மத நிந்தனையைக் கண்டிப்போம்! நபிகளாருக்கு நட்சாட்சி பகர்வோம்!

இஸ்லாத்தைப் பொதுவாகவும், இறைத்தூதர் முகம்மத் (ஸல்) அவர்களைக் குறிப்பாகவும் விமர்சிப்பவர்கள் வரலாறு நெடுகிலும் இருந்து  வந்துள்ளனர். இந்த வகையில் மேற்குலகை சேர்ந்த பல கீழைத்தேய வாதிகளால் எழுதப்பட்ட பல ஆக்கங்களைக் காண முடிகின்றது. இத்தகைய விமர்சனங்களுக்கு காலத்துக்குக் காலம் இஸ்லாமிய அறிஞர்களும் புத்திஜீவிகளும் அறிவுபூர்வமான மறுப்புகளை அளித்து வந்துள்ளனர். ஆயினும், அண்மைக் காலமாக விமர்சனம் என்ற நிலையைக் கடந்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தியும், இறைத்தூதரை இழிவுபடுத்தியும் மேற்குலக மட்டத்தில் பல்வேறு தரக்குறைவான முயற்சிகள் தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இத்தீய சக்திகள் தமது நடவடிக்கைகளுக்கு அச்சு ஊடகங்களையும், இலத்திரனியல் ஊடகங்களையும் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக யூடியூப், பேஸ்புக், டுயிட்டர் முதலான சமூக வலையத்தளங்கள், வெப்தளங்கள் முதலான நவீன இலத்திரனியல் ஊடகங்களை இவ்விஷமிகள் உச்ச நிலையில் பயன்படுத்தி வருகின்றனர்.

நபியவர்களை தூஷிக்கும் வகையில் அமைந்த கேலிச்சித்திரங்கள், குறுந்திரைப்படங்கள் வரிசையில் கடந்த ஜூலை 02ம் திகதி லுழர வரடிந தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட‘ Innocence of Muslims’  ( முஸ்லிம்களின் அப்பாவித் தனம்) எனும் ஒரு குறுந்திரைப்படம் கடந்த பல வாரங்களாக இஸ்லாமிய உலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படு;த்தியுள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையொன்று நபியவர்களைச் சித்தரிக்கும் சில கேவலமான கேலிச்சித்திரங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் சோமாலியப் பூர்வீகத்தைக் கொண்ட ஒரு பெண்ணும் இஸ்லாத்தைத் தரக் குறைவாக விமர்சிக்கும் ஒரு கட்டுரையை News Week  சஞ்சிகையில் எழுதியுள்ளார்.

இத்தகைய ஈனச் செயல்களுக்குப் பின்னால் இச்சக்திகளுக்கு பல தீய நோக்கங்கள் உண்டு என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அண்மைக் காலமாக இஸ்லாமிய உலகில் ஆர்த்தெழுந்துவரும் இஸ்லாமிய எழுச்சியைக் கண்டு இவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியும் அச்சமும் பகைமை உணர்வும் காழ்ப்புணர்ச்சியும் இதற்கான குறிப்பிடத்தக்க ஒரு காரணம் என்பதில் இருகருத்துகளுக்கிடமில்லை.

முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களின் தீவிர எதிர்வினைகளை உலகம் பார்ப்தற்கூடாக இஸ்லாம் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் தூண்டும் மார்க்கம்; சகிப்புத்தன்மை என்றால் என்னவென்றுகூடத் தெரியாதவர்கள் முஸ்லிம்கள்; இதனால் இவர்கள் உலக அமைதிக்கும் சமாதானத்திற்கும் என்றும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் போன்ற இச்சக்திகளால் கடந்த காலங்களில் பல்வேறு ஊடகஙகளுக்கூடாக திட்டமிட்டு வளர்த்து வந்துள்ள இஸ்லாமோபோபியா உலகின் மனப்பதிவாக தொடர்ந்தும் இருந்து வருவதை உத்தரவாதப்படுத்துவது இவர்களின் மற்றுமொரு நோக்கமெனத் தெரிகிறது.

