ஷெய்க் அகார் அவர்களுடனான ஒரு நேர்காணல் - மூலம் சமரசம்
Last Updated (Tuesday, 04 August 2009 19:36) Tuesday, 04 August 2009 19:27
சமரசம்: உங்கள் பின்புலம் பற்றிச் சொல்லுங்களேன்....!
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: நான் 1960 இல் இலங்கையின் வடமேல் மாகாணத்திலுள்ள குருணாகல் மாவட்டத்தில் பிறந்தவன். எனது தாய்வழி மூதாதையர்களில் ஒரு சாரார் இந்தியாவின் ஹைதரபாத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இந்திய தமிழ் நாட்டுடன் தொடர்புடையவர்கள். தந்தையின் பூர்வீகம் இலங்கைதான்.
ஆரம்பக் கல்வியை நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்திலுள்ள அரச பாடசாலையில் கற்றேன். பின்னர் உயர் கல்விக்காக 1976 இல் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய கலாநிலையமான ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்தேன். அங்கு ஏழு வருட கால இஸ்லாமிய கற்கை நெறியை பூர்த்தி செய்த அதே நேரம் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பட்டப் படிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்தேன்.
1982 இல் விரிவுரையாளராக ஜாமிஆ நளீமிய்யாவுக்குச் சென்றேன். பின்னர் ஜாமிஆவின் கல்வித் துறைத் தலைவராகவும் கடந்த பல வருடங்களாக அதன் பிரதி இயக்குனராகவும் பணிபுரிந்து வருகின்றேன்.
இலங்கையின் பிரதான நீரோட்டத்தில் நின்று சன்மார்க்க சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இஸ்லாமிய இயக்கத்துடன் மிக நெருக்கமான தொடர்பிருக்கிறது. மட்டுமன்றி பல்வேறு அமைப்புகளுக் கு ஊடாக சன்மார்க்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழு உறுப்பினராகவும் உப குழுக்களின் அங்கத்தவராகவும் செயற்பட்டு வருகிறேன். மற்றும் அறபு கலாசாலைகள் ஒன்றியத்தின் ஆலோசனைக் குழு அங்கத்தவரம் கூட. இலங்கையிலுள்ள பலவேறுபட்ட சமய, சமூக அமைப்புக்களுடனும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. பல அமைப்புக்களின் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகிறேன். பல அறபுக் கலாசாலைகளின் சிறப்பு விரிவுரையாளராகவும் பணிபுரியக் கூடிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு என்னால் முடியுமான பங்களிப்புக்களை செய்து வருகிறேன். குறிப்பாக இலங்கையின் அரச பாடசாலைகளில் இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், அரபு ஆகிய பாடங்களின் கலைத் திட்டங்களை வகுப்பதிலும் அபிவிருத்தி செய்வதிலும் பாட நூல்கள் எழுவதிலும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டி நூல்கள் தயாரிப்பதிலும் திருப்திப்படக் கூடிய பங்களிப்பைச் செய்யக் கூடிய வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.
சமரசம்: இஸ்லாமிய இயக்கத்துடனான உங்கள் ஈடுபாடு எவ்விதம் தொடங்கியது?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: எனக்கு இளமைக் காலம் தொட்டே இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபாடு அதிகம். எனது ஆரம்ப பயிற்சிக் களமாக தப்லீக் ஜமாஅத் அமைந்தது. எனினும் சில வருடங்களுக்குப் பின் அதாவது 1970 களின் பிற்பகுதியில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் இயக்கமான ஜம்இய்யதுத் தலபாவோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவ்வமைப்புக்கூடாக பல காத்திரமான பணிகளைச் செய்ய முடியுமாக இருந்தது. 1980 களின் ஆரம்பம் முதல் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியில் இணைந்தேன்.
உண்மையில் இஸ்லாமிய அழைப்புப் பணியை தனிமனிதனாக நின்று மேற்கொள்கின்ற போது எதிர்பார்க்கின்ற விளைவுகளை அடைய முடியாது என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். எனவே எனக்குக் கிடைக்கும் வசதி வாய்ப்புக்களை வைத்து தனிப்பட்ட முயற்சியிலும் மார்க்கப் பணிகளில் ஈடுபட்;டு வருகின்ற போதும் கூட்டு முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றேன். அதன் காரணமாகவே குறிப்பிட்ட ஒரு இஸ்லாமிய இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்.
கூட்டாகச் சேர்ந்து அழைப்புப் பணியில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகவும் சன்மார்க்கக் கடமையாகவும் உள்ளது. ஒரு தனிமனிதனின் ஆன்மீக மேம்பாட்டிற்கும் இயக்க ஈடுபாடு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே எனது ஆன்மீக விமோசனத்திற்காகவும் இஸ்லாமிய இயக்க ஈடுபாடு அவசியம் என்பதே எனது நிலைப்பாடு.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியில் ஷுரா உறுப்பினராக இருக்கும் எனக்கு தப்லீக் ஜமாஅத்துடனும் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. அவ்வாறே ஸலபி அமைப்புடனும் நடுநிலையான சிந்தனைப் போக்கைக் கொண்ட மற்றும் பல இஸ்லாமிய அணிகளுடனும் தொடர்புகள் உண்டு.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, அரபுக் கலைசாலைகளின் ஒன்றியம், அரபுக் கலாசாலைகள் முதலான பொது அமைப்புகள், நிறுவனங்களினூடாக இத்தகைய உறவுகளை வளர்த்து வருகிறேன். அண்மைக்காலமாக மாற்று மதத்தவர்கள் மத்தியில் அழைப்புப் பணியை மேற்கொண்டு வரும் நிதா அமைப்புடனும் சேர்ந்து ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறேன். இவ்வமைப்பிலுள்ளவர்களில் பெரும்பாலானோர் தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே, இத்தகைய வழிமுறைகளின் மூலமே இஸ்லாமிய இயக்கத்தின் இறுதி இலக்கான ஜமாஅத்துல் முஸ்லிமீன் பேரியக்கத்தை தோற்றுவிப்பது சாத்தியப்பட முடியும் என நான் ஆழமாக நம்புகிறேன்.
