புக்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவும் முடியாது. இவர்களைப் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன? அவர்களை தஃவாவின் பங்காளிகளாக மாற்றுவதற்கான வழி என்ன?

பதில்: தனி மனிதனாக நின்று தஃவாப் பணியை மேற்கொள்கின்றபோது எதிர்பார்க்கின்ற விளைவுகளை அடைய முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். கூட்டு முயற்சி காலத்தின் தேவைளூ சன்மார்க்கக் கடமை. ஆனால், உண்மையில் இன்று பலர் இஸ்லாமிய இயக்கத்திற்கு வெளியில் இருக்கின்றார்கள். அவர்களை எந்த வகையிலும் ஒதுக்க முடியாது. ஒதுக்கவும் கூடாது. இவர்களில் ஒரு சாரார் இஸ்லாமிய இயக்கத்துக்கு வெளியில் இருந்து கொண்டு பெரும் பணிகளை ஆற்றி வருகிறார்கள்.

இஸ்லாமிய இயக்கத்துக்கு வெளியில் இருப்போருக்கு 'நீங்கள் பார்வையார்களாக இருக்காதீர்கள். பங்காளிகளாக மாறுங்கள்' என்ற செய்தியைச் சொல்ல விரும்புகின்றேன். உங்களுக்கு எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் நீங்கள், யார் யாருடன் இணைந்து செயற்பட முடியுமோ அவ்வாறான அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்கள் ஊடாக சமூக மாற்றத்துக்கான பணியில் பங்கு கொள்ளுங்கள்.

இவ்வாறு சொல்வதன் மூலமாக இஸ்லாமிய இயக்கம் தேவையில்லை என்ற நிலைப்பாட்டுக்கு யாரும் வந்துவிடக் கூடாது. உண்மையில் தனி மனிதர்கள் செயற்படும்போது அவர்களை செயற்பட வைக்கும் தூண்டுதலை இஸ்லாமிய இயக்கங்களே வழங்கியிருக்கின்றன. தனி மனிதனாக நின்ற அழைப்புப் பணி புரிவதில் தவறில்லை. ஆனால், அத்தகையோர் இஸ்லாமிய இயக்கங்கள் அவசியமில்லை என்று வாதிக்கக் கூடாது. இது ஷரீஆக் கண்ணோட்டத்திலும், சமகால கண்ணோட்டத்திலும் பிழையானது. வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு இஸ்லாமிய இயக்கங்களின் பணி இன்று தேவைப்படுகின்றது. ஆனால் அவற்றின் அமைப்பிலும், வியூகங்களிலும், அணுகுமுறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தேவை என்பது இப்போது ஆழமாக உணரப்படுகின்றது.

 

We have 21 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player