ஹராத்தைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும்
Last Updated (Tuesday, 30 November 1999 00:00) Friday, 06 February 2009 18:32
ஹலால் ஹராம் சட்டவிதிகள் - 09
இஸ்லாம் ஹராத்திற்கு இட்டுச் செல்லும் வழிகள் அனைத்தையும் தடைசெய்வது போன்றே ஹராத்தைச் செய்வதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தந்திரமான வழிமுறைகளைக் கையாள்வதையும் தடை செய்துள்ளது. பனூ இஸ்ரவேலர்கள் அல்லாஹ் அவர்கள் மீது ஹராமாக்கியிருந்த சில விஷயங்களை தந்திரமான வழிகளைக் கையாண்டு ஹலாலாக்கிக் கொண்டதை இஸ்லாம் கண்டித்தது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யஹூதிகள் புரிந்த குற்றச் செயல்களை நீங்கள் செய்யாதீர்கள். அவர்கள் மிக அற்பமான தந்திர வழிகளைக் கையாண்டு அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலாலாக்கிக் கொண்டார்கள்.'
(இகாஸதுல் லஹ்பான்)
அல்லாஹ் யஹூதிகளுக்கு சனிக்கிழமை மீன் பிடிப்பதைத் தடை செய்தான். ஆனால் அவர்கள் தந்திரமான முறையில் இத்தடையை மீறினார்கள். வெள்ளிக்கிழமை குழிகளை வெட்டி சனிக்கிழமை அதில் மீன்கள் விழ வழிசெய்தார்கள். பின்னர் ஞாயிற்றுக்கிழமை போய் அவற்றைப் பிடித்து வந்தார்கள். இவ்வாறு ஒரு ஹராமாக்கப்பட்ட விடயத்தை தந்திரமான வழிகளைக் கையாண்டு செய்வதும் இஸ்லாமிய நோக்கில் ஹராமாகவே கொள்ளப்படும்.
ஹராமாக்கப்பட்ட ஒரு பொருளை வேறு பெயரால் குறிப்பிட்டு அதனை ஹலாலாக்க முயல்வது, ஒன்றின் உண்மை நிலை அப்படியே இருக்க அதன் வெளித் தோற்றத்தை மாற்றி ஹராமான ஒன்றை ஹலாலாக்க முயல்வது அனைத்தும் பாவமான ஹராமான தந்திர வழிகளாகும். பொருள் மாறாதிருக்க பெயரை மாற்றுவதிலோ, உண்மை நிலை அப்படியே இருக்க உருவத்தை மாற்றுவதிலோ எத்தகைய அர்த்தமும் இல்லை. அதனால் ஹராம் என்ற நிலை மாறப்போவதுமில்லை.
வட்டிக்கும் மதுபானத்திற்கும் வேறு பெயர்களைச் சூட்டுவதால் வட்டியினாலும் மதுபானத்தினாலும் கிடைக்கும் பாவம் நீங்கப் போவதில்லை.
'எனது சமூகத்தில் ஒரு பிரிவினர் மதுவை ஆகுமாக்கிக் கொள்வார்கள்ளூ அதற்கு வேறு பெயரிட்டு அழைப்பார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
இன்று ஆபாச நடனத்தைக் கலை என்றும் மதுபானத்தை ஆன்மீகப் பானம் என்றும் வட்டியை பயன்பாடு என்றும் வௌ;வேறு நாகரிக பெயர்கள் கொண்டு அழைப்பதன் மூலம் அவற்றை ஹலாலாக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் நாம் இதுவரை விளக்கிய சட்டவிதிக்கு நல்ல உதாரணங்களாகும்.