சமரசம்: உங்களின் உரை வீச்சுக்களை மெருகூட்டுவது உங்களின் உடல் மொழி (Body Language) என்று கருதுகின்றேன். உங்கள் உடல் மொழி இயல்பாய் வாயக்கப் பெற்றதா?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: இது எனது பிறப்பு சுபாவம். இதற்காக நான் என்றும் எந்தப் பயிற்சியும் பெற்றுக் கொண்டதில்லை. வலிந்து அபிநயத்தில் ஈடுபட்டதும் கிடையாது. பேசும் போது இந்தக் கட்டத்தில் இவ்வாறு எனது உடல் மொழியை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒருபோதும் சிந்திப்பதில்லை. நிங்கள் கூறுவது போல் எனது உடல் மொழி உரைகளுக்கு மெருகூட்டுகின்றது என பெரும்பாலானவர்கள் கருதுகின்ற போதிலும் எனது அபிநயத்தை விமர்சிக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
சமரசம்: உளத் தூய்மையை மையப்படுத்தியே பல உரைகளை அமைத்துள்ளீர்கள். உளத்தூய்மை பற்றி அவ்வளவாய் பேசப்படாத சூழலில் அதிக அழுத்தம் தருவதற்கான தனிக் காரணிகள் ஏதாவது உண்டா?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: அவ்வாறல்ல. கடந்த மூன்று தசாப்த காலமாக உரைகள் மூலம் அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். முழு மார்க்கத்தின் பரப்பையும் தழுவிய வகையிலேயே எனது உரைகளும் எழுத்துக்களும் அமைந்திருப்பதை பலரும் அறிந்திருப்பார்கள். அகீதா, இபாதா, முஆமலாத், ஷரீஆ, தஃவா, தர்;பிய்யா, இஸ்லாமிய இயக்கம் மற்றும் சமகால முஸ்லிம் உலகு உட்பட சகல தலைப்புக்களிலும் அல்லாஹ்வின் அருளினால் பல்வேறுபட்ட உரைகளை நிகழ்;த்தியிருக்கிறேன். எனினும் அண்மைக் காலமாக உளத்தூய்மை பற்றி சற்று அதிகமாகவே பேசி வருவதை மறுக்கவில்லை. அதற்கு பல நியாயங்களும் இருக்கின்றன.
இன்றைய உலகின் பிரதான பிரச்சினை ஆன்மீக வறுமை, சடவாத (Meterialism) உலோகாயதவாத (Secularism) சிந்தனைகளின் செல்வாக்கின் காரணமாக ஆன்மீகப் பகுதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சில மதங்கள் கூட உலோகாயதமயப்படுத்தப்பட்டுள்ளன, சடவாதமயப்படுத்தப்பட்;டிருக்கின்றன. இன்று உடலியற் தேவைக்கு தரப்படுகின்ற முக்கியத்துவம் உள்ளத்திற்கு தரப்படுவதில்லை. ஒழுக்கப்பண்பாடுகள் அரிதாகவே காணப்படுகின்றன. சமூகத்தில் தீமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
எனவே, மனிதனின் பிரதான கருவாக விளங்குவது மனித ஆத்மா, அது சீர்பெறாத வரை எந்த விடயமும் சீர்பெறப் போவதில்லை என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. உடலை வீட்டுக்கு உவமித்தால் உள்ளத்தை அவ்வீட்டில் வாழும் மனிதனுக்கு உவமிக்கலாம். வீடு எவ்வளவு அழகாக இருந்தாலும் வீட்டில் வாழும் மனிதன் நோயாளியாக இருந்தால் அவ்வீட்டுக்கு எவ்வித பெறுமதியும் கிடையாது.
'நிச்சயமாக அல்லாஹ் உங்களது உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. அவன் உங்களது உள்ளங்களையும் செயற்பாடுகளையுமே பார்க்கிறான'; என்பது நபிகளாரின் வாக்கு. நபியவர்களும் இத்தகைய உளத் தூய்மையை ஏற்படுத்தும் நோக்கோடுதான் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்கள் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தஸ்கியதுன் நப்ஸ் நபி (ஸல்) அவர்களின் பிரதான பணியாக இருந்தது.
எனவே இன்றைய உலகில் காணப்படுகின்ற மிகப் பிரதானமான பிரச்சினையாக ஆன்மீக வறுமையை அடையாளப்படுத்தலாம். இப்பிரச்சினையைத் தீர்ப்பதே தஃவாவில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய பணி என்றால் மிகையில்லை. இதன் காரணமாகத்தான் அண்மைக் காலமாக உளத்தூய்மைக்கு சற்று அழுத்தம் தந்து எனது உரைகளை அமைத்து வருகிறேன்.
சமரசம்: பல்வேறு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளீர்;கள். அவ்வாறிருந்தும் அருகில் இருக்கும் இந்தியாவுக்கு வந்ததில்லையே..! அதன் பின்னணியில் ஏதேனம் சிக்கல் இருக்கின்றதா?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: நான் ஒரு முறை இந்தியா, தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளேன். என்னோடு நெருக்கமான ஒரு சகோதரரது மகனின் திருமண வைபவத்துக்காக அவரின் அழைப்புக்கிணங்க தமிழ் நாடு வந்தேன். அப்போது நாகூரில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றினேன். அங்கு இறை சிந்தனை எனும் தலைப்பில் உரையாற்றியது இன்னும் ஞாபகமிருக்கிறது.
இந்தியாவுக்கு ஏன் வருவதில்லை என்று கேள்வி எழுப்புகின்றபோது மறுபக்கமாக ஏன் என்னை அழைக்கவில்லை என்ற கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இதுவரை நீங்கள் என்னை அழைத்திருக்கின்றீர்களா? எத்தனை முறை அழைத்திருக்கின்றீர்கள், நீங்கள் அழைத்து நான் மறுத்திருக்கின்றேனா? என்று தாழ்மையாகக் கேட்க விரும்புகின்றேன்.
எனினும் அண்மைக் காலமாக வேறு பல தரப்பினரிடமிருந்து அழைப்புக்கள் வந்த வண்ணமிருக்கின்றன. தமிழ் நாட்டைச் சேர்;ந்த பல முஸ்லிம் அமைப்புக்கள், சங்கங்கள் தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருவதை மறுக்கவில்லை.
