வசந்தத்தின் வருகை

ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.

'ரபீஉன்' என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்தகாலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது. அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் 'ரபிஉல் அவ்வலில்' பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும்,வெற்றியையும்,மகிழ்ச்சியையும்,மனநிறைவையும் கொண்டுவந்தார்கள்.

ஆன்மீக,லௌகீகத் துறைகளிலெல்லாம் பயங்கர வரட்சி நிலவுகின்ற ஒரு காலம் இது. மீண்டும் ஒரு வசந்தத்தின் தேவையை- வருகையை இன்றைய பூமி அவசரமாக வேண்டி நிற்கின்றது. நிச்சயமாக அந்த வசந்தத்தை சுமந்துவரும் ஆற்றல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உண்டு. ஆனால் அவர்கள் மீண்டும் வரப்போவதில்லை. மற்றுமொரு நபி வரப்போவதுமில்லை. எனினும் அன்னார் விட்டுச் சென்ற அல் குர்ஆனும் ஸுன்னாவும் பசுமையாக எங்களிடம் இருக்கின்றன. இன்றைய உலகின் வரட்சியைப் போக்கிடும் ஆற்றல் அவற்றுக்கு நிறைவாகவே  உண்டு. ஒருபுத்துலகை புதுப்பொழிவுடன் உருவாக்கும் தகுதியும் உண்டு.

ஆனால் குர்ஆனினதும் ஸுன்னாவினதும் மைந்தர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சிலபோது விழித்துக் கொண்டாலும் அடிப்படைப் பணியை மறந்துவிட்டு வீண் வாதப் பிரதிவாதங்களிலும் அர்த்தமற்ற தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றனர். நபிகளார் பிறந்த இம்மாதத்தில் அன்னார் கொண்டுவந்த தூதுக்கு உயிரூட்டுவதை, அதனை உலகறியச் செய்வதை விட்டுவிட்டு அன்னாரை வைத்து வீண் சர்ச்சைகளைக் கிளப்பி குழப்பம் விளைவிப்பவர்களும் உண்டு. இதனால் எம் சமூகத்தில் எத்தனை, எத்தனைப் பிரிவுகள்,பிளவுகள் உருவாகியுள்ளன. இத்தகைய சர்ச்சைகளால் இஸ்லாம் அடைந்த பயன்தான் என்ன? நபிகளாரின் தூதுத்துவப் பணி கண்ட பிரயோசனம் யாது? இவ்வாறு நாம் சிந்திப்பதில்லை. சிலர் எம்மை சிந்திக்கவிடுவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்தப் பிரச்சினைகளில் வாழ்க்கை நடாத்துபவர்கள்.

இனியும் இந்நிலை தொடர அனுமதிக்கலாகாது. நபிகளாரின் பெயராலேயே, அவர்களும் அவர்களின் வழிவந்த நல்லடியார்களும் கட்டியெழுப்பிய இஸ்லாமிய சமூகத்தைத் தகர்க்கும், துண்டாடும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கக்கூடாது. சிறு சிறு சன்மார்க்க பிரச்சினைகளையெல்லாம் பூதாகரமான பிரச்சினையாக சித்தரித்து சமூகத்தைக் குழப்புவது ஒரு குற்றமும், பெரும் பாவமுமாகும் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். சமூக ஒற்றுமை காலத்தின் இன்றியமையாத தேவை என்பதை கள நிலவரத்தை அறிந்த எவரும் மறுக்கப் போவதில்லை.

வேறுபட்ட சிந்தனைகளையும், அணுகுமுறைகளையும் கொண்ட அமைப்புக்களும், முகாம்களும் இருந்துவிட்டுப்போகட்டும். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் அவற்றின் போக்குகள் இருக்கும் வரை அவற்றை ஆட்சேபிப்பதற்கு இல்லை.  அவற்றின் நன்மைகளை சமூகம் பெறத்தான் வேண்டும். ஆனால் அமைப்புகளின்  பெயரால் இடம்பெறும் சண்டைகளுக்கும், மோதல்களுக்கும்; முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். உடன்படும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கும், முரண்படும் விடயங்களில் விட்டுக்கொடுப்புடனும், சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்வதற்குமான பக்குவமும் பண்பாடும் எல்லா மட்;டங்களிலும் வளர்க்கப்படல் வேண்டும். அமைப்புகளைக் கடந்த அகில இஸ்லாம் (Pயn ஐளடயஅ) பார்வை எல்லா இயக்கங்கிளனதும் நிகழ்ச்சி நிரலில் முதன்மை அம்சமாக மாறுதல் வேண்டும். இப்புதிய இஸ்லாமிய கலாசாரத்தை நோக்கி சமூகத்தை அழைத்துச் செல்லும் கடப்பாடு எல்லா இஸ்லாமிய அமைப்புகளினதும் தலைமைகளுக்கு உண்டு. குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குறித்த கலாசாரத்தை கட்டியெழுப்புவதில் மிகப்பெரும் பங்களிப்பை செய்ய முடியும்; செய்தல் வேண்டும். இத்தகைய காத்திரமான முன்னெடுப்புக்களே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதுள்ள உண்மையானதும், அர்த்தமுள்ளதுமான அன்பின் வெளி;ப்பாடாக இருக்க முடியும்.

ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

We have 76 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player