இந்நிலையில் இத்தகைய சதித்திட்;டங்களுக்கு முன்னால் முஸ்லிம்களது எதிர்வினை எப்படி அமைதல் வேண்டும் என்பது ஆழமாக சிந்திக்கப்படல் வேண்டும். முதலாவதாக இஸ்லாத்தின் எதிரிகள் காலத்திற்குக் காலம் விரிக்கும் சதிவலைகளில் சிக்கி அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கு நாம் நம்மை அறியாமலேயே துணை போய்விடுவதையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

இரண்டாவதாக அவர்களின் தரக்குறைவான, மட்டரகமான படைப்புகளுக்கும் ஆக்கங்களுக்கும் எமது தூரநோக்கற்ற வெறும் உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட நகர்வுகளால் தேவையற்ற விளம்பரத்தைப் பெற்றுக் கொடுத்து விடாமலிருப்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

மூன்றாவதாக இத்தகைய சந்தர்ப்பங்களில் எமது எதிர்ப்பை, அதிருப்தியை , ஆட்சேபனையை காண்பிக்கும் நோக்குடன் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் போன்றவற்றில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த பண்பாடுகளைப் பேணி மிகவும் கட்டுப்பாடாகவும் நாகரிகமாகவும் நடந்து  கொள்வது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். எமது செயற்பாடுகள் எமக்கு இடர்த்தராத மக்களுக்கு இடைஞ்சலாக அமைந்து அவர்கள் எம்மைப் பற்றி அதிருப்தி கொள்வார்கள் என்றால் அது எதிரிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற நாமும் துணைநிற்பதாகி விடும் என்ற உண்மையை ஆழமாக உணர வேண்டும்.

நான்காவதாக இஸ்லாம் பற்றிய செய்தியையும் நபியவர்களின் வாழ்வையும் பணியையும் பிறமக்களுக்கு அறிமுகம் செய்வதற்கு இத்தகைய சந்தர்ப்பங்களை உச்ச நிலையில் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

ஐந்தாவதாக நபி (ஸல்) அவர்களின் வாழ்வையும் அழகிய முன்மாதிரிகளையும் விளக்கும் கையேடுகள் பல மொழிகளிலும் வெளியிடப்பட ஆவண செய்தல் வேண்டும். மேலும் நபியவர்களின் வாழ்க்கையை சிந்திக்கும் திரைப்படங்களையும், குறுந்திரைப்படங்களையும் தயாரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். (இத்துறையில் ஏலவே நடந்த முயற்சிகள், நடந்து கொண்டிருக்கு சில முயற்சிகளும் பாராட்டுக்குரியவை) மாநாடுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், தொடர்பூடகங்கள் மூலமான அறிவூட்டல்கள் போன்றனவும் எமது கவனயீர்ப்பைப் பெறவேண்டியவையாகும்.

ஆறாவதாக உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டு மட்டங்களிலும் மத நிந்தனையை தடை செய்யும் கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு ஆவண செய்யப்படல் வேண்டும். இது பற்றி இப்போது சர்வதேச மட்டத்தில் பல புத்திஜீவிகள் உரத்த குரலில் பேசிவருவது இங்கு குறிப்படத்தக்கதாகும். நமது நாட்டு புத்திஜீவிகளும், சட்டத்துறை நிபுணர்களும்; இலங்கையில் மத நிந்தனைத் தடைச் சட்ட அமுலாக்கல் தொடர்பாக தீவிர கரிசனை கொள்ளல் வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக நபி (ஸல்) அவர்கள் மீது அளவில்லா அன்பையும் பாசத்தையும் வைத்துள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அன்னாரது மாண்புக்கும் மகிமைக்கும் தனது செயலாலும் முன்மாதிரியான வாழ்க்கையினாலும் சான்று பகர்தல் வேண்டும். இவைதாம் இஸ்லாத்தின் மீது பகைமையும் காழ்ப்புணர்ச்சியும் கொண்டுள்ள இந்த பித்தர்களுக்கும் சதிகார கும்மல்களுக்கும்  நாம் கற்பிக்கும் சிறந்த பாடங்களாக அமைய முடியும் என்பது எமது ஆழமான நம்பிக்கையாகும்.

We have 45 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player