வாஸ்த்தவத்தில் இந்திய மண் தஃவாவுக்கு நல்லதொரு களம். இலங்கையராகிய எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு தஃவாவுக்கான மிகச் சிறந்த களம் என நினைக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் இலங்கை முஸ்லிம்களும் தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்களும் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களாக இருப்பதே. பண்பாடு மற்றும் கலாசார ரீதியாகவும் கூட இரு சமூகங்களுக்கிடையில் நிறைய தொர்புகளும் ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. மாத்திரமல்ல, தமிழ் பேசும் உலகில் ஒன்பது கோடி மக்கள் வாழ்கின்றார்கள். எனவே, தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்குமிடையிலான உறவு வலுப் பெறுவதுதன் மூலமாக ஒன்பது கோடி மக்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை ஊக்கத்தோடு சொல்லக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.
எனவே எதிர்காலத்தில் இந்திய தமிழ் நாட்டுடனான எமது உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு நீங்களும் ஆவன செய்ய வேண்டும். நாமும் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.
சமரசம்: ஊடகங்களின் அபார வளர்;ச்சிக்கு மக்கள் சிந்தனையையும் பண்பாட்டையும் சீர்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேரெதிரான வினையை ஏற்படுத்தியுள்ளது ஏன்?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: வாஸ்தவத்தில் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மிகவும் நேர்மறையாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பாராட்டத்தக்க ஒரு வளர்ச்சி. தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்கள் குறுகிய காலத்திற்குள் அபார மாற்றத்தை கண்டிருக்கின்றன. அதன் விளைவாக உலகமே பூகோள கிராமமாக மாறியிருக்கின்றது. பூகோள குடும்பமாக மாறியிருக்கிறது என்று கூடச் சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு ஊடகங்கள் இவ்வுலகத்தை சுருக்கிவிட்டிருக்கின்றது. ஊடகங்கள் மூலம் காத்திரமான பல பணிகளும் இடம் பெறுவதை மறுக்க முடியாது.
ஆனால் மொத்தமாக பார்க்கின்றபோது நீங்கள் குறிப்பிடுவது போல ஊடகங்களால் விளைகின்ற நன்மைகளைவிட தீமைகளே அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம் சர்வதேச ஊடகங்கள் யூதர்ககளின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதுவே. யூதர்கள் முழு மனித சமூகத்தையும் கருவறுப்பதையே இலக்காகக் கொண்;டவர்கள். அவர்கள் இவ்வூடகங்களின் மூலம் சகல விதமான நாசகார வேலைகளைச் செய்து வருகின்றார்கள். முழு மனித சமூகத்தின் ஒழுக்கப் பண்பாடுகளுக்கு ஆப்பு வைக்கிறார்கள். சீரிய சிந்தனையை மாசுபடுத்தி வருகிறார்கள்.
இப்படி ஊடகங்ள் மீதான யூதர்களின் ஆக்கிரமிப்பு ஒருபுறமிருக்க ஊடகங்களின் தாரக மந்திரமாக சடவாதமும் உலோகாயதவாதமுமே விளங்குகின்றன. இவ்விரு சிந்தனைகளும் வெல்வாக்குச் செலுத்தும் எந்த ஓர் இடத்திலும் நல்ல விளைவுகளைக் கவனிக்க முடியாது. மற்றும் ஊடகங்களில் மதம் மற்றும் ஆன்மீகத்தின் செல்வாக்கு மிகவும் குறைவு. இதன் விளைவாகவே இத்தகைய நேரெதிரான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையை மாற்ற மாற்று ஊடகங்களின் தேவை பரவலாக உணரப்படுகின்றது. அல்லாஹ்வின் அருளினால் தற்போது தார்மீக ஒழுக்க விழுமியங்களை மதித்து செயற்படக் கூடிய ஊடகங்கள் (Value Based) உலகளாவிய ரீதியில் படிப்படியாக உருவாகி வருவதை கவனிக்கின்றோம். குறிப்பாக இஸ்லாமிய மாற்று ஊடகங்கள் அண்மைக் காலமாக மிக வேகமாக உருவாகி உருகின்றமை நல்லதோர் எதிர்காலத்திற்கான சமிக்ஞை என்று கூறலாம்.
சமரசம்: வாசிப்புகளின் ஊடாக உங்களின் அனுபவங்கள் பற்றி...
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது என்பது வாஸ்தவம். அவ்வாறே ஒரு தாஇயை ஒரு சிறந்த தாஇயாக மாற்றுவதற்கு தொடர்ந்தேர்ச்சையான வாசிப்பு இன்றியமையாதது.ஓர் இஸ்லாமிய அழைப்பாளனுக்கு குறைந்த பட்சம் ஏழு வகையான அறிவு ஞானங்கள் அவசியப்படுவதாக அல்லாமா யூஸூப் அல்கர்ழாவி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இஸ்லாமிய அறிவு, மொழி அறிவு, வரலாற்று அறிவு, மானிடவியல் அறிவு, அறிவியல் கலைகள் பற்றிய ஞானம், நடைமுறை விவகாரங்கள் பற்றிய அறிவு என்பனவையே அவை.
எனவே, ஓர் அழைப்பாளன் இவ் ஆறு வகையான அறிவு ஞானங்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கோடு துறை சார்ந்த வாசிப்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும். இல்லாதபோது அவரால் சிறந்த தாக்கம் மிக்க தாஇயாக இருப்பது சாத்தியமானதாக இருக்காது. ஏனெனில் வாசிப்பில்லாத இடத்தில் அறிவு இருக்காது. அறிவில்லாத போது தெளிவிருக்காது. தெளிவில்லாத நிலையில் முன்னெடுக்கப்படும் தஃவா முயற்சிகள் காத்திரமான விளைவைத் தராது.
இன்று இஸ்லாமிய உலகம் மாத்திரமல்ல, இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள் எதர்கொள்கின்ற மிக முக்கியமான பிரச்சினை சிந்தனைச் சிக்கல் (Crisis of thought). இந்த சிந்தனைச் சிக்கலைத் தீர்த்துக் கொள்வதற்கான திறவுகோள் வாசிப்பு. வாசிப்பின் மூலம்தான் சரியான இஸ்லாமிய சிந்தனையைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்விடத்தில் வாசிப்பின் மூலம் நான் பெற்ற ஓர் அனுபவத்தை குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.
