முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடுகளில் கூட இல்லாத வசதிகளை இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர்.
Last Updated (Thursday, 16 July 2009 14:46) Thursday, 16 July 2009 14:33
'முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடுகளில் கூட இல்லாத வசதிகளை இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர். எமது இளம் தலைமுறையினரை சரியான இஸ்லாமியப் பாதையில் நெறிப்படுத்துவதற்கான எல்லா வளங்களையும் களங்களையும் நாம் நிறைவாகப் பெற்றிருக்கின்றோம். இந்த நாட்டில் - 850 முஸ்லிம் பாடசாலைகள் - 2500 மஸ்ஜித்கள் - 200இற்கும் மேற்பட்ட அறபுக்கலாசாலைகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஹிப்ளு மத்ரஸாக்கள் - 1500 குர்ஆன் மத்ரஸாக்கள் - 450 அகதியாப் பாடசாலைகள் என நிறைய நிறுவனங்கள் நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றன.
இவ்வாறு ஜாமிஆ நளீமிய்யா கலாபீட பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தலைமையில் கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூhயில் அண்மையில் நடைபெற்ற அஙதிய்யா, தீனிய்யா பாடசாலைகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.'
அவர் மேலும் அங்கு உரை நிகழ்த்துகையில், முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு திணைக்களம் இயங்கிக் கொண்டிருகின்றது. நாளாந்தம் பல மணி நேரம் முஸ்லிம் நிகழ்ச்சிக்காக வானொலியில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று தொலைக்காட்சியிலும் நேரம் ஒதுக்கித்தரப்பட்டிருக்கிறது.
இது தவிர 1940 ஆம் ஆண்டிலிருந்தே மௌலவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இந்த நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடம் போதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மௌலவி ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். பாடசாலைகளில் முதலாம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம் வரைக்கும் இஸ்லாம் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகின்றது. அரபு மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. பல நாடுகளில் இப்படியான வாய்ப்புக்களே இல்லை.
பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பை இஸ்லாமியத் துறையிலே மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இந்த நாட்டிலே இருக்கின்றன. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற அரபு இஸ்லாமிய நாகரீகத் துறையானது மிகப் பழைய துறைகளில் ஒன்று என்பது கூட குறிப்பிடத்தக்கது.
இப்போது இஸ்லாமியத் துறையில் பட்டப் பின்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கூட இந்த நாட்டில் இருக்கின்றது. வளைகுடா நாடுகள் பலவற்றில் இஸ்லாமிய துறையில் மேற்படிப்புக்கான வாய்ப்புகள் இல்லை.
இப்போது முஸ்லிம்களுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இருக்கின்றது. அது ஒரு தேசிய பல்கலைக்கழகமாக இருந்தாலும் பெரும்பான்மையான முஸ்லிம் மாணவ, மாணவிகளே கற்று வருகிறார்கள். அங்கு அறபு, இஸ்லாமிய கற்கை நெறிக்கான ஒரு கலாபீடம் கூட தற்போது இயங்கி வருகின்றது.
ஐந்து தசாப்த்த காலமாக இயங்கி வருகின்ற அகதிய்யாப் படசாலைகளுக்கு அரச அங்கீகாரம் இரைவனுடைய அருளினால் இப்போது கிடைத்திருக்கின்றது. கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக இந்த நாட்டிலே முஸ்லிம் தனியார் சட்டம் நடைமுறையிலிருந்து வருகின்றது. ஒரு வக்பு சபை உத்தியோகபூர்வமாக இயங்கி வருகின்றது. எத்தனையோ இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. இவையெல்லாம் இந்த நாட்டிலே வாழுகின்ற எட்டு வீத முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பு, வசதிகளாகும்.
அகதிய்யா எமது சிறார்களுக்கு சரியான இஸ்லாமிய திசை திருப்பலை மேற்கொண்டு வருகின்ற ஒரு பேரியக்கமாக மாறி வருகின்றது. 5000இற்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை செய்து வருகின்றனர். இலவசமாகவும் தியாகத்தோடும் இவர்கள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அகதிய்யாக்களின் வளர்ச்சிக்கு இது வொரு ஆரோக்கியமான நிகழ்வாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த சமுதாயமொன்று கட்டியெழுப்பபடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்றார்.