கண்டது கற்க பண்டிதன் ஆவான் என்ற கருத்தோடு நான் உடன்படவில்லை. கண்டதையெல்லாம் கற்கவோ, வாசிக்கவோ கூடாது. முறையான கற்றல், முறையான வாசிப்பு அவசியமானது. இன்று பல்வேறுபட்ட வழி கெடுக்கக் கூடிய வாசிப்புக்கள் காணப்படுகின்றன. எனவே, அறிஞர்களையும் ஆக்கங்களையும் தெரிவு செய்கின்றபோது மிக அவதானமாக இருக்க வேண்டும்.
இந்த வகையில் அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பைச் சேர்ந்த அறிஞர்களுடைய நூல்கள், ஜமாஅதே இஸ்லாமி சார்ந்த அறிஞர்களுடைய நூல்கள் வாசிப்பதற்கு சிறப்பாக சிபாரிசு செய்யத்தக்கவை. இவ்விரு அமைப்புகளுக்கு வெளியேயும் சிறந்த பல அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இன்று பல இளைஞர்கள் இஸ்லாத்தின் பேரிலேயே பிழையான சிந்தனைகளின் பால் வழிநடாத்தப் படுவதற்கும் பிழையான நிலைப்பாடுகளுக்கு வருவதற்கும் அவர்களுடைய வாசிப்பில் கோளாறு இருப்பது மிக முக்கியமான காரணம். எனவே, ஆரம்பம் முதலே சரியான வாசிப்பின் பால் இளைஞர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.
சமரசம்: இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் குழுமோதல் மனப்பாங்கை உருவாக்கியுள்ளதை கவனிக்கின்றீர்களா?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: இது ஒரு கசப்பான யதார்த்தம். கவலைக்குரிய நிலை. இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு இது ஒரு சாபக்கேடு என்று சொன்னால் அது பிழையாகாது. உண்மையில் இஸ்லாத்தின் எழுச்சிக்காக உழைக்கின்ற பல அமைப்புக்கள் இருப்பது தவிர்க்க முடியாதது மாத்திரமல்ல யதார்த்தமானதும் கூட. பன்மையில் ஒருமை காண்பதற்கும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கும் முரண்பாட்டில் உடன்பாடு காண்பதற்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால் நடைமுறையில் இந்த மனப்பாங்குடையவர்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். முஸ்லிம் அல்லாதாருடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் எனச் சொல்கின்ற இஸ்லாமிய அமைப்புக்கள் தமக்கு மத்தியிலேயே முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு காண மறந்து விடுகின்றன.
இஸ்லாம் கருத்து வேறுபாட்டை அங்கீகரிக்கின்றது. ஆனால் கருத்து வேறுபாடு பிளவுக்கும் அழிவுக்கும் இட்டுச் செல்லக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் பல்வேறு அடிப்படையில்லாத விளிம்புநிலைப் பிரச்சினைகளில் எழக்கூடிய கருத்து வேறுபாடுகளின் மூலம் இஸ்லாமிய அமைப்புக்கள் தமக்கு மத்தியில் பரஸ்பரம் முரண்பட்டுக் கொண்டிருக்கின்றமை கண்டிக்கத்தக்கது மாத்திரமல்ல, இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நிராகரிக்கத்தக்கதும் கூட.
எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் இஸ்லாத்துக்காக அழைக்கின்ற அதேநேரம் இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையில் கருத்து ஒற்றுமை ஏற்படுவதற்காகவும் உழைக்க வேண்டும். தமது முன்னுரிமைப் பட்டியலில் இதற்கு தனியானதொரு இடம் தர வேண்டும். மற்றும் இக்கால சூழ்நிலையில் இஸ்லாமிய அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது எதிரிக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.
இஸ்லாமிய வரலாற்றிலே முஸ்லிம்கள் எப்போதெல்லாம் தமக்கு மத்தியில் பிளவுபட்டார்களோ அப்போதுதான் அவர்கள் பலவீனமடைந்தார்கள், தோல்வியடைந்தார்கள். இதனை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது.
"நீங்கள் உங்களுக்கு மத்தியில் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறு நீங்கள் சர்ச்சைப் பட்டுக் கொண்டால் உங்களது பலம் குன்றி நீங்கள் தோல்வி காண்பீர்கள்."
இஸ்லாமிய உலகின் இன்றைய அவல நிலைக்கான காரணங்களுள் முதன்மையானது முஸ்லிம்கள் மத்தியில், இஸ்லாமிய அமைப்புக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மோதல்களும் சர்ச்சரவுகளுமாகும்.
எனவே, இஸ்லாமிய அமைப்புக்களுக்கிடையில் ஒரு நல்லுறவுப் பாலமாக அமைந்து முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமையுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் செயற்படுவதற்கு இலங்கையில் பல்வேறுபட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் விளைவுகளும் திருப்திகரமாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
சமரசம்: ஆபாசம், வன்முறை, இனமோதல், பொருளாதாரச் சுரண்டல், மாசுபடும் சுற்றுச் சூழல், அவல அரசியல் என்ற பல்வேறு நிராசையான சூழல்களுக்கிடையில் உற்சாகம் ஊட்டும் நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் எங்கேனும் தென்படுகின்றதா?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: பொதுவாக பண்பாட்டு சீரழிவுகளுக்கு மத்தியிலும் ஆன்மீக ரீதியிலான எழுச்சிக் காற்று வீசத் தொடங்கியிருப்பதை மறுக்க முடியாது. மதங்கள் மத்தியில் கூட ஒரு புத்துணர்வு ஏற்பட்டிருக்கின்றது. கலாசார பண்பாட்டுச் சீரழிவுகளைக் கண்டு சகிக்க முடியாத மதங்கள் இதற்கான மாற்றீடு நோக்கி நாரத் துவங்கியிருக்கின்றன. அந்த வகையிலேயே ஷமதங்களுக்கிடையிலான கலந்துரையாடல் (Inter Faith Dialog) எனும் பெயரில் உலகளாவிய ரீதியில் பல்வேறுபட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், மதங்களுக்கிடையிலான கலந்துரையாடல் எனும் பெயரில் ஷஎம்மதமும் சம்மதம்| என்ற கருத்து மேலோங்கி வருவதைக் கவணிக்கிறோம். இது விடயத்தில் முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் சகல மதங்களும் ஒன்றிணைந்து மனித விழுமியங்களை பொது விழுமியங்களை முன்னெடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.
கடந்த பல தசாப்த காலமாக சீர்கெட்ட கலாசாரத்தைப் பின்பற்றியதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை அனுபவித்த மனித சமூகம் தனது விமோசனத்துக்காக ஆன்மீகத் துறையை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆபாசம் மற்றும் வன்முறைக் கலாசாரத்துக்குப் பின்னால் சொன்ற முஸ்லிம் சமூகம் மிக வேகமாக விழிப்படைந்து வருவதையும் சகலரும் தூய இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக முடுக்கிவிடப் பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே இன்றைய உலக நிலையைப் பார்த்து நிராசையடைய வேண்டிய தேவையில்லை. எழுச்சிக்கான, சமூக மறுமலர்ச்சிக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. கிட்டிய எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்பது முற்றிலும் உண்மை. அல்குர்ஆன் சுன்னாவின் ஒளியில் பார்த்தாலும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் நோக்கினாலும் நடைமுறை நிகழ்வுகளை வைத்து கவனித்தாலும் இவ்வுண்மையை விளங்கிக் கொள்ளலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலாளித்துவத்தின் நூற்றாண்டாக இருந்தது. 20 ம் நூற்றாண்டு கம்யூனிசத்தின் நூற்றாண்டாக விளங்கியது. 21ம் நூற்றாண்டு இஸ்லாத்தின் நூற்றாண்டாகவே இருக்கும். அவ்வாறே 19ம் நூற்றாண்டு கிறிஸ்தவத்தின் நூற்றாண்டு. 20ம் நூற்றாண்டு யூத மதத்தின் நூற்றாண்டு. 21 ம் நூற்றாண்டு இஸ்லாத்தின் நூற்றாண்டாகவே இருக்கும் என்று குறிப்பிடலாம்.
சமரசம்: முது பெரும் பேரியக்கமான ஜமாஅத்தே இஸ்லாமி பிற இஸ்லாமிய இயக்கங்களிலிருந்து எவ்வகையில் தனித்துவம் பெறுகின்றது?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: ஜமாஅதே இஸ்லாமி தனக்கேயுரிய தனித்துவப் பண்புகளைப் பெற்ற பேரியக்கம். 20 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உலகம் கண்ட இன்றுவரை கண்டு கொண்டிருக்கின்ற இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இரு பேரியக்கங்கள் ஜமாஅத்தே இஸ்லாமியும் அல்இஃவானுல் முஸ்லிமூனும்தான். அந்த வகையில் ஜமாஅத்தே இஸ்லாமி இன்றைய இஸ்லாமிய எழுச்சிக்கு முன்னோடியாக அமைந்த இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம்.
மறுபக்கம், ஜமாஅத்துத் தப்லீக், ஸலபி அமைப்புக்களும் இன்றைய இஸ்லாமிய எழுச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. ஜமாஅத்தே இஸ்லாமியின் தனித்துவப் பண்புகள் நிறையவே உள்ளன.
ஜமாஅத்தே இஸ்லாமி இஸ்லாத்தை ஒரு சம்;பூரண வாழ்க்கைத் திட்டமாக கருதுகிறது. அடுத்ததாக இஸ்லாத்தை, இஸ்லாமிய இயக்கத்தை குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தோடு வரையறுக்காமல் உலகளாவிய அமைப்பாக அதனை நோக்குகிறது. மற்றும் நடுநிலையான சிந்தனை, இஸ்லாத்தை ஒரு மதமாக அன்றி இன்றைய உலகுக்குத் தேவையான மாற்று நாகரிமாக அதனை நோக்குவது, தனிமனிதன், குடும்பம், சமூகம், உலகளாவிய சமூகம் என்ற விரிந்த பார்வையைக் கொண்டிருத்தல், கிலாபத்தை நோக்கிய நகர்வு, இயக்க வாதத்திலிருந்து விடுபட்டு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒற்றுமை காண வேண்டும் என்ற பரந்த கண்ணோட்டம், சமூக மாற்றத்தை நோக்கி நகர்கின்றமை, முழு வாழ்வையும் இஸ்லாமியமயப்படுத்த வேண்டும் என்ற பார்வை என்பன ஜமாஅத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும்.
சமரசம்: அமெரிக்காவின் புதிய அதிபர் குறித்தும் அவருடைய முஸ்லிம் பின்னணி குறித்தும் தங்களின் மதிப்பீடு என்ன, அவரிடம் இஸ்லாமிய உலகு எதிர்பார்ப்பது என்ன?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: வெள்ளை மாளிகைக்கு ஒரு கறுப்பு எஜமான் கிடைத்தமை 21 ம் நூற்றாண்டின் ஒரு சாதனை எனச் சொல்லலாம். புதிய உலகுக்கான நல்லதோர் அறிகுறி என்றாலும் மிகையில்லை. அதிலும் அவர் ஆபிரிக்க- அமெரிக்கராக இருப்பது அவரது தந்தை முஸ்லிமாக இருப்பது, இவரது தாயின் இரண்டாவது கணவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் என்பதால் தென்கிழக்காசியாவுடனும் இவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றமை, படிக்கும் காலத்தில்; இந்திய, பாகிஸ்தான் நண்பர்களைப் பெற்றவராக இருக்கின்றமை, மலாய் மொழியில் பரிச்சயம் இருப்பது எல்லாவற்றுக்கும் மேலாக இவர் ஓர் இளைஞராகவிருப்பது நம்பிக்கை தருகிறது.
அமெரிக்காவின் முன்னைய அதிபர்களைவிட இவர் மீது நம்பிக்கை வைக்கலாம். அதிபர் புஷ்ஷூடன் ஒப்பிடும்போது இவர் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வார் என இஸ்லாமிய உலகமும் எதிர்பார்க்கின்றது. ஆனால் ஒன்றை நாம் மறந்து விடக் கூடாது. எப்படியோ அதிபர் ஒபாமா ஓர் அமெரிக்கர்தான். அமெரிக்க கண்கொண்டுதான் முழு உலகையும் கவனிப்பார். அமெரிக்க செவிகளால்தான் கேட்பார். அமெரிக்க சிந்தனையுடன்தான் பேசுவார்; செயற்படுவார் என்பதை முஸ்லிம் உலகம் மனதிற் கொள்ள வேண்டும். மாத்திரமல்ல, ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தாலும் அவர் ஒரு தனிமனிதன். அவருக்குப் பின்னால் ஒரு நிர்வாக இயந்திரம் இருக்கிறது, இரும்புக் கரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் மிகைத்து அவர் கருமமாற்றுவது என்பது சரமசாத்தியமானது. என்றாலும் இவரின் அணுகுமுறைகள் குறைந்தபட்சம் மனிதாபிமானத்தோடு கூடியதாகவும் இறுக்கமற்றதாகவும் இருக்கும் என்று அவரது பின்னணியின் மூலம் நம்பக்கூடியதாக இருக்கிறது.
இனி, அவர் என்ன செய்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமரசம்: இணையதளத்தினூடாக தங்களின் பங்களிப்பு எந்தளவு மக்களை சென்றடைந்துள்ளது?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: இணைத்தளம் முதலான இலத்திரனியல் ஊடகங்களுக்கூடான அழைப்புப் பணியை காலத்தின் ஜிஹாத் என்று குறிப்பிடலாம். இந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு sheikhagar.org எனும் பெயரில் எனது இணையத்தளம் துவக்குவிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தமிழில் ஓரிரு இணையத்தளங்கள்தான் இருந்தன. இப்போது பல இணையத்தளங்கள் இயங்கி வருகின்றன.
அல்லாஹ்வின் அருளினால் எனது இணையத்தளத்தைப் பொறுத்தவரை 15 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் அதனை தினமும் தரிசித்து வருகிறார்கள். நான் எதிர் பார்த்ததைவிட கணிசமான தொகையினர் எனது இணையத்தளத்தின் மூலம் பயனடைகின்றமை திருப்தியளிக்கும் விடயம். இவற்றோடு எனது சில உரைகள் www.jamath-circle.com, www.tamilmuslimtube.magnify.net, www.youtube.com போன்ற இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
இணையதளத்தினூடாக மாத்திரம் தஃவாப் பணிகளை முன்னெடுத்துச் செல்வது போதுமானதல்ல. இப்போது நாம் எமது அடுத்த நகர்வாக செய்மதி மூலமாக தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் அது ஆரம்பிக்கப்படும். அதன் மூலம் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சமரசம்: இஸ்லாமிய வங்கியியலுக்கான சாத்தியக் கூறுகள் எவ்வாறு உள்ளன?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: இன்று உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை சகலரும அறிவர். இதற்கு மிக முக்கியமான காரணம் முதலாளித்துவத்தின் தோல்வியே. ஏலவே கம்யூனிஸ பொருளாதார சித்தாந்தம், சோசலிஸ பொருளாதாரக் கோட்பாடு தோல்வி கண்டு அதன் வரிசையில் முதலாளித்துவம் தோல்வியைத் தழுவியிருக்கிறது.
உண்மையில் இன்று சொத்துடமைகளின் மதிப்பு குறைவடைந்து வருகின்றமை, பங்குச் சந்தை சரிந்துள்ளமை, பணப் புழக்கம் முடக்கப்பட்டுள்ளமை, வங்கிக் கடன்கள் சுருட்டப்பட்டுள்ளமை என்பனவற்றினால் மக்களின் நுகர்வு சக்தி வெகுவாக குறைந்திருக்கின்றது. இதன் விளைவாக உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது.
இன்றைய பொருளாதாரச் சரிவுக்கு பிரதான காரணமாக முதலாளித்துவத்தின் தோல்வி இருந்தாலும், வட்டியை இலக்காக் கொண்ட முதலீடு பொருளாதாரச் சந்தையை சூதாட்டக் களமாக மாற்றிய முதலீடு, எல்லை மீறிய நிதி மோசடி போன்ற முப்பெரும் செயற்பாடுகளும் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன.
எனவே, இன்று முழு உலகமுமே மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை எதிர்பார்க்கிறது. அது இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கைதான் என்பதையும் உலகம் அங்கீகரிக்கத் துவங்கியிருக்கிறது. கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னால் இஸ்லாமிய நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இயங்க ஆரம்பித்தன. அல்லாஹ்வின் அருளினால் இப்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாதிக்கப்படாத ஒரு துறையாக இஸ்லாமிய நிதித்துறை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களும் இஸ்லாமிய வங்கிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் 12 டிரில்லியன் டொலர்கள் புழக்கத்தில் இருப்பதாக மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. எனவே, என்றுமில்லாத அளவுக்கு இஸ்லாமிய வங்கியியல் துறைக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கும் ஒரு கால கட்டமாக இதனைக் கருதலாம்.
இஸ்லாமிய நிதித் துறையில் முஸ்லிம்களைவிட முஸ்லிமல்லாதார் கூடிய கவனம் செலுத்தத் தவங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, இஸ்லாமிய வங்கியியல் துறை வளவாளர்களின் கணிசமான தொகையினர் முஸ்லிமல்லாதவர்கள். இஸ்லாமிய வங்கியியல் தொடர்பான பல நூல்களையும் எழுதியிருப்பவர்கள் முஸ்லிமல்லாதோர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
எனவே, இஸ்லாமிய வங்கித் துறைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்ற போதிலும் இஸ்லாமிய வங்கித் துறையில் ஆழமான அறிவும் புலமையும் பெற்ற வங்;கியாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். அகவே, இஸ்லாமிய இயக்கங்;கள் இஸ்லாமிய வங்கித் துறை வளவாளர்களை உருவாக்குவதில் கூடிய கரிசனை செலுத்துவது காலத்தின் தேவை.
சமரசம்: சமூகக் கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு நிறைவாக இருக்கின்றனவா?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: முஸ்லிம் சமூகப் புனர்நிர்மாணப் பணியில் பெண்களின் பங்கேற்பு திருப்திகரமானதாக இல்லை. முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் பார்வையாளர்களாக இருக்கிறார்களே தவிர பங்காளர்களாகவோ போராளிகளாகவோ இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய நிலை. உண்மையில் எந்தவொரு சமூகத்தினதும் சரிபாதியாக இரப்பவர்கள் பெண்கள். அவர்களுடைய பங்கேற்பு இல்லாத போது எந்தத் துறையும் முழுமை பெற்றதாக மாட்டாது.
எனவே, சமூக புனர்நிர்மாண சீர்திருத்தப் பணியில் பெண்களின் பங்கேற்பு போதியளவு இல்லாத காரணத்தினால் விளைவுகளும் அரைகுறையாகவே உள்ளன. எனவே, இன்றைய பெண்கள் ஆரம்ப கால பெண்களின் பங்களிப்பை மீட்டிப் பார்க்க வேண்டும். அன்னை ஹதீஜா (ரழி), அஸ்மா (ரழி), சுமையா (ரழி), உம்மு அமாறா (ரழி), ஆயிஷா (ரழி), ஹன்ஸா (ரழி) இவர்களுடைய பங்களிப்புக்கள் பற்றியும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கூட தஃவாப் பணிக்கு காத்திரமான பங்களிப்புத் தந்த ஸைனப் அல்கஸ்ஸாலி, மர்யம் ஜெமீலா, ஆமினா குதுப், ஹமீதா குதுப் போன்றோரின் வரலாற்றை இன்றைய பெண்கள் மீட்டிப் படிக்க வேண்டும்.
எனினும் அண்மைக் காலமாக பெண்களின் சமூகப் பங்கேற்பு அதிகரித்து வருவதை கவனிக்கின்றோம். பெண்கள் மார்க்கத்தின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் கொள்கையில் உறுதி மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவது இலகுவாக அமையும்;.
சமரசம்: நீங்கள் தஃவா நோக்கில் பல நாடுகளுக்குச் சென்றுள்ளீர்கள். அழைப்பியலுக்கான சூழல் எவ்வாறு உள்ளது?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: உலகின் எல்லா நாடுகளிலும் அழைப்பியலுக்கான ஆரோக்கியமான சூழல்; காணப்படுகின்றது. நிறைய வாய்ப்புககள் இருக்கின்றன. எனினும் பெரும்பாலான மக்களின் காதுகளுக்கு இஸ்லாத்தின் செய்தி இன்னும் கிடைக்கவில்லை.
நிச்சயமாக தட்டினால் திறக்கப்படும் நிலை காணப்படுகின்றது. ஆனால் நாங்களோ குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்hடிருக்கிறோம். ஏனெனில் அதிகமான மனிதர்கள் இஸ்லாத்தின் செய்தியைக் கேட்டு அதன் பால் கவரப்படுகின்ற நிலை பரவலாகவே காணப்படுகின்றது. ஓரிரு உரைகளைக் கேட்டு இஸ்லாத்தின் உண்மை நிலையை உணர்ந்து சத்தியத்தை ஏற்றுக் கொண்ட எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.
எனவே இஸ்லாமிய இயக்கங்களின் கவனம் களத்தை நோக்கி திரும்ப வேண்டிய தேவை இருக்கின்றது. 2001 செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பின்னர் தஃவாவுக்கான சில இடர்பாடுகள் தோன்றியிருப்பதை மறுப்பதற்கில்லை. தாயிகளும் தஃவா நிறுவனங்களும் கெடுபிடிகளுக்குட்பட்டு வருகின்றனர். எனினும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் பின்பும் உலகளாவிய ரீதியில் குறிப்பாக, மேற்குலக நாடுகளில் இஸ்லாத்தைத் தழுவுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளன. அமெரிக்காவில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக Caire அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஜேர்மனியில் இஸ்லாத்தை ஏற்போரின் எண்ணிக்கை 200 இற்குப் பின் அதிகரித்து வருகின்றது. 2002-2006 இடைப்பட்ட மூன்று வருட காலப் பகுதிக்குள் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். அங்கு 2007ல் மட்டும் ஆயிரம் பேரும் 2008 இல் மாத்திரம் 1700 பேரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தஃவாவுக்கான களம் திறந்திருக்கின்றது. இஸ்லாத்தின் தூதை எத்தி வைப்பதுதான் எம்மீதுள்ள கடமையாகும்.
சமரசம்: பொதுவுடையை இயக்கங்கள் தங்களின் பரப்புரைக்காக இலக்கியங்களை பயன்படுத்திய அளவுக்கு இஸ்லாமிய இயக்கங்கள் இலக்கியத்தைப் பயன்படுத்தியதில்லையே ஏன்?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: உண்மையில் இது ஒரு குறையே. ஏனெனில் மக்கள் அறிவியல் நடையை விரும்புவது போலவே இலக்கிய நடையையும் ரசிக்கிறார்கள். கட்டுரை வடிவில் இஸ்லாத்தை முன்வைக்கின்ற போது ஏற்படக் கூடிய தாக்கத்தை விட கதை, கவிதை, உரைநடை போன்ற இலக்கிய வடிவங்களில் முன்வைக்கின்றபோது கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
அறிவியல் சார்ந்த ஆய்வுகள் ஒரு சாராரை கவர்வது போல மற்றும் சிலரை இலக்கியப் படைப்புக்கள் கவர்கின்றன. எனவே, இஸ்லாமிய இலக்கியங்கள் அதிகம் படைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதில் ஆர்வம் கொண்டவர்கள் இஸ்லாமிய உலகில் நிறையவே இருக்கிறார்கள். அத்தகைய ஆக்கங்களும் முற்றாக இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இதைவிட அதிகமாக இலக்கியத்தை இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு பயன் படுத்த வேண்டும். இந்த வகையில் இஸ்லாமிய போதனைகளை கருப்பொருளைக் கொண்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள், உரைநடைகள், காவியங்கள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமான ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன். இன்று இஸ்லாமிய இலக்கியங்கள் குறைவாக இருந்த போதிலும் முஸ்லிம் இலக்கியங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. பலர் பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய இலக்கியத்தையும் முஸ்லிம் இலக்கியத்தையும் பிரித்தறியத் தவறி விடுகின்றனர். முஸ்லிம் கலைஞர்களால் படைக்கப்படும் இலக்கியங்கள் முஸ்லிம் இலக்கியம் எனும் வட்டத்திற்குள் வரும். ஆனால் அவை இஸ்லாமிய இலக்கியங்களாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அவை இஸ்லாமிய வரையறைகளைப் பேணுகின்ற போதுதான் இஸ்லாமிய இலக்கியமாகக் கருதப்படும்.
வாஸ்தவத்தில் முஸ்லிம் இலக்கியவாதிகள் கணிசமான தொகையினர் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் படைப்புகள் அனைத்தையும் இஸ்லாமிய இலக்கியமாக நோக்க முடியாமல் இருக்கின்றது.
ஆனால் ஈரானிய சினிமா சற்று வித்தியாசமானது. சில கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் ஈரானிய சினிமா சகலரும் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. அது முஸ்லிம் கலைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரி என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. Runner, The children of Heaven, The color of Paradise போன்ற ஈரானியத் திரைப்படங்களை இங்கு சிறப்பித்துக் கூற முடியும்.
சமரசம்: நபி வரலாறு, நபித் தோழர்கள் வரலாறு முதலிய இஸ்லாமிய உரலாறுகளை காட்சி ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வதில் நமக்குள்ள இடையூறுகள் என்ன?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: இது நல்ல ஒரு கேள்வி. நம் மத்தியில்; நிறைய அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர்கள் குறைவு. அதிலும் இஸ்லாமிய கலைஞர்கள் மிகவும் அரிது. முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் எண்ணற்ற கலைஞர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி இலக்கியம் படைத்தார்கள் என்பது கேள்விக்குறியே.
எமது வரலாற்று நாயகர்களை முன்னுதாரண புருஷர்களாக காட்சிப் படுத்துவதில் இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று இயல், இசை, நாடகம் என்பன மார்க்கக் கண்ணோட்டத்தில் ஹராம் என்ற கருத்து. இக்கருத்தையுடைய இஸ்லாமிய அறிஞர்கள் வரலாறு நெடுகிலும் இருந்து வந்திருக்கிறார்கள். இப்போதும் இருந்து வருகிறார்கள். மற்றயது நிபந்தனைகள், வரையறைகளுடன் இவற்றை அனுமதிக்கலாம் என்ற கருத்தையுடையவர்களும் வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளனர். நாம் இரண்டாவது கருத்தையே சரி காண்கிறோம்.
சினிமா, தொடர் நாடகம் போன்ற காட்சிப் படுத்தல் ஊடகங்;களின் மூலம் இஸ்லாத்தின் போதனைகளை வரலாற்று நாயகர்களை காட்சிப் படுத்தி உலகுக்கு அறிமுகப்படுத்தலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களை காட்சிப் படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் பலமான நிலைப்பாடு. ஏனைய பிற்பட்ட கால இமாம்களை, அறிஞர்களை, ஸலபுகளைக் காட்சிப்படுத்துவதில் தவறிருக்காது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் நிலைப்பாடு.
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய இமாம்களின் வாழ்க்கை வரலாறு படமாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதில் இமாம் ஸஈத் இப்னு முஸய்யப், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் இப்னு தைமிய்யா, இமாம் இப்னுல் கையிம், ஸாலிம் பின் அப்தில்லா பின் உமர், ஹப்ஸ் இப்னு ஹியாஸ், இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி, இமாம் புகாரி போன்ற வரலாற்றுப் புருஷர்களின் வாழ்க்கை வரலாறு அற்புதமாக எடுத்துக் காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமரசம்: இலக்கை நோக்கிய தங்களது பயணத்தில் தடைக் கற்கள், இடையூறுகள், ஏதேனும்...?
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்: தஃவாவின் பாதையில் பிரச்சினைகள் தடைக்கற்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. தஃவாவின் பாதையில் செல்கின்றவர்கள் செங்கம்பளம் விரிக்கப்பட்டு மலர் மாலை சூடப்பட்டு வரவேற்கப்பட வேண்டும் என எதிர்பார்த்தால் அது தஃவாவின் பாதையாக அமையாது. தஃவாவின் பாதை என்பது நபிமார்கள், றஸூல் மார்கள், அவர்களின் வழிவந்தவர்கள் சென்ற பாதை. இந்தப் பாதையின் தன்மையே சோதனைகள் தான். இதில் பல் வேறுபட்ட சோதனைகளுக்கு முகம் கொடுத்தே ஆக வேண்டும்.
"(விசுவாசங் கொண்டோரே!) உங்களுக்கு முன் சென்று விட்டார்களே அத்தகையோரின் உதாரணம் (சோதனை நிறைந்த நிலைகள்) உங்களுக்கு வராத நிலையில் நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? அவர்களை வறுமையும், பிணியும் பீடித்தன. தூதரும் அவருடன் விசுவாசங் கொண்டவர்களும், அல்லாஹ்வுடைய உதவி எப்போது (வரும்) என்று கூறும் வரை அவர்கள் (இன்னல்கள் பலவற்றால்) அலைக் கழிக்கப்பட்டு விட்டார்கள். தெரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக சமீபத்தில் உள்ளது. (என்று கூறப்பட்டது)"
எனவே, இப்பாதையின் தன்மையின் காரணமாக நாமும் அவ்வப்போத பல்வேறு சவால்களுக்கும் சோதனைகளுக்கும் முகம் கொடுத்திருக்கிறோம். நாம் அல்லாஹ்வின் பாதையில், தஃவாவின் பாதையில் இருக்கின்றோம் என்பதற்கு அதுதான் அடையாளம். எனவே, இடர்பாடுகள், தடைகளையெல்லாம் வெற்றி கரமாகக் கடந்து இறுதிவரை இப்பாதையில் நிலைத்திருப்பதற்கு எனக்கும் உங்களுக்கும் சகலருக்கும் அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்ற பிரார்;த்திக்கிறேன்.
-ஜெம்ஸித் அஸீஸ்-
குறிப்பு : அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி) பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு இணையதளத்தில் 'ஷெய்க் அகார் பற்றி' பகுதியில் பார்வையிடவும்.
